

மாலையில் அம்மா போன் மூலம் சொன்ன அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியாகவும், பதட்டமாகவும் இருந்தது ராதாவிற்கு. சேகர் அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்தாலாவது தன் மனதில் உள்ளதை கொட்டி விடலாம் என்று எதிர்பார்ப்போடு காத்திருந்தாள்.
சேகர் வந்ததும், சாப்பிட்டு முடித்து தன் பெற்றோருடன் சிறிது நேரம் பேசிய பிறகு தங்கள் அறைக்கு வரும் பொழுது, ராதா குழந்தையை தூங்க வைத்துக் கொண்டு இருந்தாள்.
"என்னம்மா... பாப்புக்குட்டி தூங்கி விட்டாளா?" என்றதும்... "ம்ம்..." என்று சொல்லிவிட்டு,
"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணுங்க. அம்மா சாயந்திரம் போன் பண்ணுனாங்க. என் அண்ணாவோட கல்யாண விஷயத்தைப் பத்தி சொன்னதும் ரொம்ப அதிர்ச்சியா இருந்ததுங்க.."
"புரியும் படியா சொல்லு ராதா... உன் அண்ணாவிற்கு கல்யாணம்னா நல்ல விஷயம் தானே. அதிர்ச்சி அடைய என்ன இருக்கு?"
"அண்ணா மேல்படிப்புக்கு அமெரிக்கா போனப்பவே , அவன் கூட படித்த அந்த ஊர் பெண் ரோசியோடு பழகியதால், இப்போ அவளையே கல்யாணம் செய்து கொள்ள முடிவும் செய்து இருக்கான். அதை அப்பா, அம்மாவிடம் சொல்லி சம்மதத்தையும் கேட்டு இருக்கான்."
"அட.. கார்த்தியா?... எனக்கும் ஆச்சரியமா தான் இருக்கு"
"ஐந்து வருடமாக பழகி இருக்கிறார்கள். என் கல்யாணம் முடியட்டும் என காத்திருந்து இப்போ இதைப்பற்றி அண்ணா கூறி இருக்கிறான். உடனே, என் அம்மா சம்பந்தி வீட்டில் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என வருத்தப்பட்டு எனக்கு போன் செய்தார்கள்."
"நம் வீட்டில் எப்படி எடுத்துக் கொண்டாலென்ன... உன் பெற்றோருக்கு பிடித்து இருந்தால் சம்மதம் சொல்லச்சொல்லுமா," என்று தூங்கப் போய் விட, ராதாவுக்கு மட்டும் மனதில் பல குழப்பங்கள் வந்து கொண்டே இருந்தது.
மாமியார், அவ்வப்பொழுது உறவுகளின் நடவடிக்கைகளில் குற்றம் பார்த்து குறை சொல்பவர். நம் அண்ணாவையும், பெற்றோரையும் ஏதேனும் சொல்லி விடுவார்களோ என்ற கவலை வேறு சேர்ந்து கொண்டது.
காலையில் சேகர் அலுவலகம் கிளம்பும்போது, "நானே முதலில் அண்ணாவைப் பற்றி அத்தை, மாமாவிடம் சொல்லி விடுகிறேன். அப்புறம் என் பெற்றோர்கள் வந்து சொல்லட்டும்," என்றாள் ராதா.
"சரி, உன் இஷ்டம் ராதா" எனக் கூறினான் சேகர்.
காலையில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வரும்போது, மாமா செய்தித்தாளை படித்துக்கொண்டும், அத்தை வார இதழை படித்துக் கொண்டும் இருந்தனர்.
"வாம்மா.. பாப்பா தூங்கிட்டாளா?" எனக் கேட்க,
"ஆமாம் மாமா தூங்கிட்டா. உங்ககிட்டே ஒண்ணு சொல்லணும்..." என்றபடியே அம்மா நேற்று போனில் சொன்ன விஷயம் அனைத்தையும் சொன்னாள்.
இருவருக்கும் முதலில் ஆச்சரியமாக இருக்கவே, "நம்ம கார்த்தித் தம்பியா... இப்படி..." என்றனர்.
உடனே அத்தை, "போதுமே.. நம்ம உறவுகள் உடனே... உங்க சம்பந்திக்கு மேல்நாட்டு மருமகளான்னு என்னை கேட்டு கேலி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்" என்று புலம்ப,
"அப்படியாராவது சொன்ன, உங்களுக்கும் பத்திரிக்கை வைக்கிறோம். நீங்களும் வாங்க. இன்னும் பேசறத்துக்கு நிறைய விஷயம் கிடைக்குன்னு சொல்லு..."
"இல்ல... நம்ம உறவுகள்ளே இப்படி ஏதும் நடக்கலையா... அதான் யோசிச்சேன்..."
"இதோ பார் சாரதா, நம் சம்பந்தியே முழுமனதோடு சம்மதிக்கும் போது, நாமும் அவர்களோடு சேர்ந்து மனதார வாழ்த்த வேண்டும். அதை விட்டு யார் என்ன சொல்வார்கள் என எண்ணிக் கொண்டு இருக்கக்கூடாது. தெளிவான குளத்தில் கல்லை போட்டதும், முதலில் நீர் கலங்கும். பிறகு தெளிந்து விடும். அதுபோல எவ்வளவு நாள் தான் இதைப்பற்றியே பேசுவார்கள்," என்றதோடு,
"ராதா உங்கள் வீட்டுக்கு போன் செய்து சந்தோஷமா வரச்சொல்லுமா," என்று மாமனார் சொன்னதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள் ராதா.
மாலையில் வந்த தன் பெற்றோர்களை, அன்போடு வரவேற்றதோடு, "சம்பந்தி..கல்யாணத்தை நல்லா சிறப்பா நடத்திடலான்னு கார்த்திக் தம்பிகிட்டே சொல்லிருங்க," என்று மாமியார் கூறியதைக் கேட்டு, தன் பெற்றோர் மகிழ்வதைப் பார்த்து, ரசித்தாள் ராதா.