சிறுகதை: ஊனம் பலஹீனமல்ல!

Tamil Short Story - Disability is not weakness!
Girl Seeing Kurinji Flower
Published on

குமுதாவுக்கு அப்படியே காரிலிருந்து இறங்கி ஓடிப்போய், மலையில் மந்தகாசமாய் பூத்துக் கிடக்கும் குறிஞ்சிப் பூக்களைத் தழுவிக் கொள்ள ஆசைதான்! ஆனாலும், என்ன செய்வது?

அன்புக்கும்,

அரவணைப்புக்கும்,

அழகுக்கும்,

ஆரவார சொத்துக்கும் அதிபதியாய்ப் படைத்த அவளை,

ஆண்டவன் அந்த விஷயத்தில் பழி வாங்கி விட்டாரே!

ஆமாம்! அவளுடைய வலது கால் விளங்காது!

அப்பாவுக்கு அபரிமித சொத்து!

அரசில், உயர் அதிகாரப் பதவி!

கடல் போல் வீடு!

படகு போல் கார்கள்!

பக்குவமாய்ப் பணியாற்றும் பணியாளர்கள்!

இத்தனை இருந்தும், அவளால் நினைத்தபடி ஓடியாட முடியாத வாழ்க்கை!

எல்லோரைப் போல் இயல்பாய் இருக்க முடியாத ஏக்கம்!

அது, சர்க்கரை வியாதியைப் போல், இந்தப் பிறவி முழுவதற்கும் தொடரும் சோகம்!

அவள் பெற்றோர்கள் அவளை நன்றாகவே வளர்த்தார்கள்! நகரின் முக்கிய கான்வென்டில்தான் படிக்க வைத்தார்கள்! அப்படிப் படிக்கும்போதுதான் அந்தப் பள்ளியிலிருந்து, கல்விச் சுற்றுலாவாக அந்த மலைப்பகுதிக்கு மாணவிகளை அழைத்துச் சென்றார்கள். அவளும் தோழிகளுடன் போக ஆசைப்பட, அவள் தந்தையோ காரிலேயே அழைத்துச் சென்றார். அப்பொழுது அவள் எட்டாம் வகுப்பில் இருந்தாள்! தோழிகளுடன் செல்ல முடியாத ஆதங்கம் சிறிது இருந்தாலும் தந்தை தன் நிலை எண்ணி, காரிலேயே அழைத்து வந்தத்தில் அவளுக்கும் மகிழ்ச்சிதான்!

குறிஞ்சியாண்டவர் கோயிலில் சாமி கும்பிட்டபோது, அவளுக்குள் அந்த வைராக்கியம் தலைதூக்கியது.

‘குறிஞ்சி மலை முருகா! எனக்கு எதையாவது சாதிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை அதிகமாகவே கொடுத்திருக்கிறாய்! எந்த வழியில் சென்று சாதிப்பது என்று நீதான் வழி காட்ட வேண்டும்! அடுத்த முறை குறிஞ்சி பூப்பதற்குள்ளாக அது நிறைவேற வேண்டும்! அதற்கு, இந்த அபலைக்கு நீ அருள வேண்டும்!’ என்று வேண்டியபடி, அதற்காக எவ்வளவு உழைப்பை வேண்டுமானாலும் போட ஆயத்தமாகி விட்டாள்!

சென்னை விமானம் திருவொற்றியூரைச் சுற்றி, கடற்கரை ஓரத்தில் துறைமுகத்தையும் தாண்டி, இடதில் திரும்பி திரிசூலத்தை நோக்கி மெதுவாக உயரத்தைக் குறைத்தபடி பறக்க, குமுதா தான் எட்டாவது படித்தபோது மலர்ந்திருந்த குறிஞ்சிப் பூக்களைச் சென்று பார்த்ததையும், குறிஞ்சியாண்டவரிடம் வேண்டிக் கொண்டதையும் எண்ணியபடி, இறங்கத் தயாரானாள்!

