

காலை மணி ஏழு. ரகு அவசர அவசரமாய் அலுவலகம் கிளம்பினான்.
மனைவி உமா, குறுக்கிட்டாள்!
"ஏங்க பரபரப்பா கிளம்பறீங்க?"
"உம்! இன்னைக்கு கலெக்டர் மீட்டிங், குழந்தை தொழிலாளர் நடைமுறை சம்பந்தமா! அதான்..." என்றான்.
உமா தேம்பித்தேம்பி அழுதாள்.
"ஏன் என்ன ஆச்சு? திடீா்னு அழுகை..." எனக்கேட்டான் ரகு!
"நம்ம குழந்தை நினைப்பு வந்துச்சு, அழுதேன்!"
"யாா் வீட்டு குழந்தைகளையெல்லாம் வேலைக்கு போவதை தடுத்து நிறுத்த மீட்டிங் போடறீங்க, நம்ம குழந்தைய கண்டுபிடிக்க முடியலயே!" என்றாள்!
"என்ன செய்வது சொல்லு! எவ்வளவோ முயற்சி செஞ்சாச்சு, கண்டுபிடிக்க முடியலியே!"
ரகு - ரெவுன்யூ இன்ஸ்பெக்டர் மயிலாடுதுறையில் வேலை.
உமா - குத்தாலம் பகுதியில் அரசு பள்ளியில் ஆசிாியை. மயிலாடுதுறையில் சொந்த பூா்வீக வீடு. ஒரேபெண் குழந்தை, மூன்று வருடம் முன்பாக பிறந்த பத்துநாட்களில் திருடப்பட்டுவிட்டது.
அதோடு வேலைக்காாி சந்திராவும் மிஸ்ஸிங்.
எவ்வளவோ முயற்சி செஞ்சும் போலிசுக்கே சவாலாகிவிட்டது.
"சரி சரி, கவலப்படாதே குழந்தை எப்படியும் கிடைச்சுடும்" என ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினான்.
உமாவுக்கு முதல் பிரசவமே, சிசோியன் மாதாகோவில் ஆஸ்பத்திாியில்!
அப்போதே கீதா டாக்டர் கூறிவிட்டாா், "முதல் பிரசவமே ரிஸ்க், கடுமையான சிசோியன், அதோடு பிரசவ டைம்ல பிட்ஸ் வேற வந்திடுச்சு, அதனால வேறு குழந்தைக்கு வாய்ப்பில்லை."
அடுத்த குழந்தைக்கான வாய்ப்பும் இல்லை!
மாலை இருவரும் வீடுதிரும்பினாா்கள்.
ரகு மடியில் உமா, தேம்பித்தேம்பி அழுதாள்.
ரகு உமாவைத் தேற்றினான்.
"டேய் செல்லம் அழாத, நாமதான் போன வாரம் சமயபுரத்தாள்கிட்ட வேண்டிக்கிட்டு வந்திருக்கோம்! கிடைச்சுடும் கவலப்படாத. இல்லாட்டி ஹோம்ல போய் நல்ல குழந்தையா தத்து எடுக்கலாம்..."
மறுநாள் காலை ரகுவிற்கு போன் வந்தது.
புது நம்பராயிருந்தது.
உமாவே எடுத்தாள், எதிா்முனையில் பெண்குரல்.
"ஹலோ ரகு சாா் இருக்காங்களா?"
"நீ யாரம்மா? எங்கிருந்து பேசறே?" என்றாள் உமா.
"நான்தாம்மா உங்க வீட்டு வேலைக்காாி சந்திரா பேசறேன்!"
உமா கோபத்தின் உச்சிக்கே சென்று திட்டினாள்!
ரகுவும் கடுமையான வாா்த்தைகளால் திட்டித்தீர்த்தான்.
"அய்யா திட்டாதீங்க, உங்க குழந்தை எங்கிட்டதான் இருக்கா. கவலப்படாதீங்க பணத்துக்கு ஆசைப்பட்டு தப்பு செஞ்சுட்டேன், என்னை மன்னிச்சுடுங்க. போனவாரம் நீங்களும் அம்மாவும் சமயபுரம் கோவிலுக்கு வந்து அம்பாள் தரிசனம் முடிச்சுட்டு வந்தீங்க... மாவிளக்கு மாவு போடற இடத்தில என்னோட அக்கா ஒரு குழந்தையோட உங்க கிட்ட குழந்தைக்கு பசியா இருக்கு ஏதாவது தர்மம் செய்யுங்கன்னு கேட்டா... 'காசெல்லாம் கிடையாது' என நீங்க ரெண்டுபேரும் அவளை அழைச்சிட்டு ஹோட்டலுக்கு போய் இட்லி வாங்கிக்கொடுத்தீங்க, ஞாபகம் இருக்காம்மா? அந்த குழந்தைதான் உங்க குழந்தை! இன்னைக்கே பொறப்பட்டு வாங்க. அதே ஹோட்டலுக்கு வந்து போன்போடுங்க. உங்க குழந்தய உங்க கிட்ட கொடுக்கறேன்."
அவளே தொடர்ந்தாள், "அய்யா தயவு செஞ்சு போலீஸ் அது இதுன்னு போய்டாதீங்க. கவர்மெண்ட உத்தரவு போட்டிருச்சு... கைக்குழந்தையோட யாராவது பிச்சை எடுக்கறவங்களைபாத்தா பிடிச்சு டெஸ்ட் எடுத்து பிச்சைக்காரங்களை ஜெயில்ல போட்டு குழந்தய ஹோம்ல சேத்துடுவாங்களாம்." என்றாள்.
"சரி, நாங்க உடனே பொறப்படறோம். சமயபுரம் வந்து ஹோட்டல் வாசல்ல நின்னு போன் செய்யறோம்" எனகூறிவிட்டு, இருவரும் இரண்டு நாள் விடுப்பு எடுத்துட்டு கிளம்பினாா்கள்.
சந்திரா குழந்தையை உமா கையில் கொடுத்து, இருவர் காலிலும் விழுந்தாள்.
ரகு ஆவேசமாய் சந்திராவை பிடித்து போலீஸ் ஸ்டேசனுக்கு செல்ல ஆயத்தாமாகும் வேளையில் உமா தடுத்தாள்.
"வேண்டாங்க, நம்ம குழந்தை கிடைச்சுட்டா! அதுவே போதும்!சமயபுரத்தா கண்திறந்து பாத்துட்டா! அந்த சமயபுரத்தாளே நம்மகிட்ட குழந்தை ரூபத்தில வந்துட்டாங்க! அவ சந்திராவுக்கு கூலி கொடுத்திடுவா! வாங்க குழந்தையை கோவில் குளத்தில குளிப்பாட்டி அம்மாகிட்ட கொடுத்து வாங்கிப்போம். இனிமேல நம்ம குழந்தை அம்பாள் குழந்தைங்க."