

போரிடுவதில் வல்லவராக விளங்கிய அக்பர் போர்வீரர்களின் நலன்கள் பற்றியும் அதிக அக்கறை கொண்டவர். எதிரிகளின் வாளால் காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று போர் வீரர்களை பாதுகாப்பு கவசம் அணிந்தே போரிட வேண்டும் என்று உணர்த்திய வண்ணம் இருப்பார். கவசம் தயாரிக்க ஒரு கொல்லன் ஒருவனை அழைத்து தன்னுடைய எண்ணத்தை அவனிடம் கூறலானார். அவனும் அக்பரின் எண்ணப்படி நுட்பமான முறையில் கவசம் ஒன்றை தயாரித்து வந்து அக்பரிடம் காட்டினான்.
அதைப் பரிசோதனை செய்ய எண்ணி மரத்தினாலான ஒரு மனித பொம்மைக்கு அணிவித்து தன் வீரர்களிடம் அவர்கள் பலம் அனைத்தையும் காட்ட ஆணையிட்டார். வீரர்கள் தங்கள் அனைத்து திறமைகைகளைக் கொண்டு கவசம் அணிந்த பொம்மையைப் தாக்கினர். கடுமையான தாக்குதலுக்கு கவசத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.
எனவே கொல்லனை அழைத்து, "நீ தயாரித்த கவசம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் வாளின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்கவில்லை. இன்னும் சிறப்பான முறையில் கவசம் தயாரித்து கொண்டுவா. இல்லையேல் தண்டனைக்கு உள்ளாவாய்" என்றார் அக்பர்.
இதைக் கேட்டதும் கொல்லன் பயந்து நடுங்கினான். இதைவிட கனமாக தயாரித்தால் வீரர்கள் அதை அணிந்து போரிட முடியாதே. இதை சக்கரவர்த்திக்கு எப்படி விளக்குவது என எண்ணி பீர்பாலை சந்தித்து தன் எண்ணத்தைக் கூறினான்.
போர்வீரன் அணியும் கவசம் பாதுகாப்பிற்கும் தானே தவிர வாள் கொண்டு தாக்கினால் எந்த கவசமும் தாங்காது என்பதை எடுத்துரைத்தான். பீர்பால் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். மேலும் கொல்லனிடம் சில விஷயங்களைப் செய்யச் சொன்னார். அக்பரின் கட்டளைப்படி தன் அனுபவத்தைக் கொண்டு ஒரு கவசம் தயார்செய்து அக்பரைக் காணச் சென்றான் கொல்லன்.
அக்பரிடம் அவன் "சக்ரவர்த்தி அவர்களே இந்தமுறை மரப்பொம்மைக்கு அணிவிக்க வேண்டாம் நானே அணிகிறேன். வீரர்கள் வாளால் என்னை தாக்கட்டும்" என்றான். அக்பரும் ஒப்புக் கொண்டார்; கவசத்தை அணிந்தான் கொல்லன். வீரர்கள் அவனைத் தாக்க வாளுடன் வரவும் கொல்லனும் போரிடுவது போன்று பாவனை காட்டியும் கால்களை முன்னும் பின்னும் வைத்து பெருங்குரல் கொடுத்து புரியாத மொழியில் எதையோ கூறியும் தாக்க முனைந்த வீரர்களை நிலைகுலையச் செய்து விட்டான். வாளை ஓங்கிய வீரர்கள் திக்பிரமையுடன் நின்று விட்டனர்.
இதைக்கண்ட அக்பர் ஆச்சர்யப்பட்டார். தாக்க வந்தவர்களை நிலைகுலைந்து செய்து விட்டானே இது என்ன போர் முறை என்று எண்ணியவராக அவன் செயல் குறித்து விளக்கம் கேட்டார்.
"சக்கரவர்த்தி அவர்களே..! கவசம் அணிவது என்பது தற்காப்புக்காகத்தானே தவிர வேறு எதற்கும் அல்ல. வீரர்கள் சிலர் சேர்ந்து கவசம் அணிந்தவரை தாக்க வரும் போது நான் செய்து காட்டிய முறையைப் பின்பற்றினால் தாக்க வருபவர்கள் மிரண்டு போய்விடுவர்கள்" என்று கூறி, கால்களை முன்னும் பின்னும் வைத்து புரியாத மொழியில் கத்தி அக்பரை திகைப்படையச் செய்தான்.
அக்பர் கொல்லனைத் தனியாக அழைத்து, "இந்த முறையை கற்றுத் தந்தது யார் என்ற உண்மையைச் சொல்" என்றார்.
உடனே கொல்லன், "கவசத்தை கவனமாக தயாரிக்கக் கூறிய உங்கள் கட்டளையை அமைச்சர் பீர்பாலிடம் கூறினேன். அவரே இந்த வழி செல்லி என்னை காப்பாற்றினார்" என்றான்.
அந்த வேளையில் பீர்பால் அங்குவர கொல்லன் அவரை வணங்கினான்.
அக்பர் "பீர்பால் அவர்களே வீரன் ஒருவன் தாக்குதல்களிலிருந்து தப்ப கவசம் மட்டும் போதாது; தந்திர முறைகளும் வேண்டும் என்று கொல்லன் மூலம் எனக்கு உணர்த்திவிட்டீர்கள். உனக்கு மிக்க நன்றி" என்று கூறி அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
கொல்லனுக்கு பரிசுகள் வழங்கினார்.