

திவ்யாவுக்கு யோசிக்க யோசிக்க கோபம் கோபமாய் வந்தது.
'என்ன, இது...? ஒரு ரசிப்புத் தன்மை கூட இல்லாமலா ஒரு மனிதன் இருப்பார்...?
நெற்றியில் வைக்கும் பொட்டாகட்டும், கட்டும் சேலையாகட்டும், வாசலில் போடும் கோலமாகட்டும், சமைக்கும் சமையலாகட்டும், அலமாரியில் துணிகளை வகைவகையாய் மடித்து அடுக்கி வைப்பதாகட்டும்.... எதையாவது பார்த்து ரசித்து ஒரு வார்த்தை பாராட்டுவார் என்று பார்த்தால்... ஹூம்... ஜடமா என்ன...?'
அவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
கல்யாணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. ராஜகோபாலுக்கு ஒரு பிரைவேட் கம்பெனியில் மேலாளர் உத்தியோகம். நாற்பதாயிரம் சம்பளம்.
கல்யாணமாகும் வரை கூட இருந்தது, இருப்பது அம்மா மட்டும்தான். அப்பா இறந்து போய் இரண்டு வருடங்கள் ஆகின்றன. கூட பிறந்தவர்களும் யாருமில்லை.
ராஜகோபாலுக்கு தண்ணீர் வேண்டும் என்றால் கூட அம்மாதான் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். குளிக்கப் போகும்போது துண்டைக் கூட அவள்தான் எடுத்து வைக்கவேண்டும். அதேபோல அவன் குளித்துவிட்டு வந்ததும் போட்டுக்கொள்ள உள்ளாடை முதற்கொண்டு அவள்தான் கட்டிலில் எடுத்து வைக்க வேண்டும். கிச்சன் பக்கம் கூட வரவே மாட்டான்.
மனைவி வந்த பிறகு மாமியார் மெல்ல மெல்ல எல்லா வேலைகளிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டாள். திவ்யாவும் அதற்காக கவலைப் பட்டதில்லை.
வீட்டு வேலைகள் எல்லாவற்றிலும் தன்னை முழுதாய் ஈடுபடுத்திக் கொண்டாள். வீட்டை சுத்தம் செய்வது, கோலம் போடுவது, சமைப்பது, பாத்திரங்களை கழுவிப் போடுவது, துணிமணிகளை துவைத்து காயப்போடுவது, மடித்து அடுக்கி வைப்பது, தேவையானவைகளுக்கு இஸ்த்ரி போடுவது என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, தானே செய்தாள். மாமியாருக்கு எந்த பாரமும் இல்லாமலும் பார்த்துக் கொண்டாள்.
ஆனால் ‘அது‘ மட்டும் அவளை ரொம்ப நாளாக உறுத்திக் கொண்டேதான் இருந்தது.
ஒவ்வொரு வேலையையும் பார்த்துப் பார்த்துதான் செய்கிறாள். இன்றுவரை மாமியாரோ புருஷனோ ஒருவார்த்தை கூட பாராட்டியதில்லை. மாமியார், சரி... எதிர்பார்க்க முடியாதுதான்...! ஆனால் கட்டிய புருஷன்? அவராவது சொல்லலாமே. பாராட்டி... ஒரு வார்த்தை...
இவ்வளவு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு அதுவும் நிறைவாக செய்கிறோமே... ஒன்று கூடவா அவரை ஈர்க்கவில்லை?
அன்று இரவு அவனிடம் தனது ஆதங்கத்தை மெல்ல வெளிப்படுத்தினாள் அவள்.
அதை கொஞ்சமும் எதிர்பாராத அவன், "ஸாரிப்பா... நீ செய்யறது எல்லாமே நல்லாத்தான் இருக்கு... நல்லா இல்லைனாத்தானே நல்லா இல்லைன்னு சொல்லுவோம். நல்லா இருந்தா எதுவும் சொல்றதில்லை அல்லவா. அதானே பொதுவான நடைமுறை. சரி... நீ நல்லாவே சமைக்கறே, ருசியாவும்தான் இருக்கு. வீட்டை சுத்தமா வச்சுக்கறே... துணிகளை அழகா மடிச்சு வைக்கறே...! இதெல்லாமே சாதாரணமா ஒரு மனைவி செய்யற கடமைகள்தானே?! ஆனாலும் ஏனோ பாராட்டணும்னு எனக்கு இதுவரை தோணலை. நீ எதிர்பார்த்திருப்பேன்னும் எனக்கு இதுவரைத் தோணலை. சரி விடு. இனிமே பார், அசத்திடறேன், அசத்தி..." என்றான்அவன் கண்களை சிமிட்டியபடி.
காலையில் ஆபிஸ் கிளம்பும் முன் சாப்பிட உட்கார்ந்தான். அம்மாவும் பசிக்கிறது என்று கூடவே வந்து உட்கார்ந்தாள்.
திவ்யா இட்லியை சுடச்சுட எடுத்து வந்து தட்டில் வைத்தாள். விரல் வைத்துப் பார்த்துவிட்டு, "ஹை... மல்லிப்பூ இட்லிம்பாங்களே, அது இதுதானோ..." என்று மனைவியைப் பார்த்து, "திவ்யா இட்லி சூப்பரா இருக்கு..." என்றான். அம்மா திகைத்துப்போய் அவனது முகத்தை உற்றுப் பார்த்தாள்.
திவ்யா சட்னியை எடுத்துப் போடும்போது, "ஓ, மல்லிச்சட்னியா... சூப்பரா இருக்கே... மல்லிப்பூ இட்லிக்கு மல்லிச் சட்னி... சூப்பர் காம்பினேஷன்..." என்றான்.
இப்போது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அதிர்ச்சியும் திகைப்புமாய் அவனைப் பார்த்தாள், அம்மா.
"ஏன்டா நானும் இருபத்தஞ்சு வருஷமா இட்லி சுட்டு போட்டுக்கிட்டிருக்கேன், விதவிதமா சட்னி பண்ணிப் போட்டிருக்கேன், சிலசமயம் ரெண்டு சட்னி கூட பண்ணியிருக்கேன்... ஒருநாளாவது இதுமாதிரி பாராட்டி இருக்கியா... என்னடா, இன்னிக்கு மட்டும்...? இல்லை, இன்னிக்குத்தான் இட்லியையும் சட்னியையும் பார்க்கறியா...?"
முறைத்தபடி சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் அவன் முழிக்க, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் திவ்யா.