

சுரேஷூக்கு இன்று ஒரு வாய்ஸ் மெயில் வந்தது. புது நம்பர். தொழில்நுட்ப காரணமாக அது டெலிட் ஆகி இருந்தது. ஆனால் 3 வினாடிக்கு வாய்ஸ் கேட்டது.
“உன்னை மன்னிச்சு விட்...” இவ்வளவுதான் கேட்டது.
ஒரு இருபது முப்பது தடவை கேட்டான். அது தன் காதலி குரல்… அதாவது சாந்தியின் குரல் என்று ஊர்ஜிதம் செய்தான். உடனே அந்த நம்பருக்குக் கால் செய்தான்.
ஸ்விட்ச்ட் ஆஃப் என பதில்.
சரியென்று பல மெசேஜ் அனுப்பினான். வாய்ஸ் மெயிலும் அனுப்பி பார்த்தான். பலன் இல்லை. 2 நாட்கள் முயற்சி செய்தும் எந்த நிலையும் மாறவில்லை.
ஊட்டியில் கல்லூரி படிக்கும்போது சக மாணவி சாந்தியைக் காதலித்தான். சாந்தியும் காதலித்தாள். கடைசி செமஸ்டர் படிக்கும்போது சாந்திக்கு எல்.ஐ.சி.யில் வேலை கிடைத்தது. அப்போது சுரேஷ் சாந்தியிடம் “நாம் கல்யாணம் செய்துகொள்ளலாமா…?” என்று கேட்டான்.
சாந்திக்கு கோபம். “ஏன் அவசரம்…?” என்று கேட்டாள்.
“அதான் உனக்கு வேலை கிடைத்துவிட்டதே…?” என்று சொன்னான்.
“ஜாதி விட்டு வீட்டில் கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம். இப்போது உனக்கு வேலை இல்லை. எப்படி வீட்டில் சம்மதிப்பார்கள்…?” என சுருக் என்று பதில் சொன்னாள். மேலும் தொடரந்தாள்.
“உத்யோகம் புருஷ வட்சணம்... இது உனக்குத் தெரியாதா…?”
சுரேஷ் மீண்டும் மீண்டும் கல்யாணம் பற்றி பேசவே சாந்திக்கு கோபம் வந்தது. கடைசியில் “என்னை மறந்திடு...” என்று கோபமாகத் தனது காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்.
அவர்கள் உறவு மறைந்தது.
4 வருடங்கள் கழித்து சாந்தியிடம் இருந்து வந்த வாய்ஸ் மெயில் சுரேஷை ஒரு கலக்கு கலக்கிவிட்டது.
இப்போது சுரேஷ் ஒரு வங்கியில் கிளார்க் வேலை பார்த்து வந்தான். அவன் சாந்தி முகவரியைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்கினான்.
சுரேஷ் இருப்பது சென்னை.
சாந்தியின் புதிய நம்பர் மனப்பாடம் ஆகிவிட்டது.
சென்னை வளசரவாக்கம் ஏர்டெல் அலுவலகம் சென்று நம்பர் சொல்லி பெயரையும் சொல்லி முகவரி கேட்டான்.
ஏர்டெல் ஆபிசர், “இது ஏர்டெல் நம்பர் அல்ல.. ஏர்செல் நம்பர்” என்று உறுதியாக சொன்னார்.
ஏர்செல் அலுவலகம் வடப்பழனியில் இருந்தது.
தனது கதையைச் சொல்லி முகவரி கேட்டான். ஏர்செல் ஆபிசர், “இது சென்னை நம்பர் அல்ல... கோவை நம்பர்” என்று உறுதியாகச் சொன்னார்.
மறுநாள். சுரேஷ் கோவை புறப்பட்டுச் சென்றான். கோவை ஏர்செல் அலுவலகம் சென்று விவரங்களைச் சொல்லி சாந்தி முகவரி கேட்டான். ஆபிசர் “சார் நாங்கள் கஸ்டமர் தகவல்களை வெளியே சொல்ல மாட்டோம்.
ஆனால், நீங்கள் கொடுத்த நம்பர் சாந்தி பெயரில்தான் உள்ளது.”
சுரேஷ் பெருமூச்சு விட்டான்.
ஆபீசர் தொடர்ந்து பேசினார்.
“சாந்தி… வீட்டு முகவரி தரவில்லை. ஆபீசு நம்பர்தான் தந்து உள்ளார்.”
சுரேஷ் “எல்.ஐ.சி.தானே..?”
“ஆம்…!”
அலுவலக முகவரியை மன்றாடிக் கேட்டதால் ஆபீசர் மனம் இறங்கி அலுவலக முகவரியைத் தந்தார்.
“ரொம்ப தேங்ஸ் சார்… !” என்று சொல்லிவிட்டு வெளியே வந்து ஆட்டோ பிடித்தான்.
எல்.ஐ.சி. அலுவலகம். உள்ளே சென்று “ரிஷப்ஷனில் நான் சாந்தியைப் பார்க்க வேண்டும்” என்று சொன்னான்.
“சார்... நீங்க உட்காருங்க!” என்று சொல்லிவிட்டு சாந்தியை அழைத்து வந்தார்.
சாந்தி, சுரேஷைப் பார்த்ததும்
“ஐ.. சுரேஷ்… எப்படி இருக்கீங்க…?”
சுரேஷ், தான் வங்கியில் வேலை செய்வது பற்றி எடுத்துக் கூறினார்.
“சுரேஷ்… ஒரு 5 நிமிஷம்... நான் லீவு போட்டு வருகிறேன். நாம் என் வீட்டிற்குப் போய்ப் பேசலாம்…!” என்று சொல்லி விட்டு 10 நிமிடங்களில் வந்தாள்.
சாந்தி வீடு.
அப்பா, அம்மா இருவரும் இருந்தனர். சுரேஷ், தான் வந்த விஷயம் பற்றி சொன்னான்.
சாந்தி அப்பா கல்யாணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார். ஆனால், சுரேஷ் பெற்றோர் சம்மதம் வேண்டும் என்று சொன்னார்.
ஒரு 5 நிமிஷம் என்று சொல்லி வெளியே வந்து அப்பாவிடம் பேசினான்.
மீண்டும் உள்ளே வந்த சுரேஷ் சாந்தி அப்பாவிடம் தனது பெற்றோர் சம்மதம் தெரிவித்து விட்டனர் என்று சொன்னான்.
நிச்சயம் ஆனது.
அடுத்த மாதம் சுரேஷ்-சாந்தி திருமணம்.