அன்று அவர்களின் 25 வது திருமண நாள்!
பிறந்தது,படித்தது இந்தியாவில் என்றாலும்,மேல் படிப்பெல்லாம் ஐரோப்பாவில்தான் எம்.௭ஸ்., படிப்பின்போது ஒரு செமினாரில் சந்தித்த அவர்கள் நண்பர்களானார்கள். அப்புறம் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சந்தித்தவர்கள், காதலர்களானார்கள்! காதல் வயப்பட்டதும், சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள்!
அப்படி ஒரு முறை பாரிசில் சந்தித்தபோது இருவரும் ‘ஈபிள் டவர்’ சென்றார்கள். டவரில் ஏறி நகரை ஒரு சுற்று பார்த்தபின், அருகிலுள்ள ஆற்றில் படகுச் சவாரி சென்றார்கள். அப்புறம் காலாற நடக்கையில்தான் அந்தப் பாலத்தின் இரு புறமும் வரிசையாகத் தொங்கும் பூட்டுக்களைப் பார்த்தார்கள். உடனே அதன் அர்த்தம் அவர்களுக்குப் புரிந்து விட்டது.
மனமொத்த காதலர்கள் தாங்கள் வாழ்க்கையில் இணைந்து நன்கு வாழ வேண்டுவதற்காக, புதுப் பூட்டையும் சாவியையும் வாங்கி வந்து, பூட்டைப் பாலத்தின் இடையேயுள்ள வலையின் கம்பியில் பூட்டி விட்டு, சாவியை ஆற்றில் வீசி விடுவார்களாம்!சாவியில்லாத பூட்டைத் திறக்க முடியாதல்லவா? அந்தப் பூட்டு திறக்கப்படாமல் உறுதியாய் இருப்பதைப்போல் அவர்களின் காதலும் உறுதியடைந்து விடும் என்பது நம்பிக்கை; ஓர் ஐதீகம்! அந்த நம்பிக்கையில் நூற்றுக் கணக்கான பூட்டுகள், தங்கள் சாவியை ஆற்றில் பறி கொடுத்து விட்டு அங்கு தொங்கிக் கொண்டிருந்தன.
ரகு அவசரமாக வேகமாக நடக்க,ராதிகா பின் தொடர,சற்று தூரத்தில் பாலத்தின் ஓரச் சாலையில் இருந்த பூட்டுக் கடையை அணுகி,அழகிய ஓர் பூட்டை செலக்ட் செய்த அவன், கண்களாலேயே அவளிடம் பர்மிஷன் கேட்க,அவளும் பார்வையிலேயே ‘ஓகே’சொல்ல,பூட்டுடன் பாலத்திற்கு வந்தார்கள்!
பாலத்தின் நடுவில் சென்று இருவருமாகச் சேர்ந்து பூட்டிய பின்,அவளிடமே சாவியைக் கொடுத்து வீசச் சொன்னான்!சாவியை வாங்கிய அவள் ‘ரகு…அதோ அங்கே ஆற்றின் சுழல் தெரிகிறது…நான் அங்கு சென்று வீசுகிறேனே!’என்று கூறியபடியே பாலத்தில் ஓடினாள்!
25 வது திருமண நாளை அதே பாலத்தில் கொண்டாடினால் என்ன என்று அவள் சொன்ன உடனேயே,’நானும் அதையேதான் டியர் நினைத்தேன்!’ என்று அவனும் சொல்ல, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து பாரிஸ் வந்து விட்டார்கள்.
படிப்பை முடித்துப் பணிக்குச் சென்றதும், பெற்றோர்களின் பர்மிஷனுடன் திருமணம் செய்து கொண்டார்கள். பிரான்சு, ஜெர்மனி, பின்லாந்து என்று சிலகாலம் ஐரோப்பாவிலும், அதன்பின் அமெரிக்காவில் சில வருடங்களும் பணியாற்றியபின், வயதான பெற்றோர்களின் அருகில் இருக்க வேண்டுமென்பதற்காக, சென்னையிலேயே பணி ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
ராதிகாவின் அப்பா ஒரு பகுத்தறிவு வாதி! அறிவுக்கு ஒவ்வாத,ஏற்றுக் கொள்ள முடியாத பழக்க வழக்கங்களை வெறுப்பவர். அதையே வாழ்விலும் கடை பிடிப்பவர். அதன் காரணமாகவே சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர். பல திருமணங்களை நடத்தி வைத்தவர். ஒரு திருமண வாழ்வில் அவர் பேசியது சிறு வயதிலேயே ராதிகாவின்
மனதில் பதிந்து விட்டது.மணமக்களை வாழ்த்தும்போது ’பூட்டும்-சாவியும் போல் இணை பிரியாது வாழ்ந்திடுங்கள்!’ என்று வாழ்த்தினார்.
மகனும், மகளும் ஐரோப்பாவிலேயே படிப்பதால், அவர்களைப் பார்த்தது போலவும் இருக்கும்… அவர்களுடன் சேர்ந்து திருமண நாளைக் கொண்டாடியது போலவும் இருக்கும் என்று இருவரும் பேசிக் கொண்டாலும், ராதிகாவின் மனதில் வேறொன்றும் இருந்தது. அவர்கள் பூட்டிய பூட்டு இன்னும் இருக்கிறதாவென்று காண வேண்டுமென்ற வேட்கைதான் அது!அதற்குக் காரணமும் உண்டு.
மகன், மகளுடன் அந்தப் பாலத்திற்கு வந்தார்கள். அவர்கள் பூட்டைப் பூட்டிய அந்த இடத்திற்கும் வந்தார்கள். பூட்டு துருப்பிடித்து தன் உருவை இழந்திருந்தது. மெல்ல, ஒருவருக்கும் தெரியாமல், அவள் தான் 25 வருடமாகப் பத்திரமாகப் போற்றிப் பாதுகாத்த அந்தச் சாவியை எடுத்தாள்! ஆனால் பூட்டிலோ, சாவித்துவாரம் துருவேறி மூடப்பட்டிருக்க, அது அவளுக்கு ஏமாற்றமளித்தது.
பூட்டைக் கண்ட திருப்தியில் கணவர் உற்சாகமடைந்து மகன், மகளுக்குக் காட்டியபடி அந்தத் துருப் பிடித்த பூட்டை வாஞ்சையுடன் தடவ, ராதிகாவோ ஒரு பகுத்தறிவு வாதியின் மகளாகத் தான் வாழ்ந்து விட்டதை எண்ணி மகிழ்ந்த படியே, சற்றுத் தள்ளி வந்து, அவர்களுக்குத் தெரியாமல் அந்தச் சாவியை ஒரு சுழலில் வீசினாள்!
நம்பிக்கைகள் வாழ்வளிப்பதுபோல, நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கைகளும் வாழ்வளிக்கவே செய்யும்!எல்லாம் மனிதர்களின் மன உறுதியில்தான்!
- ரெ.ஆத்மநாதன், சூரிக், சுவிட்சர்லாந்து