

சரியாக மாலை ஐந்தானால் போதும் அம்மா கூப்பிடுவாள்....
"டேய் சிவா என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போடா என்பாள்''..
அப்பா தவறிப் போய் ஏழு வருடங்கள் ஆகி விட்டது.. அன்றிலிருந்து தினம் கோவிலுக்கு அழைத்துப் போ என்பார்.. ஆனால் ஒரு நாள் கூட கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ததில்லை.. அங்குள்ள படிக்கட்டில் மகனின் கையைப் பிடித்தபடிஏறி உட்கார்ந்து கண்ணை மூடிக் கொள்வார்.. ஒரு மணிநேரம் கழித்து வீட்டுக்கு போகலாம் என்பார்..
இது வரை சிவாவும் ஏன் எதற்கு என்று எதுவுமே கேட்டதில்லை... அம்மா பாவம்.. நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பாவும் அம்மாவும் வெளியே சென்று பார்த்ததில்லை.. சமையல் சாப்பாடு என்று சமையலறையில் முழு நேரம் இருப்பாள்.. ஹாலில் ஓரமாக பாயில் இரவு தூங்குவாள்.. சிவாவிற்கு கல்யாணம் ஆன பிறகு வெளியே செல்லும் போது அம்மாவையும் வற்புறுத்தி கூட்டிச் செல்வான்..
அப்பா காலமான பிறகு தினமும் கோவில் சென்று படிக்கட்டில் உட்கார வேண்டும் என்று நாள் தவறாமல் சொல்வாள்.. தன்னால் போக முடியாத சூழல் வந்தால் மனைவியை கூட்டிப் போகச் சொல்வான் சிவா..
சில நாட்கள் போக முடியாமல் போகும்.. அப்போதெல்லாம் பித்துப் பிடித்தால் போல் உட்கார்ந்து இருப்பாள் அம்மா..
போகலாமா என்று கேட்ட அம்மாவிடம், "அம்மா நீயோ கோவிலுக்குள் போறதில்லை.. அப்புறம் எதுக்குமா படிக்கட்டில உட்காரணும்னு சொல்றே.. உனக்கும் வயசாகிறது.. வேண்டாம் மா.." சொன்ன சிவாவின் கையைப் பிடித்து, "சிவா.. ஒரு வாரமா நீ என்னை கூட்டிட்டு போகலை.. அப்பாவைப் பார்க்கணும்.. கூட்டிட்டு போ" என்றதும் பயந்த சிவா, "என்னம்மா.. அப்பா வா.????. என்ன சொல்றே" என்று அதிர்ச்சி ஆகி விட்டான்..
ஆமாண்டா.. அப்பா சாகறதுக்கு இரண்டு மாசம் முன்னாடி என்னை அந்த கோவிலுக்கு கூட்டிட்டு போய் படிக்கட்டில உட்கார்ந்து என் தலையை கோதி, "லஷ்மி.. உன்னோட சின்ன சின்ன ஆசையை கூட நான் புரிஞ்சுக்கலை.... எங்கேயுமே உன்னை கூட்டிட்டு போனதில்லை.... எனக்கு வயசான காலத்தில தான் உன் அருமை புரியுது.."அப்படின்னு சொல்லி என் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு மணிக்கணக்கா என்னோட இத்தனை வருஷமா பேசாத எல்லாத்தையும் பேசினார்..
அந்த இரண்டு மணி நேரம் அவரோட அன்பு பாசம் எல்லாத்தையும் நான் புரிந்து கொண்டேன்.. அப்புறம் ஒரு வாரத்தில போய் சேர்ந்துட்டார்.. ஆனால் தினமும் நான் படிக்கட்டில் உட்காரும் போது அப்பா என் கையை பிடிச்சிண்டு பேசறது போல இருக்கு சிவா...
அதுக்குத் தான் கூட்டிட்டு போன்னு சொல்றேன்.. வா.. போகலாம்" என்று தன் கையைப்பிடித்து இழுத்த அம்மாவை பார்த்த சிவாவின் கண்களில் இருந்து கொட்டிய கண்ணீர் அம்மாவின் கைகளை நனைத்தது
******************************
சிந்துவின் மனது முழுக்க தன் ஊர் நினைவு நிரம்பியதாகவே இருந்தது.. சொந்த வீட்டில் வாழ்ந்த நினைவுகள் பசுமையாக வந்து வந்து போனது.. பின்னோக்கி போன நினைவுகளுடன் பயணித்த போது நடந்த சில கசப்பான அனுபவங்கள் மனதை அழுத்தியது..
