சிறுகதை: கொரோனா டைம்ஸ்... கணவர் படுத்திய பாடு!

Tamil Short Story Corona Times
Husband and Wife Checking Fever
Published on

- சு. வைத்தியநாதன்

என் அன்புக் கணவர் நல்லவர். வல்லவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை உள்ளவர். கவிதை எழுதுவார். கதை எழுதுவார். நகைச்சுவை ரசம் உள்ளவர்.  கதையும் விடுவார்! நாவன்மை படைத்தவர். செழிப்பான தஞ்சை மாவட்டத்தில், காவிரி கரையில் பிறந்து வளர்ந்தவராச்சே! சங்கீதம் தெரியவிட்டாலும், ஞானத்துடன் ரசிப்பார். என்னை மணம் முடித்தவராச்சே! என்ன கணவர் புராணம் நீண்டு கொண்டே போகிறது என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. ஆனால்... பெரிய ஆனால், அவரது எல்லா வலிமையையும் மறைக்கும் ஒரு பலவீனம் அவரது பயம். தெனாலி சினிமாவில் கமலஹாசனின் பயம் தோற்றுவிடும் அளவுக்கு பயம். சிறு சிறு பிரச்சனையும் அவருக்கு மலைபோல் பூதாகாரமாக தெரியும். 

கொரோனா தொற்று நோய் ஆரம்பம் ஆனதும் அவரது பயம் கொரோனா ஸ்கோர் போல் தினம் தினம் ஏறிக்கொண்டே போனது. அதனால் தற்காப்புக்காக டிவி, வாட்ஸ்அப், நண்பர்கள் பரிந்துரை, புத்தகங்கள், நாளிதழ், பத்திரிகைகள், வதந்திகள் என ஒன்றுவிடாமல் தேடி தேடி கொரோனா பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொண்டார். விளைவு, தெரிந்த மூலிகை, இலை,  பூ, காய், கனி, விதை என தாவர பட்டாளத்தையே வாங்கி வந்தார். யோகா,  பிராணாயாமம் உடற்பயிற்சி என பற்பல தற்காப்பு கலை பற்றி முழுதும் அறிந்துகொண்டார்.

அத்துடன் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை.  அவை பற்றிய முக்கியத்துவத்தை எனக்கு அவரது சொல் ஆற்றலால் மணிக்கணக்கில் விளக்குவார்.  நான் ராமர் முன் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயர் போல வாய் பொத்தி காதை கூர்மையாக வைத்துக் கொண்டு, கண்ணோடு கண்ணோக்கி அமர்ந்து அவரது விளக்கத்தை கேட்டுக்கொண்டிருப்பேன். நான் காதில் பஞ்சு வைத்திருப்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மஞ்சள் பொடி, இஞ்சி, எலுமிச்சை பழம், பூண்டு என கை வைத்தியத்துக்கு வீட்டில் உள்ள பாதி சாமான்கள் எல்லாம் பலி ஆனது. பரவாயில்லை. ஆனால் அவை யாவற்றையும் நானும் குடிக்க வேண்டும் என அன்பான அதிகார துஷ்பிரயோகம் தான் என்னால் தாங்க முடியாத தண்டனை. அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி, என எல்லாவித மருந்து, மாத்திரைகளும் எங்கள் வீட்டுக்கு வந்து கொலு போல அலங்கரித்தது. அடுத்த புது மருந்து வந்ததும் முந்தையது தேர்தலில் தோற்ற அரசியல்வாதி போல தனித்து நிற்கும். நோய் எதிர்ப்புக்காக வாங்கிய மருந்து, மாத்திரைகளை நானும் சேகரித்து பிறகு அவருக்கு தெரியாமல் குப்பையில் கொட்டாமல் எங்கள் வீட்டு செடிகளுக்கு போட்டதால் அவை சிறப்பாக இலை, பூ, காய், என பலன் தந்து தனி கதை. 

ஒரு தும்மல், இருமல், சற்று உடல் வலி வந்துவிட்டால் தொலைந்தது. அவரே அதை கொரோனாதான் என்ற முடிவுடன் அடுத்து அடுத்து நடவடிக்கைகளை தயார் செய்வார். எந்த டாக்டரை பார்க்க, எந்த ஆஸ்பத்திரியில் காட்ட, எந்த மாதிரி பெட்டில் சேர வேண்டும், அதற்கான செலவை எந்த பேங்க், கிரெடிட் கார்டில் எடுக்க வேண்டும் என அரசின் பட்ஜெட் போல ஒன்று  தயாராகும். முடிவாக அவரே அவரது கைபட ஒரு உயில் எழுதியது யாரிடமும் சொல்லாத உண்மை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஊனம் பலஹீனமல்ல!
Tamil Short Story Corona Times

