

அல்பேனியாவின் ஒரு மலைக்கிராமத்தில் ஒரு தாய் தனது பத்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தாள். ஒன்பது மகன்கள், கடைக்குட்டியாக ஒரே ஒரு மகள். மகளின் பெயர் தோர்னா. அவளது ஒன்பது சகோதரர்களில் மூத்தவன் கோன்ஸ்டாடின். அவன் மற்ற அனைவரையும்விட வீரமானவன், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் உறுதியானவன்.
தோர்னாவைத் திருமணம் செய்துகொள்ள மிகத் தொலைவில் உள்ள தேசத்திலிருந்து வரன் வந்தது. "அவ்வளவு தூரம் என் மகளை அனுப்ப மாட்டேன். எனக்கு ஏதாவது ஆபத்து என்றால் அவளை எப்படி உடனடியாக அழைத்து வர முடியும்?" என்று தாய் மறுத்தாள்.
கோன்ஸ்டாடின் முன்னால் வந்து நின்றான். "அம்மா, கவலைப்படாதே. நீ எப்போது தோர்னாவைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும், நான் நேரில் சென்று அவளை உன்னிடம் அழைத்து வருவேன். இது என் ‘பெசா’ (Besa – வாக்குறுதி)," என்றான்.
அல்பேனியா நாட்டின் மலைப்பகுதிகளில் நிலவும் மிகச்சிறந்த பண்பாடு, 'வாக்குறுதி'. ஒரு அல்பேனியன் தனது உயிர் போவதானாலும், கொடுத்த வாக்கிலிருந்து தவற மாட்டான்.
எனவே, மகனின் வாக்குறுதியை நம்பித் தாய் திருமணத்திற்குச் சம்மதித்தாள். தோர்னா கடல் கடந்து சென்றாள்.
துரதிர்ஷ்டவசமாக, அடுத்த ஆண்டிலேயே அல்பேனியாவில் கொடிய போர் ஏற்பட்டது. போரில் அந்தத் தாயின் ஒன்பது மகன்களும் உயிரிழந்தனர்.
தாய் அநாதையானாள். எல்லையற்ற துக்கம் அவளை வாட்டியது.
“ஒன்பது மகன்களையும் பறிகொடுத்துவிட்டு, அநாதையாகத் தவிக்கிறேனே…! இந்தக் கொடும் துயரத்தைச் சொல்லி அழ, என் மகளாவது அருகில் இல்லையே…! இரு வகையிலும் துரதிஷ்டசாலியாகிவிட்டேனே…!” என எப்போதும் பிலாக்கணம் தொடுத்துக்கொண்டிருப்பாள்.
இறுதியாக, "தோர்னாவை அருகில் உள்ள ஊர்கள் எங்காவது திருமணம் செய்து கொடுத்திருந்தால், இப்போது எனக்கு ஆறுதலுக்காவது ஆகும். கோன்ஸ்டாடின்,… நீ அதற்கும் வழியில்லாமல் செய்துவிட்டாயே…! உன் வாக்குறுதி என்னாயிற்று? நான் எப்போது பார்க்க விரும்பினாலும், உன் தங்கையை அழைத்து வருவதாகச் சொன்னாயே,… இப்போது நீயே இறந்துவிட்டாயே…! உனது வாக்குறுதி பொய்த்துவிட்டதே…! நான் யாருமற்றவளாக நிற்கிறேனே…!" என்று புலம்பி அழுவாள்.
தனது தாயின் ஆற்றாமைகளும், நிறைவேற்றப்படாத தனது வாக்குறுதியும் கோன்ஸ்டாடினின் ஆன்மாவை அமைதியாக உறங்கவிடவில்லை.
ஒரு நள்ளிரவில், அவனது கல்லறையின் மண் விலகியது. கோன்ஸ்டாடின் அங்கிருந்து எழுந்தான். அவனது உடல் வெளுத்துக் காணப்பட்டது. கண்கள் நட்சத்திரங்கள் போல மின்னின.
அவனது குதிரையும் போரில் இறந்துவிட்டிருந்தது. அதன் ஆன்மா இப்போது எங்கே என்று தெரியவில்லை. எனினும் குதிரையின் பெயரைச் சொல்லி அழைத்தான். அடுத்த நொடியே குதிரையின் ஆன்மா கனைத்தபடி பாய்ந்தோடி வந்து நின்றது.
அவன் அதில் ஏறியதும் அது தாவி வானில் பாய்ந்து பறந்தது. அதிகாலையில் தோர்னாவின் புகுந்ததேசத்திற்குச் சென்றுவிட்டான்.
அவளது வீட்டை அடைந்தபோது அவள் வாசல் பெருக்கிக்கொண்டிருந்தாள்.
