

நேபாளத்தின் அந்த ஆற்றோரக் கிராமம் சற்றுமுன் வரை அமைதியாகத்தான் இருந்தது! வரப் போகும் பேரிடரை அறியாமல் பெண்களும், ஆண்களும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அமைதியாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அனுஷ்காவும், ஆரவ்வும் நேற்று நடந்த அந்த நிகழ்ச்சியின் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் துவண்டு கிடந்தார்கள்.
அப்படி என்னதான் நடந்தது நேற்று என்கிறீர்களா? அந்த அவலத்தைச் சொல்ல எண்ணினாலே கண்கள் குளமாகி, வார்த்தைகள் தடுமாறுகின்றன. வாழ்க்கையின் நடுவில் துன்பங்கள் வரலாம். பலருக்கோ… துன்பமே வாழ்க்கையாகிப் போகிறது!
அந்தப் பெற்றோருக்கு அனுஷ்காதான் மூத்த பெண்! எல்லாப் பெற்றோரையும் போலத் தங்களுக்கு ஓர் ஆண் வாரிசு வேண்டுமென்று அவளின் பெற்றோரும் விரும்பினார்கள். அதைக் கை கூடச் செய்வதில் ஆண்டவன் ஏனோ தாமதம் காட்டினார். தனக்கு ஒரு தம்பி வேண்டுமென்று அனுஷ்காவே மனமுருகிப் பிரார்த்தித்த போதுதான் அவர் செவி மடுத்தார். அப்பொழுது அவளுக்கோ எட்டு வயது. அவள் தாய் கருவுற்றதில் அனுஷ்காவுக்குத் தான் அதிகச் சந்தோஷம். தன் தோழிகளிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள்.
அவள் தாயைச் சீராட்டிப் பாராட்டி, அவள் பாட்டி செய்ய வேண்டியவற்றை, ஒரு தாயைப்போல அவள் தாய்க்குச் செய்தாள். அம்மாவின் வயிற்றில் காதை வைத்துக் குழந்தையின் துடிப்பை ரசிக்கும் சிறு குழந்தையாகி, அடிக்கடி அம்மாவின் வயிற்றில் காதை வைத்துக் கேட்டாள்.
அம்மாவையும், அப்பாவையும் ஒரு பெரிய மனுஷியாகிக் கவனித்துக் கொண்டாள். தம்பி! தம்பி! என்று அடித்துச் சொன்னதை தோழி ஒருத்தி ‘மாறிப் பிறந்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டபோது, ’நிச்சயமாகத் தம்பிதான் பிறப்பானென்று நம்பிக்கை இருக்கிறது! தப்பித் தங்கச்சியாகப் பொறந்தாலும் நான் அப்பவும் அக்காதானேடி! என்ன? தம்பி பொறந்தா எங்க அம்மா-அப்பா நிம்மதியா இருப்பாங்க.
என்னை மாதிரியே மறுபடியும் பெண் பிறந்திட்டா அவங்க உற்சாகம் கொஞ்சம் கொறைஞ்சிடும். ம்!பார்க்கலாம். சாமி தம்பியைக் கொடுக்கிறாரா இல்ல தங்கச்சியைக் கொடுக்கிறாரான்னு.
அவள் பிரார்த்தனைப்படி சாமி தம்பியைத்தான் கொடுத்தார். ஆரவ் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். அக்காவாக மட்டுமில்லாமல் அம்மாவாகவும் இருந்து தம்பியைப் பார்த்துக் கொண்டாள் அனுஷ்கா! தம்பியைக் கொடுத்த கடவுள், பெற்றோர்கள் விஷயத்தில் மட்டும் அவள் பிரார்த்தனையை உதாசீனப்படுத்தி விட்டார்.
ஆம்! மலையடிவாரத்திலிருந்து உருண்ட பஸ்ஸில் பிரயாணம் செய்தவர்களுள் அவர்களும் இருந்தார்கள். காலையில் கிளம்பும்போது, ’தம்பியைப் பார்த்துக் கொள்!’ என்று சொல்லிச் சென்றபோது ‘நிரந்தரமாக’ என்று அவர்கள் சொல்லாவிட்டாலும் அதுதான் நிரந்தரமாகிப் போனது. காலையில் உயிருடன் போன அவர்கள் மாலையில் பார்சலாகத்தான் வீட்டில் டெலிவரி செய்யப்பட்டார்கள். தம்பிக்காகவே தன் வாழ்க்கையை அவள் அமைத்துக் கொண்டாள்.
