சிறுகதை: அன்பெனும் மழையிலே!

Woman and Plants
Tamil Short Story | Woman and PlantsAI Image
Published on
MM strip
MM strip

வீட்டின் கொல்லைப்புறத்தில் நின்று, அவள் ஆசை ஆசையாக வளர்க்கும் செடிகளையெல்லாம் சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா. வாடாமல்லி செடிகள் வாட்டதோடும், செண்பகப்பூ செடி சரியாக பூக்களை பூக்காமலும் காய்ந்து கொண்டிருந்தன. அவளுக்குப் பிடித்தமான சிவப்பு மஞ்சள் நிற ஹைபிரிட் வகை ரோஜா செடிகளும் கூட செழிப்பாக இல்லை! பசுமையாக பளபளக்கும் மணிபிளாண்டும், மணம் பரப்பும் துளசியும் கூட தளர்ந்து போய் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

அவளுக்கு நினைவு தெரிந்து, அவர்கள் வாடகை வீட்டில் குடியிருக்கும் போதிலிருந்தே… அம்மா இந்திரா, அந்த சிறிய காம்பவுண்ட் சுவரை சுற்றிலும் செடிகளை வளர்த்ததை பார்த்து இருக்கிறாள். சொந்தமாக வீடு கட்டி, குடி வந்த பின்பு அம்மா, அழகான மண் தொட்டிகளில் வித விதமான பூச்செடிகள், காய்கறி செடிகளை வைத்து வளர்க்கிறாள்.

தினமும் தவறாமல் மாலை நேரத்தில், வாளியில் தண்ணீர் பிடித்து செடிகளுக்கு ஊற்றுவது அம்மாவின் வழக்கம். அதிகமாக வெய்யில் காய்ந்தாலோ, தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்யாமல் இருந்தாலோ... அம்மாவுடைய முகம் அந்தச் செடிகளை விட வாடி இருக்கும்!

"ஏன் இந்த மழை இப்படி பெய்யாமல் பழி வாங்குது! இந்தச் செடிகளுக்கு நான் விடுகிற தண்ணீர் மட்டுமே போதாதே!" என்று புலம்புவாள். அதே சமயம், மழை நன்றாக பெய்து, செடிகள் நனைந்து இருப்பதை பார்க்கும் போது, செடிகளை விடவும் அம்மா முகம் மலர்ச்சியாக இருக்கும். அம்மாவுக்கு வெளியூருக்குப் போய், அங்கே தங்க வேண்டி வந்தாலோ, செடிகளின் நிலைமையைப் பற்றி கவலைப்பட்டு புலம்புவதே அதிகமாக இருக்கும்.

அம்மா பூக்களைப் பறிக்கும் போது கூட, செடிகளுக்கு வலிக்காமல் பறிப்பது போல் இனியாவுக்குத் தோணும். பூக்களை, காய்கறிகளை பறித்த பின்பு, கைநிறைய அவற்றை கொண்டு வருகிற போது, அம்மாவின் முகம் சந்தோசத்தால் மலர்ந்து பிரகாசமாக இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த செடிகளை பராமரிப்பதில், இனியாவுக்கு அதிக விருப்பம் இல்லை. எப்போதாவது அம்மா கூப்பிட்டுச் சொன்னால் மட்டும், அம்மாவுக்கு உதவியாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வருவாள்.

ஆனால் இப்பொழுது சில மாதங்களாக, அவள் செடிகளை வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் அதிக நேரத்தைச் செலவிடுகிறாள். அம்மாவுக்கு கால்வலி, முட்டிவலி அதிகமானதால், முன்பு போல் செடிகளை பராமரிக்க முடியவில்லை. செடிகளை சரியாக கவனிக்க முடியாததே பெரும் கவலையாக அம்மாவுக்கு இருந்தது. அதனால் அம்மாவுக்காக, செடிகளை கவனிக்கும் பொறுப்பை இனியா எடுத்துக்கொண்டாள்.

அவளும் அம்மாவைப் போலவே, வெளியே எங்கே போனாலும், நர்சரிகளில் இருந்து அழகிய தொட்டிகள், பூச்செடிகள், உரங்கள் என வாங்கி வருவாள். அவற்றை நட்டு வைத்து, தேவையான உரத்தையும் தண்ணீரையும் விட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறாள். 'இதற்கு முன்பு வீட்டைச் சுற்றிலும் செழிப்பாக, பசுமையாக இருந்த செடிகளெல்லாம், ஏன் இப்போது களையிழந்து, வாடிக் கொண்டிருக்கின்றன' என்பது தான் அவளுடைய சோகமான மனநிலைக்கு காரணம்!

"என்ன இனியா, ரொம்ப நேரமா செடிகளையே பார்த்துகிட்டு இருக்கே?!"

