

ஆபீஸ்க்கு சற்று தாமதமாக 11.00 மணிக்கு வந்ததால், வேலையை ஆரம்பிக்க கம்ப்யூட்டரை லாகின் செய்தான் அன்பு. உடனே போன் வந்தது; மொபைலை கையில் எடுத்தான்; அதில் தன் அம்மாவின் பெயர் காண்பித்தது. ரிங் சவுண்டை ஆஃப் செய்தான். ஒரு நிமிடத்தில் தானாக நின்றது மொபைலின் ஒளி. மீண்டும் அரை மணி நேரத்தில் போன் ஒலித்தது. எடுத்து பார்த்தான் அம்மாவிடமிருந்து தான். பக்கத்திலிருந்த சிவா, "எடுத்து பேசப்பா..!" என்றார். "உன் வேலையை பார்", என்று சைகையால் கூறினான் அன்பு.
மதியம் உணவு வேளை. சாப்பிட எழுந்தான்; போன் வந்தது; போனை எடுத்து யார் என்று கூட பார்க்காமல், "உனக்கு என்ன வேண்டும்..? எதுக்கு இப்படி காலையிலிருந்து, போன் பண்ணி என் உயிரை வாங்கறே...!" என்று சத்தமாக உரத்த குரலில் கத்தினான் அன்பு.
அங்கிருந்த அனைவரும் அன்புவை வியப்பாக பார்க்க, அவன் அவர்களைப் பார்த்து சாரி சொல்லி விட்டு, சற்று தூரம் நகர்ந்து வந்து, "சொல்லித் தொலை" என்றான்.
மறுமுனையில் அவன் M.D.! அவனை தன் கேபினுக்கு வரும்படி அழைத்தார்!
அன்புக்கு முகம் வியர்த்தது; முகத்தை துடைக்க கர்சிப்பை எடுத்தான்; அந்த புதிய கர்சிப்பில் 'அம்மா' என்ற கம்பெனியின் பெயர் இருந்தது. முகத்தை துடைத்துவிட்டு, கோபத்துடன் அதை தூக்கிப் போட்டு விட்டு, M.D. கேபினுக்குள் போனான்.
அன்புவை கோபமாக பார்த்த M.D. "போன் வந்தால் அய்யா எடுக்க மாட்டீங்களோ..? அப்படி எடுத்தால் இப்படி தான் பேசுவீங்களா..?" என்றார்.
"இல்ல சார், அது வந்து..."
"என்னய்யா மனுஷன்? நீ…, பெத்த தாயிடமிருந்து போன் வருகிறது, என்ன விஷயம் என்று கேட்க மாட்டாயா..? போயா.. வீட்டுக்கு போயா...!"
"சார் வீட்டுக்கா...? இதுக்கு... போய் ஏன் சார்? என்னை வீட்டுக்கு அனுப்பறீங்க...?" என்று அன்பு எதுவும் புரியாமல் கேட்க..,
"அன்பு, நான் உன்னை வீட்டுக்கு போக சொன்னது... உங்க அம்மாவை பார்க்க.. உங்க அம்மா செத்துட்டாங்கய்யா... உங்க அம்மா உனக்கு 11.00 மணிக்கு போன் செய்யும் போது கடைசியா உன்கிட்ட பேசணும்னு போன் பண்ணியிருக்காங்க, நீ எடுக்கல.. மறுபடியும் 11.30 க்கு போன் போட்டும் நீ எடுக்கல. போனை கையில பிடித்தபடியே கீழே விழுந்து இறந்திட்டங்களாம். இப்பதான் எனக்கு போன் பண்ணி உன்னை வீட்டுக்கு அனுப்ப சொன்னாரு உங்க அப்பா," என்று தன்னையும் மறந்து அழுதபடியே கூறினார் அன்புவின் M.D.