

வேனிற்காலத்தில் காலை நேரம் தீபாவிற்கு பிடித்தமான ஒன்று. வாசல் தெளித்து கோலமிட்டபின் பில்டர் காபியை கலந்து எடுத்து வந்து, போர்ட்டிக்கோவில் அமர்ந்து, துளித்துளியாக அருந்தும் போது ஒரு குளிர் தென்றல் அவளை சுற்றி வீசும். அது ஒரு சுகானுபவம். அன்றும் அந்த இளம் காலை வேளை தென்றலை அனுபவித்தபடி அமர்ந்திருந்தவள், வாசலில் டாக்சி வந்து நிற்பதை பார்த்து 'யார் இந்த நேரத்தில் வராங்க?' என சற்று குழப்பத்துடன் பார்த்தாள்.
டாக்ஸியிலிருந்து இறங்கியவள் அவள் நாத்தனார் ஊர்மிளா. பெட்டியை நங்கென வாசல் படியில் வைத்தவள் டாக்ஸிக்கு பணம் கொடுத்து அனுப்பினாள். அதற்குள் வேகமாக வந்து வாசல் கதவை திறந்த தீபா "வாங்க அண்ணி" என நாத்தனாரை வரவேற்றாள்.
வாசலில் இருந்த அழகான கோலத்தையும் அவள் கையில் காப்பி டம்பளரையும் பார்த்த ஊர்மிளா "இவ்வளவு காலையிலேயே எழுந்திருச்சுடுவியா?" என்றாள் ஆச்சரியமாக.
"ஆமாங்க அண்ணி ஆறு மணி ஆகப்போகுதே" என்றாள் தீபா கேஷுவலாக.
"திவா எழுந்திருச்சிட்டானா?" என ஊர்மிளா தன் தம்பியை குறித்து கேட்டாள்.
"இல்லை அண்ணி அவர் எழ இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்" என்ற தீபாவின் பதிலை காதில் வாங்காமல் வேகமாக தன் பெட்டியை இழுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்த ஊர்மிளா, ஹால் சோபாவில் பொத்தென அமர்ந்தாள். நாத்தனார் கடுமையான கோபத்தில் இருக்கிறாள் என்பது மட்டும் தீபாவுக்கு நன்கு புரிந்தது.