
“பூசா ஆச்சி… பூசா ஆச்சி... குப்ப வண்டி வந்துருக்கு”
கொழும்பு, மருதானை, ஸ்கூல் லேன் வீதியில் அமைந்துள்ள அந்த வீட்டிற்கு குடி வந்து சில நாட்கள் தான் ஆகிறது. ஸ்கூல் லேன் வீதியில் நேராக வந்து இடது பக்கம் திரும்பினால் பெரிய மைதானமும், அதை தாண்டி சிறிது தூரம் நடக்கும் போது அகலமான 8 படிகள் இருக்கும். அதில் ஏறி வரும் போது ஏற்படும் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் மேலே வந்து ஐந்தடி வைத்தால் இருக்கும் கருப்பு பெயிண்ட் அடித்த வீடு தான் நாங்கள் வாடகைக்கு குடிவந்த வீடு. எங்கள் வீட்டின் நேரெதிர் வீடுதான் 72 வயது பூசாச்சினுடையது. கூட்டுக் குடும்பமான அவள் வீடு அதற்கேற்ப விசாலமானதாகவே கட்டப்பட்டிருந்தது.
குடிவந்த ஆரம்பத்தில் பூசா ஆச்சி தான் எங்களிடம் பேசினாள். என் குடும்பத்தை பற்றி விசாரித்து நான் கேட்காமலே அவள் குடும்பத்தை பற்றியும் சொல்லி எங்களுடன் பழக ஆரம்பித்தாள். எங்கள் வீதியில் 20 வீடுகள் இருக்கும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை குப்பை வண்டி மைதானத்திற்கு வரும். குப்பை வண்டி சத்தம் கேட்டதும் கதவை திறந்து குப்பை பக்கெட்டை தூக்கிக் கொண்டு ஆட்கள் வெளியே வருவார்கள். சாப்பாடு குப்பை, பொலித்தீன் குப்பை என தனிதனியாக எடுப்பதால் இன்னைக்கு எதை எடுக்க வந்திருக்கிறானோ என்று புலம்பிக் கொண்டு வருவதையும், சாப்பாடு குப்பை எடுக்கிறார்கள் என்றால் மகிழ்ச்சியும், பொலித்தீன் குப்பையென்றால் “எங்கட வீட்ல எங்க பொலித்தீன் இருக்கு, சாப்பாடு குப்பை தான் நிரஞ்சியிருக்கு” என்று சிலர் புலம்பவதையும் கேட்கலாம்.
ஒரு சில வயதானவர்கள் கூட சிரமம் பார்க்காமல் படியில் இறங்கி போய் குப்பையை கொட்டுவார்கள். சில குடும்ப பெண்கள் படியில் இறங்காமல் பூசா ஆச்சியிடம் குப்பையை கொடுத்து கொட்ட சொல்லுவார்கள். ஆரம்பத்தில் இதை கண்ட நான் அவர்களுக்கு ஏதாவது அவசர வேலையாக இருக்கும் அதுதான் பூசா ஆச்சியிடம் கொட்ட கொடுக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் இதேபோல மற்றொரு முறை குப்பை வண்டி வந்த போது தான் தெரிந்தது விஷயம்.
அன்றைக்கு சாப்பாடு குப்பை எடுக்க வந்திருந்தது வண்டி. நான் சத்தம் கேட்டு வெளியே வந்து என் வீட்டு குப்பையை கொட்டிவிட்டு மேலே வந்த போது என் பக்கத்து வீட்டு அக்கா “தம்பி தம்பி இந்த குப்பை பக்கெட்ல இருக்குறத கொஞ்சம் கொட்டிட்டு வாங்கபா” என்றாள். அதே அக்கா “சத்தமாக ஏய் ஃபர்சானா சீக்கிரம் குப்பைய கொண்டு வா. வண்டி போக போகுது” என்றாள்.
குப்பையை கொட்டிவிட்டு படியேறி அந்த அக்காவிடம் அவளின் பக்கெட்டை கொடுத்தபோது “தம்பி இந்த பக்கெட்ல உள்ளதையும் கொஞ்சம் கொட்டிட்டு வாங்க” என்று அருகிலிருந்த இன்னொரு பெண்ணின் பக்கெட்டையும் கொடுத்தாள். மற்றொரு பெண் கடைசி படியில் நின்றுக் கொண்டு குப்பையை கொட்டாமல் என்னிடம் கொட்ட சொல்லி கொடுத்தாள். நான் ஒன்றும் சொல்லாமல் அதையும் கொட்டினேன்.
