

கண்ணன் - நிர்மலா கல்யாணம் முடிந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன. அவர்களுக்கு ஒரே பெண் குழந்தை. கண்ணன் ஒரு சக்தி உபாசகர். எனவே, தனது பெண்ணுக்கு திரிபுரசுந்தரி என்று பெயர் வைத்தார். வீட்டில் செல்லமாக சுந்தரி என்று கூப்பிடுவார்கள்.
கண்ணன் போரூரில் ஒரு வங்கியில் வேலை பார்த்துவந்தார். 10 மணிக்குத்தான் ஆபீஸ். தான் இருக்கும் விருகம்பாக்கதிலிருந்து பஸ்சில் 10 நிமிடங்கள் போதும்.
சுந்தரி பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பில் படித்துவந்தார். பள்ளி பேருந்து 8.30க்கு விருகம்பாக்கம் வரும். கண்ணன்தான் தினமும் சுந்தரியை பஸ் ஏற்றி விடுவார். மாலை 3.30க்கு நிர்மலா சுந்தரியை வீட்டிற்கு அழைத்து வருவார்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டது.
நாள் முழுவதும் கன மழைதான். சென்ற வாரம் முழுக்க மழையால் விடுமுறை. ஆனால் இன்று பள்ளி இருந்தது. கண்ணன் மஞ்சள் நிற ரெயின்கோட் போட்டுக்கொண்டு சுந்தரிக்கும் ரெயின்கோட் போட்டு விருகம்பாக்கம் வந்தார். நல்ல கனமழை.
பஸ் வந்தது. சுந்தரியை ஏற்றிவிட, கால் வழுக்கி கீழே விழுந்தார். “யேய்… யேய்...!” என்று கத்தினார். எல்லாம் ஒரு நொடிதான். பஸ் டிரைவர் பஸ்சை எடுக்க பஸ்சின் பின் சக்கரங்கள் சுந்தரி மீது ஏறி செல்ல…
“சுந்தரி…! சுந்தரி…!” எனக் கத்தினார்.
டிரைவருக்கு கனமழையால் காது கேட்கவில்லை.
சுந்தரி ரத்த வெள்ளத்தில் மூழ்கினார்.
“சுந்தரி... சுந்தரி…! “ என்று கத்திக்கொண்டே கண்ணன் பஸ் ஸ்டாபில் மயங்கி விழுந்தார்.
108 வந்தது. இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
டாக்டர்கள் “சுந்தரி ஏற்கனவே இறந்துவிட்டார்” எனச் சொன்னார்கள். கண்ணன் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார்.
விஷயம் அறிந்த நிர்மலா அழுதுகொண்டே ஆட்டோவில் மருத்துவமனைக்குச் சென்றார். சுந்தரி இறந்த செய்தி கேட்டதும் பரிதவித்துவிட்டார். கண்ணனை ஐ.சி.யூ.வில் சென்று பார்த்தார்.
மயக்கம் போகவில்லை. சுந்தரி உடலை மருத்துவமனை ஐஸ் ரூமில் வைத்தனர்.
கண்ணன் 2 நாட்கள் ஆகியும் எழுந்திருக்கவில்லை.
நிர்மலா குடும்பம் வந்தது. மூன்றாவது நாள் கண்ணன்.. சுயநினைவு திரும்ப… இல்லை. கண் விழித்தார். ஆனால் பேசவில்லை. ஜடமாகிவிட்டார். கண்கள் மட்டுமே திறந்து பார்த்தார். அவர் பேசும் சக்தியை முழுக்க முழுக்க இழந்தார்.
நிர்மலாவுக்கு கருணை அடிப்படையில் கண்ணன் வேலை கிடைத்தது. கண்ணன் சில நாள் சாப்பிடுவார். சில நாட்கள் பட்டினி. நிர்மலா இந்த மூன்று வருடங்களாக கண்ணனை கூப்பிட்டுச் செல்லாத டாக்டர் மற்றும் மருத்துவமனை இல்லை. கண்ணன் பேசவில்லை.
யாரவது சுந்தரி என்றால் அவரைப் பார்த்தார். சுந்தரி போட்டோ காண்பித்தாலும் பேசவில்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே வந்தது.
எப்போது மழை அடித்தாலும் மஞ்சள் நிற ரெயின்கோட்தான் போட்டுக்கொண்டு வருவது வாடிக்கை ஆகிவிட்டது.
சில ஆண்டுகள் கழித்து…
ஒரு நாள் இரவு கண்ணன் கனவு கண்டார். கனவில் சுந்தரியை மழைக்காலத்தில் பஸ் ஸ்டாப் கூட்டிச் சென்றதும் அங்கு சுந்தரி ஆக்சிடென்ட் ஆனதும், ரத்த வெள்ளத்தில் துடித்ததும் கனவில் பார்த்தார்.
“சுந்தரி…!”
“சுந்தரி..!!”
என்று பலமாக கத்தினார்.
நிர்மலா விழித்துக்கொண்டு அவரை ஆறுதலுடன் அணைத்தார்.
“என் சுந்தரி…! என்னுடைய சுந்தரி… !”
கண்ணன் நன்கு பேசினார் இப்போது ஜடமல்ல...
அப்பா மகள் பாசம் மிகப் பெரியது…!