

பெற்றோர்கள் பலர் தங்களின் கௌரவத்திற்காகவும், அடுத்தவர்களுக்கு முன்னால் 'என் பையன் இதை படித்திருக்கிறான், இத்தனை சம்பாதிக்கிறான், இது தெரியும், அது தெரியும்' என்றெல்லாம் பெருமை அடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், குழந்தைகளின் நலனை முற்றிலுமாக அழித்து விடுகிறார்கள்.
அவர்களுக்கு எது பிடிக்கும்; எது பிடிக்காது என்பதை கூட கேட்பதில்லை. 'எனக்கு இது பிடித்திருக்கிறது; நீ இதைத்தான் படிக்க வேண்டும். எதிர்த்து வீட்டுப் பையன் இதை படித்தான் இத்தனை சம்பாதிக்கிறான். வெளிநாட்டில் இருக்கிறார்,,,' என்றெல்லாம் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு குழந்தைகளை முற்றிலுமாக மனரீதியாக சிதைத்து விடுகிறார்கள். நான் எல்லா பெற்றோர்களும் அப்படி இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை ஒரு சில பெற்றோர்கள் இவ்வாறு இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு நீதிக் கதை...
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று தன் குட்டிகளோடு வசித்து வந்தது. ஒரு நாள் அதற்கு உணவு கிடைக்கவில்லை பசியால் வாடியது; தவித்தது. உணவு கிடைக்காததால் சோகத்தோடு தன்னிடத்திற்கு வந்தது. தன்னுடைய பசிக்காக தன் குட்டிகளை பார்த்தது. எல்லா குட்டிகளும் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு குட்டி மட்டும் தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அம்மா சிங்கம் கபக்கென்று அதை தின்றுவிட்டது. சிறிது நாட்கள் கழித்து இதே போல் ஒரு நாள் உணவு கிடைக்கவில்லை மறுபடியும் ஒரு குட்டியை அதே போல் தின்றது.
இப்படி ஒவ்வொரு குட்டியாக தின்று விட்டது. கடைசியில் ஒரு குட்டி மட்டும் தான் இருந்தது. வழக்கம் போல அன்றும் அந்த சிங்கத்திற்கு அகோரப் பசி. உணவு எதுவும் கிடைக்க வில்லை. அம்மா சிங்கம் மெதுவாக அந்த குட்டியின் அருகில் வந்தது. எல்லா குட்டிகளை போல இந்த குட்டி இல்லை. இது கொஞ்சம் புத்திசாலி குட்டி. நெருங்கி வந்த அம்மாவை பார்த்து புரிந்து கொண்டது தான் பலிகடாவாகப் போகிறேன் என்று.
அது அம்மாவை பார்த்து, "என்னம்மா, பசி பொறுக்க முடியலையா? எல்லா குட்டிகளையும் தின்று விட்டாய். இப்போது என்னையுமா?" என்றது.
"ஆமாம், இப்ப என்ன அதற்கு?" என்றது அம்மா சிங்கம்!
"ஏன் அம்மா? உன்னுடைய பசிக்காகவும் நலனுக்காகவும் பெற்ற குட்டிகளையே உண்பது நியாயமா? நீயே சொல்லு?" என்றது குட்டி.
"இங்கே பார், நான் தான் உங்களை பெற்றேன், உணவை ஊட்டினேன், உங்களை பாதுகாத்தேன். ஆகவே, எனக்கு முழு உரிமை இருக்கிறது என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு, புரிந்ததா.. என்னையே கேள்வி கேட்கிறாயா?" என்று கோபத்தோடு கர்ஜித்தது அம்மா சிங்கம்.
"ஓ, அப்படியா?? அப்படி என்றால் எனக்கும் ரொம்ப பசிக்கிறது, ஆகவே நானும் உங்களை கடித்து உண்ணுகிறேன்" என்று ஏட்டிக்கு போட்டியாக பதிலளித்தது குட்டி சிங்கம்.
"என்னது, என்ன சொன்ன நீ இப்ப?" என்று இன்னும் ஆக்ரோஷமாக கர்ஷித்தது அம்மா சிங்கம்..
"எங்களை பெற்ற எடுத்த காரணத்தினால் நீ உன் விருப்பதிற்காக எங்களை பலி வாங்குவது எந்த விதத்தில் நியாயம் அம்மா? அதைப் போல நாங்களும் நினைக்கலாமே.. உங்களின் பசியை ஆற்ற எங்களை நீ பலியாக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நாங்கள் அவ்வாறு நினைத்தால் கூட தவறா?" என்றது சிங்க குட்டி.
அம்மா சிங்கத்திற்கு இப்போது தான் அறிவுக் கண் திறந்தது. செய்த தவறை எண்ணி வருந்தியது. குட்டியை நாக்கால் நக்கி தழுவிக் கொண்டது.
இந்த கதையிலுள்ள அம்மா சிங்கத்தை போலவே ஒரு சில பெற்றோர்கள் தங்களுடைய கௌரவத்தையும் தன்மானத்தையும் பெருமையையும் மட்டுமே மனதில் வைத்து கொண்டு குழந்தைகளை இதை செய், அதை படி என்றெல்லாம் திணிக்கிறார்கள். தங்களின் கௌரவத்திற்காகவும், அடுத்தவர்களுக்கு முன்னால் 'என் பையன் இதை படித்திருக்கிறான், இத்தனை சம்பாதிக்கிறான், இது தெரியும், அது தெரியும்' என்றெல்லாம் பெருமை அடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், குழந்தைகளின் நலனை முற்றிலுமாக அழித்து விடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு எது பிடிக்கும்; எது பிடிக்காது என்பதை கூட கேட்பதில்லை. 'எனக்கு இது பிடித்திருக்கிறது; நீ இதைத்தான் படிக்க வேண்டும். எதிர்த்து வீட்டுப் பையன் இதை படித்தான் இத்தனை சம்பாதிக்கிறான். வெளிநாட்டில் இருக்கிறார்,,,' என்றெல்லாம் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு குழந்தைகளை முற்றிலுமாக மனரீதியாக சிதைத்து விடுகிறார்கள்.
பெற்றோர்களே! நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் செய்வதெல்லாம் சரிதான் என்று உங்களுக்கு தோணலாம். ஆனால், வாஸ்தவத்தில் குழந்தைகள், உங்களின் கட்டாயத்தினாலும் உங்களை எதிர்த்து பேச தைரியமில்லாத காரணத்தினாலும் பிடிக்காத கல்வியையும் செயலையும் செய்வதாலும் அவர்கள் தங்களுடைய சந்தோஷத்தையையும் அமைதியையும் உங்களுக்காக பலியாக்கி விடுகிறார்கள்.