

‘பெண்’ என்பது மங்கையர்களுக்காக வரும் வார இதழ். இதன் உரிமையாளர் திருமதி. அஜீதா. அவர் ஒரு வழக்கறிஞர். பெண்கள் உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடுபவர். பாலியல் வன்கொடுமை என்றால் தனது வாதத்தின் மூலம் நிச்சயமாகத் தண்டனை வாங்கி கொடுத்துவிடுவார்.
நீதிமன்றம், விசாரணை மற்றும் வழக்குக் காரணமாக அவரால் ‘பெண்’ பத்திரிகையில் கவனம் செலுத்த முடியவில்லை.
எனவே, அவர் பத்திரிகை ஆசிரியராக பத்மா என்பவரை நியமித்தார்.
பத்மா என்பவர் அனுபவசாலி, புத்திசாலி. அவர் புலனாய்வு கட்டுரை எழுதுவதில் சூரர். அஜீதா சரியான நபரிடம் ஆசிரியர் பொறுப்பை வழங்கி உள்ளார்.
பத்மாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சுருக்கமாக பாரதி கண்ட ‘புதுமைப்பெண்'. மாணவப் பருவத்திலேயே பிரபல பத்திரிகையில் எடிட்டர், நிருபராக்கான பயிற்சியில் செதுக்கப்பட்டு, பத்திரிகைத் துறையில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை கற்றுக்கொண்டவர். பத்மா, ‘பெண்’ணில் சேர்ந்து 6 வருடங்கள் ஓடிவிட்டன.
சமீபத்தில் அவர் செய்த சாதனை...
ஒரு மத்திய அமைச்சர் பாலியல் தொழில் நடத்தும் பங்களா ஒன்றை நடத்தி வருவதாக அரசல்புரசலாக கேள்விபட்டார். அவரது எண்ணம் முழுக்க முழுக்க அந்த அமைச்சரை சுற்றியே இருந்தது.
சென்னை புறநகர்ப் பகுதியில்தான் ஒரு பெரிய பங்களாவில்தான் விபச்சாரம் நடக்கின்றது என்பதை துல்லியமாக அவர் அறிந்தார். அங்கு நேரே சென்று புகைப்படம் எடுக்கத் திட்டம் போட்டார். சாதாரண பெண்போல் பங்களாவிற்கு நுழைந்தார்.
அங்கு ஒரு நடுத்தர வயது பெண்தான் மேனேஜராக இருந்தார்.
“ஏய் நீ யாரு...? உனக்கு என்ன வேண்டும்..?” - மேனேஜர்.
பத்மா சுதாரித்துக்கொண்டு, “ஏதாவது வேலை இருந்தா கொடுங்கம்மா...?”
“எந்த வேலையா இருந்தாலும் செய்வீயா?”
“கண்டிப்பா... செய்வேன்.”
“நீ இங்கேதான் தங்க வேண்டும்.”
“நான் தங்கும் ரூமைப் பார்க்கலாமா?”
“வா... ரூம் காட்றேன்.”
அறை அல்ல. பெரிய ஹால். எக்கச்சக்கமான பெண்கள்.
“மேடம் என்ன வேலை?”
“அடியே! நிறையப் பெண்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாதா...? விபச்சாரம்தான். உனக்கு விருப்பம் இருந்தால் நாளைக்கு வரலாம்...“
“ஓ... மேடம் இந்தப் பங்களா உங்களுடையதா?”
“இல்லை... அந்த அளவுக்கு வசதியானவளா நான்...மத்திய அமைச்சர் கே. கே. ஷாதான்… !”
“சரி...கண்டிப்பா நான் நாளைக்கு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
பத்மா அதீத புத்திசாலி. தன்னுடன் சின்ன ஸ்பை பென் கேமரா ஆன் செய்துவிட்டுதான் உள்ளேயே சென்றார். அந்த இடம், ஹால் மற்றும் மேனேஜர் என்று அங்கிருந்த எல்லாவற்றையும் புகைப்படங்கள் அதாவது ஆடியோ உள்ள வீடியோ எடுத்துவிட்டார். ஹாலில் இருந்த விபச்சாரிகளையும் படம் பிடித்துவிட்டார்.
குறிப்பாக, மேனேஜருடன் நடந்த உரையாடலைப் பதிவு செய்து இருந்தார். உயிரைப் பணயம் வைத்து சாதித்துவிட்டார். இந்த வார இதழிலேயே மத்திய அமைச்சர் ஷாவை அம்பலப்படுத்தினார. ஊர் எங்கும் இதே பேச்சு.
அஜீதா, பத்மாவை பாராட்டினார்.
மேலும், மத்திய அமைச்சர் மீது பாலியல் வழக்கு ஒன்றைப் போட்டார். பாரளுமன்றம் வரை இந்த வழக்கு பிரபலமானது. எதிர்க்கட்சிகள் ‘அமைச்சர் பதவி விலக வேண்டும்’ என்று போராடினார்கள். அமைச்சர் பதவி விலகினார்.
‘பெண்!’ விற்பனை 3 மடங்கு அதிகரித்தது. எல்லாவற்றுக்கும் காரணம் பாரதி கண்ட புதுமைப்பெண் பத்மாவின் அசத்தல்தான்.