வீட்டிற்கு வந்து என் மனைவியிடம் சொன்ன போது அவள் சிரித்துக் கொண்டே “பூசா ஆச்சி கடைக்கு போனாங்களாம். இன்னைக்கு நீங்க சிக்கிட்டிங்க. நீங்க குப்பைய கொட்ட கீழ போன போது எல்லா அக்காமார்களும் சீரியல் போகுதேனு கவலப்பட்டுக் பேசிக்கொண்டு இருந்தாங்க” என்றாள்.
“எங்க அம்மா, அக்கா வயசு ஆகுது பாவம்னு தான் குப்பையை கொட்ட உதவி செஞ்சேன். அத விட எனக்கு வேற ஒரு யோசனை மண்டைல ஓடுது. பூசா ஆச்சி வயசுக்கு இங்க இருக்கிறவங்க தான் கீழ இறங்கி குப்பையை கொட்டி கொடுத்து அவங்களுக்கு உதவி செய்யணும். ஆனா இங்க எல்லாரும் அவங்க சோம்பேறித்தனத்தால் அவங்க வேலைய மத்தவங்களுக்கு செய்ய சொல்லுறாங்க. எனக்கும் கொட்ட முடியாதுனு சொல்றதுக்கு ஒரு மாதிரி...”
ஓரிரு நாட்களுக்கு பிறகு காலையில் எப்பவும் போல கதவை திறந்து வெளியே வந்து பார்த்த போது எங்கள் வீட்டிற்கும் கீழே இறங்கும் படிக்கும் இடையே உள்ள மின் விளக்கு கம்பத்தின் கீழே யாரோ ஒரு பெரிய பொலித்தீன் பையில் குப்பையை போட்டு போயிருந்ததை கண்டு பூசா ஆச்சியிடம் விசாரித்தேன்.
“இன்னிக்கு நேத்து இல்ல கண்ணு. எப்ப பாரு இப்படிதான், குப்பைய பையில போட்டு விடிய காத்தால வந்து யாராவது இங்க வெச்சிட்டு போயிருவாங்க. குப்ப வண்டி வருது தானே அதுல கொட்டுனா என்ன ஆகிரும் இந்த ஜனத்துக்கு. சிலவங்க கீழ போய் மண்ணெண்ணெய் ஊத்தி சாப்பாடு குப்பைய எரிப்பாங்க. சாப்பாடு குப்ப எப்படி கண்ணு எரியும். சொல்லி வேலயில்ல. ஒவ்வொரு முறையும் இங்கன யாராவது இப்படி போட்டுட்டு போற குப்பைய நான் குப்ப வண்டி வரும்போது எடுத்து போடுவேன். அதுக்குள்ள நாறி நாத்தம் எடுத்துறும் இந்த இடம்.”
பூசா ஆச்சி சொன்னது சரிதான். கொஞ்ச நேரம் கழித்து பார்த்த போது அந்த குப்பையை எலி நோண்டி குப்பைகளை என் வீட்டு வாசலிலும், வீதிகளில் ஆங்காங்கே இழுத்து போட்டு இருந்தது. குப்பையிலுள்ள புழுக்கள் என் வீட்டு கதவின் கீழே இருந்த சிறிய இடுக்குகள் வழியே உள்ளே நுழைந்தன. மனைவி குழந்தையை கையில் வைத்திருக்க குப்பையை போட்டு போன மனித ஜென்மத்தை மனதுக்குள் திட்டிக்கொண்டே நான் வீட்டையும் வாசலையும் சுத்தம் செய்தேன்.
குப்பை வண்டி வரும் சத்தம் கேட்கிறது. சாப்பாடு குப்பை என்று சத்தம் போடுகிறார்கள். பூசா ஆச்சி இறந்து இரு நாட்கள் கடந்து விட்டன. நான் கடைசியாக குப்பையை கொட்டலாம் என்று ஜன்னலின் திரையை லேசாக நகர்த்தி வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறேன். பக்கத்து வீடு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கிறது. பக்கத்து வீட்டு அக்காவுடன் இன்னும் நான்கு அக்காமார்கள் படியில் இறங்காமல் குப்பை பக்கெட் உடன் சிரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு அக்கா மட்டும் குப்பையை கொட்டாமல் பக்கெட்டை திரும்ப கொண்டு செல்கிறாள். அந்த பக்கம் விளையாடி கொண்டிருந்த பூசா ஆச்சியின் கொள்ளு பேத்தியிடமும் இன்னும் ஒரு பிள்ளையின் கையிலும் குப்பை பக்கெட்டை கொடுத்து கொட்ட சொல்கிறார்கள், நின்றுக் கொண்டிருந்த மனித பிறவிகள்.
அடுத்த நாள் காலை மின் விளக்கு கம்பத்தின் கீழ் ஒரு குப்பை பேக் இருந்தது!