

"விடுங்க பாபு. அதையே நினைச்சுட்டு கவலை பட்டுட்டு இருக்கிறதால, நம்ம பிரச்னை சரியாகாது!" கமலி திரும்பவும் பாபுவிடம் சொன்னாள்.
பாபு வேலை செய்கிற ஐடி கம்பெனியில், திடீரென அவனோடு சேர்த்து நிறைய பேரை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள். சரியான காரணம் எதுவும் சொல்லப்படாமல், ஆள் குறைப்பு என்ற பெயரில் நிர்வாகம் இப்படி செய்ததை, பாபுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதுவுமில்லாமல், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான், கையிலிருந்த சேமிப்பை எல்லாம் செலவழித்து, எண்பது லட்சம் ருபாய் கடனில், இந்த அபார்ட்மெண்டில் வீடு வாங்கி குடி வந்திருக்கிறான். மகள் கீர்த்தியை ஒரு பிரபலமான ஸ்கூலில் சேர்த்திருக்கிறான். ஏற்கனவே வாங்கிய கார் லோனும், இதைத்தவிர மற்ற மாதாந்திர செலவுகளும் இருக்கு!
‘இதையெல்லாம் இனி எப்படி சமாளிக்கப் போகிறேன்!’ என்று, இந்த இரண்டு மூன்று நாட்களாக சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல், பெட்ரூமை விட்டு வெளியே வராமல், பித்துப்பிடித்தவன் போல புலம்பிக்கொண்டே இருந்தான்.
"இனி என்ன செய்யறதுன்னு தெரியல கமலி! இந்த மாதிரி சொகுசான வேலை, வருமானம், வசதியை நம்பி இருக்கிறவங்களுக்கு, இது ஒரு பெரிய அடி! இதே மாதிரி வேலை, சம்பளம் எல்லாம், உடனே எனக்கு கிடைக்குமான்னு தெரியல! எனக்கு தெரிஞ்ச இடங்கள்ள எல்லாம் கேட்டுப் பார்த்துட்டேன். சாதகமான பதில் எதுவும் கிடைக்கலே! பயமா இருக்கு!" சொல்லும் போதே பாபுவின் முகம் வெளுத்திருந்தது. கை கால்கள் எல்லாம் பயத்தில் நடுங்க ஆரம்பித்தன.
கமலிக்கு, அவனுடைய கவலையும், பயமும் நியாயமானது தான் என்பது தெரியும். ஆனால் அவனுடைய நிலைமையை பார்க்க, பார்க்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
"இங்க பாருங்க. ஒரு பிரச்னைக்குள்ளேயே இருந்து, அதையே யோசிச்சுட்டு இருந்தா… நமக்கு தீர்வு கிடைக்காது. அதை விட்டு வெளியே வந்து யோசிக்கணும்! நம்மகிட்ட இருக்கிற, படிப்பு, திறமை, அனுபவம் மாதிரியான நேர்மறையான விஷயங்களைப் பத்தி அது யோசிக்க விடாது. நீங்க படுக்கையை விட்டு எழுந்து வெளிய வாங்க! நாம காற்றாட நடந்து போய், சூடா ஒரு காபி குடிச்சுகிட்டே யோசிப்போம். கண்டிப்பா ஒரு வழி கிடைக்கும்!"
பாபுவுக்கு கமலி சொல்வது சரியாகப் பட்டது. அவனுக்கும் இப்படியே உட்கார்ந்திருந்தால் பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது. அதனால் எழுந்து, முகத்தை கழுவிக்கொண்டு, அவளோடு வீட்டை விட்டு வெளியே வந்தான்.
அப்பார்ட்மென்டை விட்டு வெளியே வந்து, கார்டனில் மிருதுவான பசும் புல்தரையில், கமலியோடு கை கோர்த்து நடந்தான். இதமான வெளிக்காற்று முகத்தை தழுவிச் சென்றது. இப்பொழுது, அவன் மனதுக்கு சற்று தெம்பாக இருந்தது.
"இதுவும் கடந்து போகும்ன்னு சொல்கிற மாதிரி, இந்த சிக்கலும், பிரச்னையும் சீக்கிரமே சரியாகிடும். நம்ம வாழ்க்கை இதோட முடிந்ததுன்னு நினைச்சு துவண்டு போகாம, அடுத்து என்ன செய்யணும்னு தெளிவா சிந்திக்க ஆரம்பித்தாலே போதும், ஒரு நல்ல வழியை கண்டுபிடிக்க முடியும்."
கமலி சொல்வதை கேட்க, கேட்க, பாபுக்கு நம்பிக்கையும் தைரியமும் வர ஆரம்பித்தது. கமலிக்கு புத்தகங்கள் படிக்கிற பழக்கம் இருக்கிறதால, இப்படி தெளிவாக பேச முடிகிறது.
அவன் அதிக கடன்களை வாங்கி செலவு செய்யும் போதெல்லாம், ‘வருமானத்துக்கு மேல் கடன் வாங்கி, ஆடம்பரமாக வாழ ஆசைப்படவேண்டாம்’ என்று அவனை எச்சரிக்கை செய்திருக்கிறாள்.‘
அவள் பேச்சைக் கேட்டு கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு இருக்கலாமோ!’ என்ற எண்ணமும் அவனுக்குள் வந்தது. 'இப்படி ஒரு துணைவி எனக்கு மனைவியாக கிடைத்தது என்னுடைய பாக்கியம்' என்று நினைத்துக்கொண்டான்.
அப்போது அவனுடைய கைபேசி 'கிர்ர்ர்' என்று அதிர்ந்தது. பாபு அதை எடுத்துப் பார்த்தான். ஒரு புதிய எண்களை கொண்ட அந்த அழைப்பை சலிப்போடு, நிராகரிக்க நினைத்து, பின்பு உயிர்ப்பித்தான்.
"பாபு! நான் ராகவ்..." என்று மறுமுனையில் பேச,
"ராகவ் ...ம்ம்.. எப்படி இருக்கீங்க பாஸ்?" என்று பாபு அதிர்ச்சியோடு பேசினான்.
ராகவ்! பாபு வேலை செய்யும் நிறுவனத்தில், கடந்த வருடத்தில் அவனுக்கு டீம் லீடராக இருந்தவர். இப்போது வேறு ஒரு பிரபலமான ஐ. டி கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்.
"பாபு, விஷயம் கேள்விப்பட்டேன். எனக்கு உன்னை மாதிரி ஒரு திறமையான ஆள் தேவைப்படுது. நாம நாளைக்கு நேரில் சந்திக்கலாம். மற்ற விவரங்களை போன்ல அனுப்பி வைக்கிறேன். பை," என்று அவர் சொல்லி முடித்தார்.
பாபுவுக்கு, ராகவோடு பேசிய அதிர்ச்சியிலிருந்து இன்னும், மீள முடியவில்லை. அவனுக்கு ஏற்பட்ட பிரச்னையிலிருந்து வெளியே வர, இவ்வளவு விரைவாக ஒரு உதவிக்கரம் வரும் என்று அவன் நினைக்கவே இல்லை. அந்த மகிழ்ச்சியோடு, இந்த சந்தோஷமான செய்தியைச் சொல்வதற்கு, கமலியை திரும்பிப்பார்த்தான்.
அவள், பாபுவுக்கு தைரியம் சொல்லி சமாதானப்படுத்தி விட்டிருந்தாலும், இப்போது ஆகாயத்தைப் பார்த்தபடி, கண்களில் கண்ணீர் மிதக்க, அவனுக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.