சிறுகதை: 'என்னைப் பார்த்து நிலவு சிரித்தது'!

Tamil short story - 'ennai parthu nilavu siriththathu
Woman seeing moon
Published on

பீரோவையாவது சுத்தம் செய்யலாம் என ராதா நினைத்து, மதிய வேளையில் அதைத் திறந்தாள். வானொலியில், 'மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்' என்ற பாடல் ஒலிக்க, ரசித்தபடியே ஒவ்வொரு புடவையாக எடுத்து கீழே வைத்தாள். மஞ்சள்நிறப் புடவை, சிகப்பு பார்டர் என இருந்த பழைய பட்டுப் புடவையை கையில் எடுத்தவுடன், திருமணநாள் நினைவில் வந்தது. இருபது வயதில் என்னவெல்லாம் கனவுகள் இருந்தன. திருமணம் என்றால், ஒரு இளைஞன் தனக்காகவே வருவான், தன்னைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிப்பான். விதவிதமான கனவுகள் ...

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவளின் இளவயது ஆசைகளை நினைத்து அவளே சிரித்துக் கொண்டாள். உண்மையில் நல்ல கணவன் தான் கிடைத்திருக்கிறான். ஆனால் அவனை அவள் புரிந்து கொண்ட அளவிற்கு அவன் அவளை புரிந்து கொண்டானா? என்பதை நினைக்கும் போது அவளுக்கு வருத்தம் மட்டுமே மிஞ்சியது. இளவயதில் திருமணம் என்றாலும், கணவன் சொல்லை மீறியதில்லை. மாமியாருக்கு அடங்கி நடந்தாள். அவனின் அத்தனை உறவுகளையும் மதித்து நடந்தாள். அவனாக அவளை வெளியில் அழைத்துச் சென்றால் தான் உண்டு, தனியாக எங்கும் செல்ல ஆசைப்படமாட்டாள். குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்தாள். ஓடியே விட்டன இருபத்தைந்து வருடங்கள்.  பிள்ளைகள் வளர்ந்து அவர்களின் உலகம் வேறாக மாறியது. இவள் குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டாளே தவிர, வேறு எதையும் யோசிக்காமல் இருந்து விட்டாள். கணவனின் அலுவலக டென்ஷன்கள் எல்லாம் இவளிடம் மட்டுமே வந்து விழும். நல்லவன் என்றாலும், அவளிடம் கலகலப்பாக பேசியதோ, அவளிடம் கருத்துக் கேட்பதோ எதுவும் இல்லை அவனிடம். ஒரு கட்டம் வரை, அவளுக்கு அது பெரிய குறையாகத் தோன்றவில்லை. ஆனால் வயதாக ஆக, பிள்ளைகளும் பிரிய ஆரம்பிக்க, மாறாத கணவனின் செய்கைகள் மனதிற்கு வருத்தம் அளிக்கக்கூடிய  ஒன்றாக மாறியது அவளுக்கு.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; அனுபவப் பாடம்!
Tamil short story - 'ennai parthu nilavu siriththathu

சிறுவயதில் இருந்த அவளின் விருப்பமான வேலைகள் அனைத்தையும் திருமணமான பின் மறந்தே போயிருந்தாள். யோசித்துப் பார்த்தால், ஒரு நாள் கூட அவன் அவளிடம் உனக்கு என்ன பிடிக்கும்? என்ன வேண்டும்? எனக் கேட்டதில்லையோ என  நினைத்தாள். வெறுக்கும் அளவிற்கு வாழ்க்கை இல்லையெனினும், ரசிக்கும் அளவிற்கு வாழவில்லையே என்பது தான் அவளின் மனக்குறையாகத் தோன்றவே...

வானொலியை அணைத்து விட்டு , துணிகளை உள்ளே வைத்து விட்டு, பூஜை அறையிடம் போய் நின்றாள். எதற்காக என் வாழ்க்கை? என இறைவனைப் பார்த்தபடியே மனதிற்குள் கேட்டுக் கொண்டாள். பிறகு ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்துக் கொண்டே, இரவு உணவை, தயார் செய்யத் தொடங்கினாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: குப்பைக் கதை!
Tamil short story - 'ennai parthu nilavu siriththathu

வானத்தில் நிலவு பளிச்சென்று சிரித்தது. 'அது என்றைக்காவது என்னை பார் என்று யாரையாவது கேட்கிறதா? யார் கவனித்தாலும், மறந்தாலும் பளிச்சென ஒளி வீசிக் கொண்டே இருக்கிறதே,' எனத் தோன்றியது அவளுக்கு. அந்த எண்ணம் தோன்றவே, தன் மீது தனக்கே ஏற்பட்ட கழிவிரக்கத்தை தூர எறிந்துவிட்டு, பூஜை அறையைப் பார்த்தாள். இறைவனும் பளிச்சென சிரிப்பது போலவே தோன்றியது அவளுக்கு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com