

‘என்னொப்பப் பெண் மகளிர்
இவ்வுலகில் தோன்றற்க!’
என்ற சீவகனின் தாய் விசயையின் இலக்கிய வரிகள், என்றைக்கும் நம் மனதை நெகிழச் செய்வன!
ஆணையும், பெண்ணையும் படைத்த இறைவன், பெண்களுக்கு மட்டும் அதிகப் பொறுப்பைக் கொடுத்து, உயர் இடத்தில் வைத்து விட்டான்! ஆம்! இந்த உலகம் வளர்வதும், வாழ்வதும், மகிழ்வதும் பெண்களால் என்றால் அது மிகையில்லை! அதற்காக அவர்கள் படும் அல்லல்களுக்கும் குறைவில்லை!!
அன்பு மகளாக, ஆருயிர்க் காதலியாக, இன்ப மனையாளாக, ஈகை மிக்க குடும்பத் தலைவியாக, உத்தமத் தாயாக, ஊர் மெச்சும் பெண்ணாக, எல்லோரையும் அரவணைத்து, ஏகத்துக்கும் அன்பு செலுத்தி, ஒருவரையும் ஒதுக்கி விடாமல், ஓதுவதையும் விட்டு விடாமல், ஐயத்திற்கு இடம் வைக்காமல், ஔவையின் அடிகளைப் பின்பற்றி, வாழ்வையே தியாகமாக்கி வதிபவர்கள் நம் பெண்கள் என்பது ஏகத்துக்கும் உண்மை! இதில் எள்ளளவும் இல்லை பொய்மை!
லதாவும் காதலித்துத்தான் கல்யாணம் செய்து கொண்டாள். லவன் என்ற பெயரைக் கேட்டதுமே அவள் மனத்தில் இனம் புரியாத ஈர்ப்பு ஊற, அவனைக் கண்ட அந்த நிமிடமே அவள் உள்ளத்தில் மின்னல் கீற்றாக அரும்பிற்று காதல்! அவனுக்கும் அதுவே நிகழ்ந்ததாகப் பின்னர் அவன் கூறினான். அவர்களுக்குள் மின்னலாகத் தோன்றிய காதல் அவர்கள் குடும்பத்தில் இடியாக இறங்க, சோக மேக மூட்டம் இருவர் வீட்டையும் சூழ, தாயார்களின் கண்களில் அடிக்கடி மழை பொழிந்தாலும், அவர்கள் மட்டும் தெளிவான வானத்திற்காகக் காத்திருந்தார்கள். இருவரும் வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளை என்பதால், அனுகூலங்கள் சிலவும், வேண்டத் தகாதவை சிலவும் குறுக்கிட்டாலும், காதல் நிறைவேற பொறுமை அவசியம் என்பதை இருவரும் உணர்ந்து, கடைப்பிடித்துச் சாதித்துக் காட்டினார்கள்! திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடனேயே நடந்தது!
இன்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தாலும், இருக்கின்ற தொழிலையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி, குழந்தைப் பேற்றைக் கொஞ்ச நாட்களுக்குத் தள்ளி வைத்தார்கள் அவர்கள்! அதில்தான் வந்தது பிரச்னை!
லவனின் தாய் வம்ச விருத்தி வேண்டி, அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். சில மாதங்களில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால் அவர்கள் இருவரையும் ‘செக் அப்’ செய்து கொள்ளுமாறு நச்சரிக்க ஆரம்பித்தாள்.
இரண்டு, மூன்று பரிசோதனைகளை முன்பே முடித்து விட்ட லவனும், லதாவும் அன்றைக்கு முடிவுகளைப் பெற்று, மருத்துவரின் வழிகாட்டுதல்களையும் கேட்டுச் செல்வதற்காக மருத்துவமனை வந்திருந்தனர். கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.
இப்பொழுதெல்லாம் கருவாக்க மருத்துவமனைகள் ஏனோ நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டன. வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் போன்றவை காரணமாக இருக்குமோ? ஆனாலும் இவற்றையெல்லாம் தாண்டி, உலக மக்கட்தொகையில் நாம்தான் முதலிடத்தில் இருக்கின்றோம்!
லதா-லவன் முறை வர தாமதமானாலும் ,அவர்கள் பொறுமையாகவே காத்திருந்தார்கள். பெயரைக் கூப்பிட்டதும் ஆர்வமுடன் உள்ளே போனார்கள். உக்ரைனில் ஒருவரும் எதிர்பாராத நேரத்தில் ரஷ்யா குண்டு போட்டுத் தாக்குவதைப் போல, டாக்டர் கையில் ரிப்போர்டை வைத்துப் பார்த்தபடி, அவர்களை அன்புடன் அமரச் செய்து விட்டு, அந்த அஸ்திரத்தை வீசினாள்!
”சாரிம்மா லதா! உனக்கு கௌண்ட் குறைவா இருக்கறதால நேச்சுரல் பிரக்னன்சி ஏற்பட வாய்ப்பு குறைவு! பட், டோன்ட் ஒர்ரி!இப்போதான் ஏகப்பட்ட மாற்று முறைகள் வந்திடிச்சே!” டாக்டர் சொல்லி முடிக்கும் முன்னால் லதா அப்படியே சீட்டிலேயே மயக்கத்தில் சரிய, அவசரமாக சீட்டிலிருந்து எழும்பி வந்த மருத்துவர், லதா கைகளைப் பிடித்துப் பார்த்து விட்டு அதிர்ந்தார்!
லதாவின் கைகளில் கர்ப்ப நாடி தெளிவாகத் துடித்தது! ஆம்! லதா கர்ப்பமாகி உள்ளாள்!
டாக்டர் அதிர்ச்சியுடன் ரிப்போர்டை மறுபடியும் புரட்ட, உடன் இருந்த நர்ஸ் லவனிடம் விஷயத்தைச் சொல்ல… அவன் கண்கள் டாலடித்தன!
லதாவும் மெல்லக் கண் விழித்தாள்! கடவுள்தான் கண் திறந்து விட்டாரே!