"உடனே புறப்படு! அம்மா உன்னைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அழுதுகொண்டிக்கிறாள்," என்றான்.
தோர்னா ஆச்சரியமடைந்தாள். "அண்ணா,… ஏன் இவ்வளவு அவசரம்? உனது ஆடை ஏன் மண்ணாக இருக்கிறது? உடலும் முகமும் வெளுத்துக் கிடக்கிறதே…! இவ்வளவு படுகாயங்களும் பட்டிருக்கிறாயே…? என்ன ஆயிற்று?" என்று கேட்டாள்.
"அதெல்லாம் பிறகு பேசலாம். நான் அம்மாவுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வந்திருக்கிறேன். குதிரையில் ஏறு!"
“திடுதிப்பென்று வந்துவிட்டு, உடனே புறப்படு என்றால் எப்படி? என் கணவரிடமும், மாமனார் – மாமியாரிடமும் சொல்லிவிட்டுத்தானே போக முடியும்?”
“சரி. சொல்லிவிட்டுக் கிளம்பு.”
“நான் கிளம்புவது இருக்கட்டும். நீ தூர தேசத்திலிருந்து நெடுந்தொலைவு பயணித்து வந்திருக்கிறாய். இவ்வளவு அலங்கோலமாகவும், காயங்களோடும் இருக்கிறாய். முதலில் குளித்து, உடை மாற்றிக்கொள். காயங்களுக்கு மருந்து இட மருத்துவரை அழைத்து வருகிறேன். உரிய சிகிச்சை செய்து, சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாம். உள்ளே வா!” என அழைத்தாள்.
கோன்ஸ்டாடின் குதிரையிலிருந்து இறங்கவில்லை. "நேரமில்லை தோர்னா! உடனே குதிரையில் ஏறு!"
தோர்னா தனது கணவரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றுவிட்டு, குதிரையில் அவனது பின்னால் ஏறிக்கொண்டாள்.
குதிரை கிளம்பிய அடுத்த கணமே பாய்ந்து விண்ணில் பறந்தது.
தோர்னா திகைத்து, "அண்ணா! இது என்ன விந்தை? குதிரை எப்படிப் பறக்கிறது?" என்று நடுக்கத்துடன் கேட்டாள்.
"அம்மாவின் துயரம் பிரபஞ்சத்தின் விதிகளை மாற்றிவிட்டது. அவளது அழைப்பின் வேகம்தான் இந்தக் குதிரையை இவ்வளவு வேகமாகச் செலுத்துகிறது."
நண்பகல் சுமார் இரண்டு மணி வாக்கில் வீட்டை அடைந்தனர். வாசலில் அவளை இறக்கிவிட்ட கோன்ஸ்டாடின், "தோர்னா, நீ உள்ளே செல். நான் குதிரையைத் தொழுவத்தில் கட்டிவிட்டு வருகிறேன்," என்றுவிட்டு குதிரையுடன் தொழுவத்துக்குள் சென்று மறைந்தான்.
தோர்னா தன் அம்மாவை அழைத்தபடியே வீட்டுக்குள் சென்றாள்.
அவளைக் கண்டதும் தாய் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தாள். “தோர்னா…! நீ எப்படி வந்தாய்…? உன் கணவர் எங்கே…?”
“என் கணவர் வரவில்லை அம்மா. பெரியண்ணன் கோன்ஸ்டாடின்தான் என்னைக் குதிரையில் அழைத்து வந்தான்.”
அதைக் கேட்டதும் தாய்க்குத் தூக்கிவாரிப் போட்டது. "என்னது…?! கோன்ஸ்டாடின் உன்னை அழைத்து வந்தானா? அவனும், உன் எல்லா அண்ணன்களும் போரில் இறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டதே!"
அதைக் கேட்டு தோர்னா பேரதிர்ச்சியுற்றாள். தனது சகோதரர்கள் அனைவரும் போரில் பலியானதை அறிந்து துடிதுடித்து அழுது புலம்பினாள்.
பிறகு, “பெரியண்ணனும் இறந்துவிட்டதாகச் சொல்கிறாயே,… அப்படியானால் அவன் எப்படி என்னை அழைத்து வந்தான்?” என்று கேட்டாள்.
“வந்தது உன் அண்ணனல்ல; அவனது ஆவியாகத்தான் இருக்க வேண்டும்!”
தோர்னாவுக்கு அவனது தோற்றமும், குதிரை பறந்து வந்ததும் நினைவில் எழுந்தன. அவற்றுக்கான காரணம் இப்போது விளங்கியது.
“உயிர் போவதாக இருந்தாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என இருப்பவர்களைத்தான் உலகம் இதுவரை கண்டிருக்கிறது. என் மகன், இறந்த பிறகும் அவன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டானே!” எனப் பெருமிதத்தோடு வெதும்பினாள் தாய்.