அம்மா இந்திராவின் குரல் கேட்டதும், அவளின் சிந்தனை கலைந்தது.

"அம்மா, அது வந்து... நான் தினமும் தண்ணீர் விட்டு, கவனித்து பார்த்துக்கிறேன். இருந்தாலும் இந்த செடிகள் எல்லாம் வாடி போன மாதிரி இருக்கு. முன்ன மாதிரி செழிப்பை பார்க்க முடியல! அதான்… ஒரே குழப்பமா இருக்கு!"

இனியாவுடைய கவலையில் உண்மை இருப்பதாக, அம்மாவுக்கும் தெரிந்தது. பெரும்பாலான செடிகள் சற்று வாடிப்போய் இருந்ததை பார்க்க முடிந்தது.

"அம்மா, உங்க கவனிப்புல இருந்தப்ப, அப்படி பூ பூத்து, காய்ச்சி பசுமையா இருந்த செடியெல்லாம், இப்ப ஏன் இப்படி இருக்குன்னு தெரியல? ஒருவேளை செடிகளெல்லாம் உங்களை மிஸ் பண்ணுதோ?!"

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மறுவாழ்வு தந்த மழலை!
Woman and Plants

இனியா சோகமாக சிரித்தபடியே கேட்டாள். அவள் சொன்னதைக் கேட்ட அம்மாவும் பதிலுக்கு, ஒரு சோகமான புன்னகையோடு, "ம்ம்... நீ சொல்வது கூட உண்மையா இருக்கலாம். இவங்கள கவனிக்க முடியாதபடிக்கு, இந்த கால்வலி, மூட்டுவலி வந்து என்னை ரொம்ப தொந்தரவு செய்யுதே! ஏதோ நீ இந்த செடிகளை வளர்க்கிற பொறுப்பை எடுத்துக்கிட்டது எனக்கு ஒரு ஆறுதலா இருக்கு!"

"அம்மா உங்களை மாதிரியே, எனக்கும் இந்த செடிகள் மீது ஒரு பிடிப்பு வந்துடுச்சு! அதான் வேற ஏதாவது நர்சரியில போய், பழையபடி செடிகளை செழிப்பா மாத்துறதுக்கு தேவையான மாற்று உரம், மண்ணு, மருந்துன்னு விசாரித்து, ஏற்பாடு செய்யலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்!"

"ஆமாம்மா அப்படி ஏதாவது செய்து தான் ஆகணும்! நான் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது, ஒவ்வொரு செடிகிட்டேயும் பேசுவேன். ஏதாவது ஒரு பெயர் வெச்சுக் கூப்பிடுவேன். ‘ஏன் இப்படி டல்லா இருக்கே! நீ என் செல்லமில்லையா?! அம்மாவுக்கு சீக்கிரமா பூ குடு!’ ன்னு பேச்சுக் குடுப்பேன். நான் ஓடி ஓடி... செடிகளைப் பார்த்து பராமரிச்சுக்கிட்டு இருந்தப்ப கிடைச்ச மனநிறைவு, சந்தோசம் எல்லாம் எனக்கு இப்ப இல்ல!”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அடையாளம்!
Woman and Plants

மனதில் ஒரு வலியோடு கவலையாக, அம்மா பேசுவதைக் கேட்ட இனியாவுக்கு சட்டென ஒரு யோசனை வந்தது. இந்தச் செடிகள் வாடியிருப்பதற்கான காரணம் என்னவென்று, அவளுக்கு தெரிந்து விட்டது. அம்மா இந்திரா, செடிகளோடு அன்பாகப் பேசுவதை அவளும் பார்த்திருக்கிறாள். ஆகாய மழை நீரைப்போல, அம்மா பொழிந்த அன்பெனும் மழையே செடிகளை செழிப்பாக வைத்திருந்தது என்பதை புரிந்துக் கொண்டாள். 'செடிகொடிகளுக்கும் உணர்ச்சிகள் உண்டு !’ என்று எங்கோ படித்த ஞாபகம் அவளுக்கு வந்தது.

அதற்குப்பிறகு இனியா, வீட்டிலுள்ள எல்லா செடிகளிடத்திலும் அன்போடு பேசிப்பழக… 'அன்பெனும் மழையை' பொழிய ஆரம்பித்தாள். அவளுடைய இந்த முயற்சியால், செடிகளெல்லாம் பழையபடி செழிப்பாக வளரும் என்று நம்பினாள். அடுத்த சில வாரங்களிலேயே ஒரு மாற்றத்தை, செழிப்பை அந்தச் செடிகளிடம், அவளால் பார்க்க முடிந்தது. மகள் இனியாவோடு சேர்ந்து, அவளுடைய அம்மாவும் செடிகளிடத்தில் தங்களுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com