

சுந்தரம் விவசாயத்தை தொழிலாகக் கொண்டிருந்தான். அவன் குடும்பம் மிகுந்த வறுமையில் வாடிக் கொண்டிருந்தது .
சுந்தரத்தின் பக்கத்து வீட்டுக்காரரான வேல்முருகன் அவனுக்கு பல நேரங்களில் கடன் கொடுத்து உதவி வந்தான்.
சுந்தரம் வறுமையில் வாடினாலும் அவன் மனம் தர்ம எண்ணத்தால் நிறைந்திருந்தது.
வேல்முருகனோ அவ்வாறு கிடையாது. அவன் சுயநலமாகவே சிந்தித்தான். ‘யாருக்கு என்ன நடந்தால் என்ன தம்முடைய வேலை முக்கியம்’ என்று அவன் வாழ்க்கையை நடத்தினான்.
சுந்தரம் தினசரி அவன் வீட்டின் முன் இருக்கும் நாய் குட்டிகளுக்கு ரொட்டிகள் வாங்கிப் போடுவதை ஒரு வேலையாக வைத்திருந்தான்.
வீட்டில் எவ்வளவு வறுமை வாட்டினாலும் துன்பத்தில் ஆழ்ந்தாலும் அவன் வீட்டின் முன் இருக்கும் நாய்க்குட்டிகளுக்கு ரொட்டி வாங்கி போடுவான் மற்றும் தன்னிடம் கஷ்டம் என்று வரும் மனிதர்களுக்கு பணம் கொடுத்து உதவி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
இவ்வாறு சுந்தரத்தின் மனம் இரக்க குணம் மற்றும் தர்ம சிந்தனையால் நிறைந்திருந்தது. வீட்டின் பணம் இல்லாத போதிலும் அவன் கடன் வாங்கி அச்செயலை ஆற்றி வந்தான்.
இதனால் மன வேதனை அடைந்த சுந்தரத்தின் மனைவி 'நம்முடைய வாழ்க்கை இவ்வாறு இருக்க, நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?' என்று அவனிடம் சண்டையிடுவாள்.
இருப்பினும் சுந்தரம் யார் கூறுவதையும் காது கொடுத்து கேட்பதில்லை.
இதற்கு நேர் மாறாக வேல்முருகன் தொழிலில் மிகுந்த முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்தான்.
செல்வ செழிப்பு அவனிடம் பெருகிக்கொண்டே போனது.
ஆனால் அவன் வீதியில் படுத்திருக்கும் நாய்க்குட்டிகளை கற்களால் எறிந்து விரட்டுவான்; மனிதநேயம் இல்லாமல் அவனுக்கு கீழ் தொழில் செய்யும் தொழிலாளர்களின் சம்பளத்தை அவர்களுக்கே தெரியாமல் சுரண்டுவான். இவ்வாறு அவன் மனம் அதர்ம எண்ணத்தால் நிறைந்திருந்தது.
இருவருடைய வாழ்க்கையும் இவ்வாறு நேர் மாறாக போய்க் கொண்டே இருந்தது.
மனிதநேயம் பாராத வேல்முருகனும் வாழ்வின் முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருந்தான். ஆனால் வாயில்லா ஜீவனின் உணர்வை புரிந்து கொண்ட சுந்தரமோ வாழ்வில் பல அடிகளை வாங்கிக் கொண்டிருந்தான்.
“பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்” என்ற பழமொழிக்கு ஏற்ப தர்ம சிந்தனை மனதில் நிறைந்திருந்தாலும் அவன் செய்யும் புண்ணியம் அவனுக்கு கை கொடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் சுந்தரம் இதை உணரத் தொடங்கினான் 'என்ன புண்ணியம் செய்து என்ன? தம்முடைய பிள்ளைகளுக்கும் நல் வாழ்க்கை அமையவில்லை, தனக்கும் தான் செய்யும் தொழிலில் நல்ல வருமானம் வரவில்லை. அனைத்தும் நஷ்டத்திலேயே சென்றது' என்று அவன் மன வேதனை கொண்டான்.
சுந்தரத்தின் கோபமானது அவன் வணங்கும் தெய்வத்திடம் அடைக்கலம் புகுந்தது.
சுந்தரம் கோவிலுக்கு சென்று இறைவனை நோக்கி தர்மம் தலைகாக்கும் என்று கூறுவார்கள்; ஆனால் வாழ்வில் என்னால் முடியாவிட்டாலும் பல நல்ல செயல்களை நான் செய்து வந்தேன். இருப்பினும் என் வாழ்க்கை கஷ்டத்திலே உருண்டு ஓடியது. நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன் என்று அவன் மனம் துடித்தது.
சுந்தரத்தின் மனதில் 'கலிகாலத்தில் கடவுளும் கல்லாய் மாறிப் போனான்' நல்லவற்றை செய்பவர்கள் துன்பப்படுகின்றார்கள், துன்பங்களை விளைவிப்பவர்கள் நல் முறையில் வாழ்கிறார்கள்' என்ற எண்ணம் துடித்துக் கொண்டிருந்தது.
வேதனையின் உச்சத்தை அடைந்த சுந்தரம் ஒரு கட்டத்திற்கு மேல் யார் மீதும் இரக்கம் இல்லாதவனாக மாறிப் போனான். அவனுடைய மனம் தர்ம சிந்தனை மற்றும் மனிதநேயத்தை கைவிட்டது.
அவன் முன்பு இருந்தது போல யாருக்கும் உதவ முன்வரவில்லை. அவனுடைய இந்த நிலைமைக்கு அவன் செய்த தர்மம் மற்றும் இறக்க குணமே காரணம் என்று அவன் எண்ணினான்.
நாய் குட்டிகளுக்கு ரொட்டி போடுவதை நிறுத்தினான், உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்தினான்.
அயராது உழைத்து அதில் கிடைக்கும் பணத்தை அவனுடைய குடும்பத்திற்கு முழுவதுமாக அவன் செலவு செய்தான்.
அவனுடைய குடும்பத்தின் நிலை முன்பு இருந்தது போல இல்லாமல் சற்றே முன்னேறியது. அப்பொழுதுதான் சுந்தரத்திற்கு புரிந்தது திறமையை கொண்டு வேலை செய்து வரும் பணத்தை குடும்பத்திற்கு செலவு செய்ய வேண்டும். தான தர்மம் செய்வது குடும்பத்தைக் காப்பாற்றாது என்று உணர்ந்தான். தனக்கு மிஞ்சியதே தர்மம் என்பதை புரிந்து கொண்டான்.
இறைவன் மனிதர்கள் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை தருவான் என்ற நம்பிக்கை மனிதர்கள் இடத்தில் இருந்தாலும் இன்றைய கலிகாலத்தில் நல்லவற்றை செய்பவர்கள் கெட்டதும் , கெட்டவற்றை செய்பவர்கள் நல்லதையும் அனுபவிக்கிறார்கள்.
இதுவே மனிதனிடத்தில் மனிதநேயம் குறைந்ததற்கான முதல் காரணமாகும்.