சிறுகதை; அனுபவப் பாடம்!

Short Story - Anubhava paadam!
Short Story
Published on

-ஷ்யாமளா கோபி

நேற்று மதியம் ரெண்டு வீடு தள்ளியிருக்கும் தோழி வீட்டிற்கு சென்றேன். அவளோ என்னை ‘வா’ என்று அழைத்துவிட்டு, தான் செய்துகொண்டிருந்த வேலையில் மிகவும் மும்முரமாக இருந்தாள்.

எப்போதும் படு சுத்தமாக இருக்கும் வீடும், அதை விட பாந்தசமாக இருக்கும் அவளும் என பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு இன்று வித்தியாசமான சூழல் ஆச்சரியம் கொடுத்தது. ஆம். ஆங்காங்கே கிடக்கும் பொருட்களும் படுக்கையின் மீது கிடந்த சூட்கேஸில் எடுத்து வைக்கப்பட்டிருந்த துணிமணிகளும் அவள் எங்கோ பயணம் கிளம்பிவிட்டாள் என புரிந்தது. குழப்பத்துடன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். என்னிடம் சொல்லாமல் எதையும் செய்யமாட்டாள். இந்த பயணம் எங்கள் லிஸ்டில் இல்லையே.

இருவரும் ஒரே பள்ளியில் படித்து ஒன்றாக வேலை செய்து ஒரே இடத்தில் வீடு கட்டிக்கொண்டு. வாழ்ந்து வருகிறோம். பத்து வருடங்களுக்கு முன் அவள் கணவர் இறந்துவிட, ஊரோடு வந்துவிடு என்று வீட்டினர் வற்புறுத்தியம் போகாமல், தன் ஒரே மகளோடு இங்கேயே தங்கிவிட்டாள்.

நல்ல தரமான கல்லூரியில் சேர்ந்து படித்து அந்த பெண்ணும் நல்ல வேலையில் அமர்ந்துவிட்டாள். சில வருடங்களுக்கு முன் மகளுக்கு சிறப்பாக திருமணம் செய்து பெங்களூர் அனுப்பிவிட்டாள். மருமகன் மிகவும் தங்கமான பையன். அவனுடைய அம்மாவும் என் தோழியைப்போலவே தனியாக மகனை வளர்த்து ஆளாக்கியவள். இப்போது அவனோடு தங்கிவிட்டாள்.

தகப்பனின் கண்டிப்பு இல்லாமல் தனியாக வளர்ந்த தோழியின் மகள் அதிக சோம்பேறியும் அதீதபிடிவாதமும் கொண்டவள். வீட்டில் எல்லா வேலைக்கும் மாமியாரை ஏவிக்கொண்டிருப்பதைக் கண்டு மனைவியை கடிந்துக்கொண்டிருக்கிறான் அவள் கணவன்.

இதையும் படியுங்கள்:
52 வயது பெண்மணி 150 கிமீ கடலில் நீந்தி சாதனை!
Short Story - Anubhava paadam!

வந்ததே கோபம் அந்தப் பெண்ணிற்கு. எப்போதும் நமக்குள் சண்டை மூட்டிவிடும் உன் அம்மா இங்கே இருக்கக்கூடாது என்று வம்பு.

மாப்பிள்ளை அழாத குறையாக மாமியாரிடம் சொல்லியிருக்கிறான். இவளும் மகளைக் கூப்பிட்டுக் கண்டித்திருக்கிறாள். “அந்தத் தாய் வேறு எங்கு போவாள்?” என்று.

“நீயும்தான் அங்கே தனியாக இருக்கே. நீயும் இங்கே வந்துவிடு” என்று பிரச்னைக்கு எண்ட்கார்ட் போட்டிருக்கிறாள் மகள்.

இதை எல்லாம் சொல்லிகொண்டே பெட்டியை அடுக்கிக்கொண்டிருந்தாள் தோழி.

இவள் தன் மகளைக் கையாள எத்தனை கஷ்டப்பட்டாள் என்பதை நான் அறிவேன். நல்லபடியாக திருமணம் முடிந்து, தான் தன் குடும்பம் என தன் வாழ்க்கையை அவள் வாழ்ந்துகொள்ளுவாள் என நினைத்திருக்க, மீண்டும் தாயின் இடுப்பில் ஏறிக்கொள்ள நினைக்கிறாள். இந்த பைத்தியக்காரியும் இதற்குச் சம்மதித்து பெங்களூர் போகிறாளே என்று ஆதங்கமாகிப் போயிற்று எனக்கு.

“ஸோ, நீ உன் மகள் வீட்டுக்குக் கிளம்பிட்டே?” என்று கேட்ட என் குரலில் ஆதங்கத்தை விட எரிச்சலே சற்று அதிகமாகயிருந்தது. பின்னே என்ன!

நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்துகொண்டவள் நிதானமாக சொன்னாள்.

“இல்லை”

“இல்லையா” என்ற எனக்கு எரிச்சல் மறைந்து. சிறு குழப்பம் கூடியிருந்தது குரலில்.

இதையும் படியுங்கள்:
மாட்டு பண்ணை நடத்தி 50 லட்சம் வருமானமா? சாதிக்கும் பெண்மணிகள்!
Short Story - Anubhava paadam!

“இல்லை” தெளிவான அதைவிட அழுத்தமான பதில்.

“அப்படின்னா?” கண்களால் பெட்டியைக் காட்டினேன்.

“வாலாஜா அருகில் ஒரு முதியோர் இல்லம்.  மாதம் பதினைந்தாயிரம், பத்து லட்சம் டெபாசிட்” என்றாள் மொட்டைத் தாத்தா குட்டையில் விழுந்தார் என்பதைப்போல.

“முதியோர் இல்லம்?” என்ற எனக்கு “எல்லாத்தையும் விட்டுக் கடாசிட்டு யாரும் வேணாம்னு முதியோர் இல்லம் போவாளா இவள்” என்ற திகில் கூடத் தொடங்கியது.

“ஆமாம்” என்று உறுதியாக சொன்னவள், ’’தனியறை மருத்துவ வசதி, நம் வயது கூட்டாளிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் என சொகுசான வாழ்க்கை. வேறு என்ன வேண்டும்?’’ என்று விளக்கினாள்.

“ஓஹோ” என்ற எனக்கு சுருதி குறைந்திருந்தது.

“தனியறையில் இன்னும் ஒருவர்கூட இருக்கலாம்.”

“நானும் வரவா?” என்று கிண்டலாகக் கேட்டேன்.

“வேண்டாம். ஆள் ரெடியா இருக்கு” என்றாள் சீரியஸாக.

மேற்கொண்டு அவள் செய்த ஏற்பாடுகளைச் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றாள் என் தோழி.

சில நாட்கள் ஓடின...

ஒருநாள், அவள் மகள் என்னை அழைத்தாள். “அம்மா தனியா இருக்க வேண்டாம் என்னுடன் வா என்று அழைத்தேன்” என்றாள்.

அவள் சுபாவம் தெரிந்திருந்த நான் “உனக்கு எதுக்கு வீண் தொந்திரவு?” என்றேன்.

“எனக்கு என்ன தொந்திரவு? அவுங்கதானே எல்லாத்தயும் பார்த்துக்கப் போறாங்க” என்றாள். அந்த மகள் என்னவோ தாய்க்கு பெரிய உபகாரம் செய்வதைப்போல பாவனையுடன்.

இதையும் படியுங்கள்:
துவாதசியன்று அகத்திக் கீரையும் நெல்லிக்காயும் சேர்ப்பது ஏன்?
Short Story - Anubhava paadam!

“அது அவளுக்கு தொந்திரவுல்லே” என்றேன் மெல்ல.

“ஓஹோ பெண்ணுக்கு ஒத்தாசை பண்றது அவுங்களுக்கு தொந்திரவா?” என்றாள் அவள் மிகவும் காட்டமாக.

“உனக்கு ஒத்தாசை பண்ண உன் மாமியார் இருக்காங்க”.

“அவங்க உன் வீட்டில் இருப்பதால்”... என்று மேற்கொண்டு பேச நான் தயங்கவே...

“அவுங்களைத்தான் முதியோர் இல்லம் அனுப்பியாச்சே” என்றாள் ரொம்ப இயல்பாக.

“அப்படியா? எங்கே?”

‘வாலாஜாவில். மாசம் பதினைந்தாயிரம். பத்து லட்சம் டெபாசிட். அங்கே அவுங்க சொகுசா இருப்பாங்க”. என்றாள் எதையோ சாதித்தக் குரலில்.

“அதைத்தான் உன் மாமியாரோட ஒரே அறையில இருக்கும் உன் அம்மாவும் சொன்னாள்” என்றேன் நிதானமாக.

இது மகளுக்கு தண்டனையா? பாடமா?

என் தோழி சொன்னது நினைவுக்கு வந்தது. ’அவள் வாழ்க்கையை அவள் வாழ இது ஒரு அனுபவ பாடம். பத்து மாதம் சுமந்து வலிக்க வலிக்க பெத்தவளுக்குத்தானே, தான் பெற்ற பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தர முடியும். அது எந்த வயதானாலும் சரி. தாய் என்பவள் தாய்தானே’!

 எனக்கு சரி என்றுதான் தோன்றியது. உங்களுக்கு?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com