

"சே! என்ன வாழ்க்கை இது? என்ன மனிதர்கள் இவர்கள்?உறவுகளும் அப்படித்தான்; நண்பர்களும் அப்படித்தான். காரியம் என்றால் குழைகிறார்கள்… காரியம் ஆனதும் கவுந்தடிச்சுப் படுத்துக் கொண்டு கண்டுக்காம இருந்து விடுகிறார்கள். இனிமேல்… No more friends and no more relatives!” என்றான் வசந்தன் வாழ்க்கை வெறுத்துப் போய்.
காதுகளில் கடவுளின் கனிவான குரல் அசரீரியாய்…. ”No more friends.. என்று வேணும்னா சொல்! No more relatives என்று சொல்லாதே! காரணம், நண்பர்களை வேணா நீ தீர்மானிக்கலாம்! ஆனால் உறவை நான்தான் தீர்மானிக்கிறேன்!" என்றது குரல்.
"என்ன வேணுமானாலும் கடவுள் சொல்லட்டும். ஆனால், மனசு கேட்க மாட்டேங்குதே?! என்ன செய்ய?"
"என்ன உன் பிரச்னை?"
"உறவும் நட்பும் காசுக்காகத் தானே பல்லிளிக்கிறது?"
"உண்மைதான்! ஆழ யோசித்தால் நீ நினைப்பது சரிதான். உறவும் நட்பும் காசைக் கருதித்தான். ஆனால், உறவையும் நட்பையும் ‘மகசூல் தரும் காசு’ என்று மனக்கோட்டை கட்டாதே!
வசூல் வழங்கும் வட்டியல்ல உறவும், நட்பும்! அவை ஒருவகையில் மகிழ்ச்சி தரும் அந்தஸ்தைக் கொடுக்கும் முதலீடுகள்! அவ்வளவே!
‘அசரீரிகள்’ ஆண்டவன் குரலாய் அடிமனதிலிருந்து ஒலிக்கின்றன!. அதை ‘ஆழ்மன வெளிப்பாடு!’ என்றாலும் ‘ஆன்மீக புலப்பாடு!’ என்றாலும் அர்த்தம் ஒன்றுதான்.
"நான் சாகறதுக்குள்ள உனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லீட்டுச் செத்துப் போயிடணும்னு நெனைக்கிறேன்…! ஆச்சு! எனக்கும், உனக்கும் வயசாச்சு! இவ்வளவு நாள் மறைச்சதே தப்பு…! சொல்றேன்! .. நல்லாக் கேட்டுக்க!" என்றார் மயில்சாமி தன் மனைவியிடம்!
பூங்கோதைக்குத் தூக்கி வாரிப்போட்டது., ‘இந்த மனுஷனைக் கல்யாணம் கட்டி குடும்பம் நடத்தி முப்பதாண்டு முடியப்போகுது…. இத்தனை நாளாய் எனக்குத் தெரியாம ஒரு ரகசியத்தை இவர் மறைச்சு வச்சிருக்காரா?! எப்படிநான் அதைக் கண்டுபிடிக்காம ஏமாளியா இருந்துட்டேன்!’…
‘உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாட்டில்.., 'என் தேவையை யாரறிவார்..?’னு வியட்நாம் வீடு சிவாஜி கேட்க.. என்ன சொல்லப்போறாரோன்னு எதிர்பார்க்கும் பத்மினி முகமாய், வெளிறியது பூங்கோதை முகம்.
"இதபாரு!, நமக்கு இருப்பது ஒரே பையன். பிள்ளையப் பெத்தாக் கண்ணீரு! தென்னையப் பெத்தா இளநீருன்னு பாட்டே இருக்கு.! பையனை நம்பாதே! என்னைக்குக் கட்டின கையப் பிடிச்சுட்டு வீட்டை விட்டு வெளியேறி, உன் காலை வாரிவிடுவான்னு தெரியாது! பாசத்தைக் காட்டும் பெண்ணா இருந்தாக்கூட, அவ நல்லது கெட்டதுன்னா வந்து நிப்பா! பையன் அப்படி இல்லை!. அனாதை விடுதில அம்போன்னு விட்டுட்டு போயிடுவான்!. பிள்ளையப் பெத்தாக் கண்ணீருதான்!" என்றார் மயில்சாமி.
'அதெல்லாம் இருக்கட்டும் நீங்க என்ன சொல்ல வரீங்க? சொல்லுங்க பீடிகை போடாம.!" என்றாள் பூங்கோதை.
"இத பாரு, நீ மகனுக்குப் பிள்ளை பொறந்திருக்குன்னு பேரப்பிள்ளையப் பார்க்க, மகன் கேட்டான்னு வாலிண்டயரி ரிட்டயர்மெண்டு வாங்கீட்டே! போகட்டும்! ஆனா.. உன் ரிட்டயர்மெண்ட் பெனிபிட்ல லம்பா வந்த பணத்துலதான் உன் மகன் கவனமிருக்கும்! ஜாக்கிரதை! காலம் கலிகாலம். யாரையும் நம்பாம…"
"நம்பாம?"
"அதை வச்சு நம்ம வீட்டுப் பின்னாடி இருக்கிற எடத்துல ஒரு சின்னதா வீடு கட்டி, அதை வாடகைக்கு விடு! வாடகை நிரந்தரமா வரும். பாங்க் வட்டியைவிட அதிகமா வரும் வாடகைப் பணம்!
