சிறுகதை: செஸ்!

a woman with championship cup
Tamil short story a woman with championship cupImg credit: AI Image
என்.எஸ்.வி.குருமூர்த்தி

ஐம்பது வருடங்களுக்கும் மேலான எழுத்துலக அனுபவம். 1970 முதல் சிறு துணுக்குகள் எழுதி, கல்கி, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம், தினமணி கதிர், காமதேனு, இந்து தமிழ் திசை இவற்றிலும், சிறுவர்மணி இதழில் கடந்த 8 வருடங்களாக சுமார் 90 நாடகங்கள் அரங்கம் என்ற பகுதியிலும் பிரசுரமாகி உள்ளன. கல்கி ஆன்லைனில் இது வரை சுமார் 45 கதைகள், கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஒரு cartoon படத்துக்கு வசனம் எழுதும் போட்டியில் (இடம் சோழா ஹோட்டல் function - Overseas SANMAR...குழுமம்) ரைட்டர் சுஜாதா அவர்கள் கையால் இரண்டாம் பரிசு ஒரு விழாவில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது .

Updated on: 
Mangayar malar strip
Mangayar malar strip

தன் காதில் விழுந்த சத்தத்தை வைத்து அலமேலு மருமகளிடம் கேட்டாள், “யாரும்மா வந்திருக்கிறது?” பாட்டிக்கு கண் பார்வை கொஞ்சம் மங்கல்.

“எதிர்வீட்டு பாஸ்கர்தாம்மா... நம்ம சஞ்சீவுடன் செஸ் விளையாட வந்திருக்கான்..”

“ஆடட்டும் நல்லா.”

இரண்டு மணி நேரம் கழித்து சஞ்சீவ் சலிப்புடன் அம்மாவிடம், “அம்மா.. காபி போடும்மா. தலைவலிக்குது. இந்த பாஸ்கரை ஜெயிக்கவே முடியலே...”

பாட்டி பேரனிடம், “அப்படி என்னப்பா? செஸ்ஸில் நாம செய்யற தவறுதான் எதிராளிக்கு வெற்றி வாய்ப்பு தரும். அதுதான் முக்கியம்.”

“பாட்டி உங்களுக்கு செஸ் பற்றி கொஞ்சமும் தெரியாது.. கண்ணும் தெரியாது. அப்புறம் என்ன கருத்து சொல்றீங்க... சும்மா இருங்க. வெறுப்பேத்தாதீங்க...”

“சஞ்சீவ்.. அடுத்த முறை பாஸ்கர் வந்தா என்கூட விளையாடச் சொல்லு...”

“பாட்டி... அவன் மாவட்ட அளவில் சாம்பியன்.”

“இருக்கட்டுமே... நான் சொல்ற காய்களை நீ போர்டில் நகர்த்து போதும்.”

சஞ்சீவ் கிரிக்கெட் பேட்டுடன் கிளம்பிவிட்டான்.

ஒரு வாரம் ஓடிவிட்டது.

சஞ்சீவுடைய மொபைல் ரிங் சத்தம்.

அம்மா ஃபோனை எடுத்தாள். “சஞ்சீவ் குளிக்கிறான் பாஸ்கர். என்னது சாயந்திரம் வர்றியா? வா... வா...”

மாலை நாலு மணிக்கு பாஸ்கர் வந்தான்.

“என்ன சஞ்சீவ் விளையாடலாமா? அடுத்த மாசம் மாநில அளவில் போட்டிகள் சென்னையில் கலந்துக்கப் போறேன்.”

சஞ்சீவ், “எங்க பாட்டி செஸ் விளையாடுவாங்களாம் சின்ன வயசில்... பாட்டியோடு விளையாடுறியா?”

“பாவம்டா.. அவங்களுக்கே கண் பார்வை குறைவு. எதுக்கு சிரமம்?”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அப்பா மகள்!
a woman with championship cup

“சும்மா தொண தொணத்துக்கிட்டே இருக்காங்க.”

“ஓ.கே. ஆடலாமே...”

பாட்டியும் பாஸ்கரும் ஆடிய ஆட்டம் வித்தியாசமானது.

பாட்டி சோபாவில் அமர்ந்திருக்க பாஸ்கரும் சஞ்சீவும் ஆடினார்கள்.

பாஸ்கரின் ஒவ்வொரு மூவ் பற்றி பாட்டியிடம் சொல்ல, அதற்கான எதிர் மூவ் என்ன என்று பாட்டி சஞ்சீவிடம் சொன்னாள்.

பத்து நிமிஷத்தில் பாஸ்கருக்கு செக் மேட் வைத்தான் சஞ்சீவ்.

போர்டையே வெறித்துப் பார்த்த பாஸ்கர், “எப்படிடா நடந்துச்சு...? சரி அடுத்து ஒரு கேம்...”

தொடர்ந்து மூன்று கேம்கள். பாட்டி ஊகித்துச் சொல்லச் சொல்ல பாஸ்கர் எல்லாவற்றிலும் தோற்றான்.

“பாட்டி அடுத்த வாரம் வர்றேன்” - பாஸ்கர் போகும்போது “ப்ளைண்ட் செஸ் ஆடறாங்க. உலக சாம்பியன்கள்தான் ஆடுவாங்க...”

நம்பவே முடியாத சஞ்சீவ், பாட்டியிடம் “எப்படி பாட்டி.. போர்டைக் கண்ணால் பார்க்காமல் ஆடறீங்க?”

சிரித்த அலமேலு ஒன்றும் சொல்லவில்லை.

சஞ்சீவ், ‘அலமேலு + செஸ்’ என கூகுளில் தேடினான். உடனே கூகுள் ‘அலமேலு ஒரு இந்திய நாட்டு செஸ் வீராங்கனை’ என்று விவரமாக போட்டோக்களுடன் காட்டியது. போட்டோவை உற்றுப் பார்த்தான்.

பாட்டி சிறு வயதில்... கையில் ஜெயித்த கோப்பைகளுடன்!

logo
Kalki Online
kalkionline.com