

சென்னையின் மிகப் பிரபலமான 'ஸ்ரீ கேட்டரர்ஸ்' என்ற சமையல் தயாரிப்பு குழுவினர், நந்தினி டீச்சர் வீட்டின் 60 வயது பூர்த்தி விழாவிற்கு, திருச்சியின் அந்தப் பெரிய சத்திரத்திற்கு விழாவின் முதல் நாளே வந்திறங்கினர். அதன் உரிமையாளர்கள் சுகந்தியும், அவள் கணவர் ஸ்ரீதரனும் உடன் வந்திருந்தனர்.
நந்தினி டீச்சர் என்று அழைக்கப்படும் 'ஸ்ரீநந்தினி' சுகந்தியின் பள்ளிக்கால விளையாட்டு ஆசிரியை. சுகந்தி அவள் கணவன் ஸ்ரீதரனைக் கைபிடித்து சென்னை வரும்வரை திருச்சியில் நந்தினி டீச்சருக்கும் சுகந்திக்குமான உறவு தொடர்ந்திருந்தது. நந்தினியும் அவர் கணவரின் வேலை நிமித்தம் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலாகிப்போனார்.
பணி ஓய்விற்குப்பிறகு மீண்டும் நந்தினியின் குடும்பம் தங்கள் சொந்த ஊரான திருச்சியிலேயே வந்து சேர்ந்தது. வந்து 2 மாதங்களிலேயே நந்தினியின் கணவரின் 60 வயது பூர்த்தி விழா அமைய, சுகந்தி தொலைபேசியில் உறுதியாக சொல்லிவிட்டாள் "டீச்சர் நம்ம வீட்டு ஃபங்க்ஷனுக்கு எங்க சாப்பாடுதான். சென்னையிலிருந்து நாங்களே வரோம்" என்று.