நேற்றுக் காலையில் நண்பர்களுடன் அருவிக்குக் குளிக்கச் சென்றவன் வழுக்கி அருவியோரத்தில் இருந்த நீர் வீழ்ச்சிப் பக்கம் போய்விட, நல்ல வேளையாகச் சரியான சமயத்தில் அவளுக்குச் செய்தி கிடைத்து ஓடினாள். தம்பி நீர்வீழ்ச்சியை நெருங்குவது மட்டுந்தான் அவள் கண்களுக்குத் தெரிந்தது. அவ்வளவுதான்!அருவியில் குதித்து, நீச்சல் அடித்துப் பரபரத்துப் போய் அவனைக் கைகளால் பிடித்து விட்டாள். இருந்தாலும் இருவருமே நீரின் சுழலில் சிக்கி வேகமாக நீர் கீழே விழும் இடத்தை நோக்கிப் போய்க் கொண்டே இருந்தார்கள். பக்கத்துச் சாலையில் சென்றவர்களெல்லாம் பதைபதைத்து நின்று விட்டார்கள். அனுஷ்காவின் தோழியர் சிலரும் அங்கு வந்து விட, ‘பார்த்து…பார்த்து அனுஷ்கா’ என்று செய்வதறியாது கூச்சலிட்டார்கள்.
நீர் வீழ்ச்சியை நெருங்கும் சமயத்தில், அந்த இக்கட்டிலும் சமயோசிதமாகச் செயல்பட்ட அனுஷ்கா, அழுத்தமான வேர் ஒன்றைப் பிடித்துக் கொண்டாள்!
ஒரு கையில் தம்பி! மறுகையில் வேர்! சுற்றிலுமோ சுழன்றடிக்கும் நீர். ’பிழைப்பார்களா? இல்லை…நீர் வீழ்ச்சியில் விழுந்து ஆற்றோடு போய் விடுவார்களா?’ என்று ‘உச்’ கொட்டியபடி ஒவ்வொருவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கடவுளை வேண்டியபடி நிற்க, துணிச்சலான இளைஞர்கள் சிலர் பெருங் கயிற்றுடன் வந்து, மரத்தில் கயிற்றைக் கட்டி மறு முனையை அவளிடம் தூக்கிப் போட, அந்த முனையோ நீரின் வேகத்தில் அவளை நெருங்காமல் அடம் பிடித்தது. அவர்களும் அயராமல் முயல, நீரும் அவர்களுடன் போட்டிக்கு நின்றது. இறுதியாகக் கயிறு அவள் கைக்கு அருகில் போக, வேரைப் பிடித்திருந்த கைகளை விட்டு விடாமல், அதனுடன் சேர்த்தே கயிற்றை வலுவாகப் பிடித்துக் கொண்டாள்.
ஒரு வழியாக அவர்கள் கரையை அடைந்தபோது, ஆரவ் மயங்கியிருந்தான்!
அவளும் களைப்பால் மயக்கமுற, தயாராக நின்றிருந்த ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனை கொண்டு சென்றார்கள். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்கள்.
அதிலிருந்து தப்பித்து விட்டார்கள். ஆனால் அடுத்த பிரளயம் வந்தே விட்டது.
மேலுள்ள மலையிலிருந்து ஐஸ் பெர்க்கும், மரங்களும், சேறும் சகதியும், விமானத்தின் டேக் ஆப் வேகத்தில் கீழ் நோக்கி, வர அந்தக் கிராமமே அல்லோல கல்லோலப்பட்டது!
இப்பொழுது நமது பிரார்த்தனையெல்லாம் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பதுதான்.
அக்காவாக மட்டுமல்லாமல் அம்மாகவும், அதாவது அக்கம்மாவாக வாழ்ந்த அனுஷ்காவும், ஆரவ்வும் வாழ வேண்டியவர்கள். ’அவர்களை வாழ வை இறைவா!’