"மகனையோ மகளையோ மருமகளையோ யாரையும் நம்பாதே! கடவுள் கடைசிக் காலத்தில் நமக்குப் பிள்ளையாக் கொடுக்கிறது வாடகைக்கு விடற வீடு! அந்த வாடகை உனக்குக் கூழோ கஞ்சியோ யார் தயவுமில்லாம நீ குடிக்க வழி கொடுக்கும்!. மாறி ஏமாந்தே.. இருக்கறதைப் பிடுங்கீட்டு விட்டுடுவாங்க…! சொத்தா வீடு வச்சிருந்தீன்னா.. அதுக்காகவாவது உனக்கு ஒரு போலி மரியாதை கிடைக்கும்"னு சொல்ல, மலைத்துப் போய்.. "பூ! இவ்வளவுதானா? நான் ரகசியம்னதும் என்னவோ ஏதோனு நெனைச்சுட்டேன்!" என்றாள் கண்ணைக் கசக்கியபடி..
"அடி அசடே! வீடுங்கற பிள்ளை.. நம்மைவிட்டு எப்பவும் ஓடிப் போய்விடாது! இன்னைக்கு உலகம் அப்படி இருக்கு!. எனக்குப் பின்னாடி நீ கஷ்டப்படக்கூடாது பாரு?! அதுதான் இந்த ரகசியத்தைச் சொன்னே"ன்னார்.
பூங்கோதை கண்கலங்கினாள்!
"ஏண்டா வயசு இருபதாகுது!. இன்னும் எத்தனை நாளைக்கு வயசான அப்பனை வேலைக்கு அனுப்பீட்டு, நீ, வெட்டித் தீவனம் தின்னுட்டு ஊரைச் சுத்தீட்டிருப்பே?" மகனைக் கடிந்து கொண்டாள் மரகதம்.
அவளுக்கு கணவன் கஷ்டப்படுவதும் மகன் ஆளாகி சும்மா சுற்றித் திரிவதும் கடுப்பாக இருந்தது.
மகன் மகேஷ் அம்மா வார்த்தையைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை! மாறாக, "அம்மா சும்மா வேலை, வேலைனு பினாத்தாதே..! நான் படிச்ச படிப்புக்கு வேலை, தானா வரும்!! அதிர்ஷ்டம் வந்து நம் கதவைத் தட்டும்னு ஜோசியக்காரனே சொல்லீருக்கான்! நான் ஓகோன்னு வருவேனாம்!" என்றான்.
"ஏண்டா எங்க வயசுல ஜோசியத்தை நம்பினாச் சரி! உன் வயசிலேயே ஜோசியத்தை நம்பி உழைக்காம இருந்தா எப்படி டா?!" என்று கடிந்தாள் மரகதம்.
"அம்மா..! பாரேன்.. நீயே.. ஆச்சரியப் படப்போறே!… 'தென்றல் வந்து என்னைத் தொடும்!’ என்ற பாட்டை உரக்கப் பாடீட்டு சொன்னான். "நான் சினிமாவுல ஓஹோன்னு வருவேனாம்! அதான்… காத்திருக்கேன்."
மரகதமும் சினிமாப் பாட்டெல்லாம் ரசிச்சுக் கேட்பவள்தான். அவள் சொன்னாள், "அட மக்கு..! அந்தப் பாட்டை வச்சா நீ கற்பனைக் கோட்டை கட்டீட்டிருக்கே…?! அதை முழுசாக் கேளுடா மக்கு..!" என்று சொல்லிவிட்டுச் சொன்னாள்.
“தென்றல் வந்து என்னைத் தொடும் – ஆஹா சப்தமின்றி முத்தமிடும்….!” என்று மரகதம் சொல்ல,
"ஆமாம்மா! அதிர்ஷ்ட தேவதையே வந்து என்னை முத்தமிடப்போறா..! அப்ப, கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்! கவலைப் படாதே!" என்றான் மகன் மகேஷ்.
"மக்கு மகேஷே..! தொடர்ந்து பாட்டைக் கேளுடா…"
"தென்றல் வரட்டும்.., முத்தமிடட்டும்.., ஆனா.. நீதான் அதுக்கு அடுத்த வரில “பகலே போய்விடுங்கறயே!” விழிப்பை விரட்டியடிக்கிற நீ, அதுக்கு அடுத்த வரியிலயாவது முழிச்சிட்டயா… பகலே போய்விடு..! அப்புறம்.. இரவே பாய்கொடுன்னா…!? பகல்லயும் உழைக்க மாட்டேன். ராத்திரியும் விழிக்கமாட்டேன்னா..? மேத்தா சொன்னா மாதிரி ஆகப்போகுது உன் வாழ்க்கை..!!"
“வரங்கொடுக்கும் தேவதைகள் வந்த போது தூங்கினேன்..! வந்தபோது தூங்கிவிட்டு வாழ்க்கை எல்லாம் ஏங்கினேன்னு ஏங்கிச் சாகப்போறே! நீ ஏமாறு… ! என்னையும் அப்பாவையும் ஏண்டா உன்னை நம்பி ஏமாறச் சொல்றே..??இப்பவே வீட்டைவிட்டுப் போ…! உழைப்பின் அருமை தெரிஞ்சாத் திரும்பிவா..! இல்லே, எங்களுக்கு வாரீசே பொறக்கைலனு நெனைச்சுக்கறோம்! அப்படியே போய்ச்சேர்ந்துடு"ன்னு திட்டித் தீர்மானமா அனுப்பி வச்சா!