தெர்மாமீட்டர், ஆக்சிமீட்டர், ஆவி பிடிக்கும் உபகரணம், பிபி பார்க்கும் உபகரணம் என ஒன்றுவிடாமல், ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிய உபகரணங்கள் எல்லாம்  எங்கள் வீட்டுக்கு அழையா விருந்தாளியாக தஞ்சமடைந்தது. கொஞ்சம் சந்தேகம் வந்தால் அவரே தனது கழுத்தை பத்து முறை தொட்டு தொட்டு பார்த்தபின், என்னை வேறு தொட்டுப்பார் என பிடுங்கல். தெர்மாமீட்டரை என்னிடம் கொடுத்து நீயே பார்த்துவிடு என கெஞ்சுவார். சரி என பார்த்துவிட்டு நார்மல்தான் என்றால் அது டிஜிட்டல் அதனால் பழைய தெர்மாமீட்டரை தேடி கண்டுபிடித்து, அதுவும் சரி என்று தெரிந்ததும் அடுத்து ஆக்ஸிமீட்டரில் பார்ப்பார். பார்த்துவிட்டு 96/97 என காட்டினால், என்னையும் சரி பார்ப்பார். எனது சமையல் ஒருநாள் உப்பு சப்பில்லாமல் ஆகிவிட்டால், தொலைந்தது. அன்று சாப்பிட்ட பின் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி விடும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அவர் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் யார் யாரிடமோ  கேட்டு, வாட்ஸ்அப் பல்கலைக்கழகம் சொல்லும் நூறு நூறு படிப்பினைகள், எல்லா தெய்வங்களின் மகத்துவம், அதற்காக சொல்ல வேண்டிய பாடல், பூஜை என பாடம் படிப்பார். அவற்றை ஒரு பழைய டைரியில் எழுதி (கடைகள் மூடப்பட்டதால் 200 பக்க நோட்டு புத்தக செலவு மிச்சம்) படித்து, மனப்பாடம் செய்வதுடன் என்னையும் படியென நச்சரிப்பார். எனக்கு தெரிந்த பல ஸ்லோகங்களை, முன்பே அவர் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டினாலும், அவரது சுய கவுரவம் அப்போதெல்லாம் தடுத்தது. ஆனால் கொரோனா காலத்தில், என் மூலம் லலிதா சஹஸ்ரநாமம், சுப்பிரமணிய புஜங்கம், போன்ற கடினமான சுலோகங்களை கற்றது கொரோனாவின் நற்பயன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ரயில் பயணம்!
Tamil Short Story Corona Times

தினமும் அவரது கொரோனா புராணத்தையும், அன்றைய முக்கிய செய்திகளையும், தெரிந்த, தெரியாத நண்பர்கள், உறவுக்காரர்கள், பக்கத்து வீட்டு வாசிகள் என ஒருவர்  விடாமல், போன், வாட்ஸ்அப், ஈமெயில் என எல்லா விதத்திலும் மணிக்கணக்கில் சொல்வார். அவற்றை எல்லாம், அவர்கள் கூறியதையும் சேர்த்து  எனக்கு மறு ஒலிபரப்பாகும் என்பது கசப்பான உண்மை. நானும் வேறு வழியின்றி கேட்டு வைப்பேன். தினமும் எந்த எந்த நாட்டில், ஊரில், கொரோனா கோரத்தாண்டவமாடியது, எத்தனை மரணங்கள், ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் எண்ணிக்கை என தெரிந்துகொண்டு எனக்கு பாடம் படிக்காவிட்டால் அவருக்கு மட்டுமின்றி எனக்கும் தூக்கமே வராது.  இத்துடன் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட கதை பெரிய புராணம்.

இப்படியே நாட்கள், வாரங்கள், மாதங்கள் உருண்டன. இறைவன் அருளோ, பக்தியுடன் சொன்ன மந்திரங்களின் பலனோ, அரசாங்கம், மருத்துவர்கள், செவிலியர்கள் செய்த சேவையின் பலனோ, கொரோனா மெதுவாக குறைந்தது. என்னவரின் கொரோனா பயம், புராணம் குறைந்தது பெரிய மலை போன்ற பாரத்தை  இறக்கி வைத்தாற்போல் இருந்தது. கொரோனா என்ற கொடிய தொற்று நோயில் இருந்து விடுபட்டதைவிட, என்னவரின் பயம், பாடங்கள் குறைந்ததால் மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com