சிந்துவிற்கு திருமணம் நிச்சயம் செய்தவுடன் அம்மா தன்னந்தனியே தவித்த தவிப்பு.. அப்பப்பா... சின்ன வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த சிந்துவிற்கு அம்மா தான் உலகமே....
அப்பாவின் பூர்வீக வீடு தவிர எந்த சொத்தும் இல்லாமல் அம்மா சமையல் வேலை செய்து தான் சிந்துவை படிக்க வைத்தாள்.. திருமணம் நிச்சயம் செய்தவுடன் செலவுகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பூர்வீக வீட்டை விற்க வேண்டிய நிலை வந்தது... வீட்டை விற்று சிந்து கல்யாணத்தை நல்லபடி நடத்தி விட்டு உள்ளூரில் இருக்கும் தன் தம்பியுடன் இருப்பதாக அம்மா முடிவெடுத்து விட்டாள்..
வீட்டை விற்று கல்யாணம் பண்ணனுமா வேண்டாமே என்று ஒற்றைக்காலில் சிந்து நின்றாலும் வேறு வழி இல்லை என்று நிலைக்கு தள்ளப்பட்டாள்.. மாமா உதவியுடன் வீட்டை விற்று கல்யாணம் முடிந்து கணவருடன் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன் வீட்டை வாங்கிய குடும்பத்தை பார்க்கச் சென்றாள் சிந்து..
பேசி முடித்து கிளம்பும் போது தான், தான் ஸ்கூலுக்கு போன சைக்கிள் நின்று கொண்டு இருந்ததை பார்த்தாள்.. கிராமத்தில் இடம் இடமாக சைக்கிளிலில் சுற்றிய இடங்களை சைக்கிள் நினைவு படுத்தியது.
மாமா வீட்டில் உபயோகப்படுத்த இயலாத நிலையில் விட்டு விட்டு போவதாக முடிவு செய்து அந்த வீட்டில் இருப்பவர்களிடம் அந்த சைக்கிளை உபயோகப்படுத்தி நன்றாக வைத்துக் கொள்ளும் படியும் கூறி விட்டு சென்றாள் சிந்து...
இதோ பல வருடங்கள் கழித்து சொந்த ஊர் வந்ததும் அம்மா மாமாவைப் பார்த்து விட்டு உடனே தான் வளர்ந்த வீட்டுக்கு சென்றாள் சிந்து... வரவேற்ற வீட்டினர்.
"இந்த வீடு ரொம்ப ராசியானதுமா.. இங்க வந்து என் பொண்ணு பையன் இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிட்டோம்.. பிரசவத்திற்கு பெண்ணை அழைத்து வர இருக்கிறோம்.." என்று கூற.. "எனக்கு ஒரே ஒரு உதவி செய்ய முடியுமா?" என்று கேட்ட சிந்துவிடம், "மறுபடி இந்த வீட்டை வாங்கற நினைப்பில் வந்திருக்கீங்களா? அப்படி எண்ணம் இருந்தால் எங்களுக்கு ஒரு வருஷம் டைம் கொடுங்க.. பெண் பிரசவம் முடிந்து தான் யோசிக்கணும்" என்று கேட்டவர்களிடம்.., அப்படி ஒரு எண்ணம் இருப்பது உண்மை தான்..
இந்த பூர்வீக வீட்டை மறுபடி மீட்டெடுத்து அம்மாவின் கையில் கொடுக்க ஆசை தான்.. எத்தனை பேர் வந்து தங்கி சாப்பிட்ட வீடு.. இது வீடு அல்ல கோவில் தான் என்னைப் பொறுத்தவரை.
ஒரு வருடம் தாராளமாக இருங்கள்... ஆனால் என் சைக்கிளை மட்டும் நான் எடுத்து செல்லவா? அதை நான் எப்படி எடுத்து செல்வேன் என்பது கூட தெரியவில்லை.. ஆனால் எனக்கு வேண்டும்... அது சொல்லும் நினைவுகள் ஏனோ இந்த வீட்டில் நான் இருப்பது போல் உணர்வு தருகிறது.. வருகிறேன்" என்று சைக்கிளைத் தொட்ட சிந்துவின் கைகள் நெருக்கத்துடன் சொன்னது பல பசுமையான நினைவுகளை.