பாரிசிலிருந்து துபாய் வந்து, துபாயிலிருந்து சென்னை பயணம்! பன்னிரண்டு ஆண்டுகளுக்குள்ளாக அவள் சாதித்தவை ஏராளம்! அதனை எண்ணுகையில் அவளுக்குள்ளே ஒரு பெருமிதம் பொங்கியது!

அந்தச் சுற்றுலா முடித்த கையோடு, முதல் நாள் பள்ளி சென்ற போதே அந்தச் சந்தர்ப்பம் அவளுக்காகக் காத்திருந்தது! அவளுடைய உடற்பயிற்சி ஆசிரியை, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் லிஸ்டில் அவள் பேரையும் இணைத்திருந்தார்! அது ஊனமுற்றவர்களுக்கான விளையாட்டுப் போட்டி! நீளம் மற்றும் உயரம் தாண்டலில் அவள் பெயர் இருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ரயில் பயணம்!
Tamil Short Story - Disability is not weakness!

தெய்வ கடாட்சமே அதற்குக் காரணமென்று உள்மனம் உற்சாகப் புயலெழுப்ப, அவள் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள்!

“பூக்களிலே நானுமொரு 

பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்

பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன் 

பொன்விரல்கள் தீண்டலையே

பொன்விரல்கள் தீண்டலையே 

பூமாலை ஆகலையே!”

என்ற பாடல் அவளுக்கு மிகவும் பிடித்துப் போக, மனதின் ஓரத்தில் அது எப்பொழுதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது!

பொன் விரல்களால் தீண்டப்பட்டு பூமாலை ஆக வேண்டுமென்று விருப்பப்பட்டாள்!

அதற்கான வழியாகவே அவளுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முன்னேறினாள்! முதலில் நடக்கவே சிரமப்பட்டவள், அதீதப் பிரயத்தன பயிற்சிகளுக்குப் பிறகு ஓடவும், உயரம் தாண்டவும் செய்தாள்! அவள் தாண்டிய நீளத்தைக் கண்டு அவர் பயிற்சியாளரே பிரமித்துப் போனார்! விடா முயற்சியும், உள்ள உறுதியும் மெல்ல அவளை உயரே ஏற்றின!

மாவட்ட, மாநில அளவுகளைக் கடந்து பாராலிம்பிக்ஸ் 24 லில் பங்கேற்கும் பாக்கியம் பெற்றாள்! முழு மனதையும் ஒன்றில் ஈடுபடுத்துகையில் மொத்த உடலும் அதற்கேற்றாற்போல் செயல்படும் என்பது அவள் கண்ட அனுபவ  உண்மை!

உறக்கம், உடல் வலிக்கெல்லாம் ‘பை..பை’.. சொல்லி விட்டு கருமத்தில் கவனம் செலுத்தினாள்!

பாராலிம்பிக்ஸ் 24 ல், உயரம் மற்றும் நீளம் தாண்டலில் தங்கப் பதக்கங்களை வென்றாள்!

விமானம் தன் பின்னங்கால்களால் தரையை முத்தமிட்டு, முன்னங்கால்களால் அரவணைத்துக் கொண்டது!

எவ்வளவு உயரே பறந்தாலும் இறங்கிய பிறகல்லவா அதன் பயன் நமக்கு!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சகுனம்!
Tamil Short Story - Disability is not weakness!

ஹான்ட் பாக்கிலிருந்த இரண்டு தங்கப் பதக்கங்களையும் எடுத்துக் கழுத்தில் போட்டுக் கொண்டு, குமுதா எழுந்தாள்!

அவள் வாசலுக்கு வந்தபோது, மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது!

அவள் தாயும், தந்தையும் ஆனந்தக் கண்ணீர் மல்க முன் வரிசையில் நின்றனர். வீடு வந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு டிவியை ஆன் செய்தாள்! மீண்டும் குறிஞ்சி மலர்ந்திருப்பதாகச் செய்தியில் காட்டினார்கள்!

ஊனம் பலஹீனமல்ல! மனவுறுதி படைத்தவர்களுக்கு அதுவே பலம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com