சிறுகதை: கலியுகம் பிறந்த கதை - சித்ரகுப்தரின் கணக்கருக்கேவா?

Kaliyugam
KaliyugamImg Credit: Antaryamin's Blog
Published on

த்ரேதா யுகம் முடியும் தருணம். ஒரு நாள் சித்ரகுப்தரின் அரண்மனையில் அவரது கணக்கர் அன்றைய அலுவல் முடிந்து கிளம்பி கொண்டிருந்தார்.

“ஐயா, சற்று தாமதியுங்கள். ஆயுட்காலம் முடிந்து ஒரு மானுடன் வருகிறான். அவன் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கி விட்டு பின்பு நீர் கிளம்பலாம் “, என்றார் சித்ரகுப்தர்.

மிக மோசமான பிறவிகளின் வழக்குகள் மட்டுமே நடக்கும் பிரிவு அவருடையது. கணக்கர் மீண்டும் தன் ஆசனத்தில் அமர்ந்தார்.

மானிடன் வந்தான். அகன்ற நெற்றி, அடர்ந்த புருவங்கள், உள்ளடங்கிய சிறிய விழிகள், எப்போதும் ஒரு அரைப் புன்னகையில் விரியும் மெல்லிய உதடுகள்… சாதாரண முகம், அசாதாரண உயரம், உயரத்திற்கு ஏற்ற ஆஜானுபாகுவான தோற்றம். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு வந்தவன், சித்ரகுப்தரை உற்று நோக்கினான்.

அவனது வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பார்வையிட்ட சித்ரகுப்தர், “என்னப்பா தந்திரா, பஞ்சதந்திரா… ஆமாம், அது என்ன பெயர் பஞ்சதந்திரன் எ‌ன்று?”, என்று கேட்டார்.

“எதோ என் தாய் தந்தையர் தெரியாமல் வைத்து விட்டார்கள், பிரபு “, என்றான் அவன். அரை புன்னகை விரிந்து முகம் மலர்ந்தது.

“ஏராளமான குற்றங்கள் செய்திருக்கிறான். ஒன்றிரண்டு தவிர்த்து அனைத்து பிரிவுகளிலும் தண்டிக்கப்பட வேண்டியவன் இவன். இவனை திரும்ப பூலோகம் அனுப்பினால் எஞ்சியுள்ள ஒன்றிரண்டு குற்றங்களையும் செய்தே தீருவான். எனவே இம்மானுடனை நரகத்தீயில் தள்ளு“, எ‌ன்று சித்ரகுப்தர் உத்தரவிட்டார்.

“பிரபு, என்னை மறுபடி பூவுலகம் அனுப்பி விடுங்கள். என்னை பாபம் செய்யத் தூண்டியவர்களை நான் தண்டிக்க வேண்டும்”, என்றான் பஞ்சதந்திரன்.

“உனக்கு அந்த அதிகாரம் இல்லை. அதற்கு நாங்கள் இருக்கிறோம். அமாம், அவர்கள் யார், உன்னை பாபம் செய்ய தூண்டியவர்கள்? ", என்று கேட்டார் சித்ரகுப்தர்.

“அதை சொல்வதற்கில்லை, ஸ்வாமி”, என்றான் தந்திரன்.

“எனில் உனக்கு நரகம்தான்”, எ‌ன்று தீர்ப்பளித்து,“ இவனை இழுத்து செல்லுங்கள்“, என்றார் கணக்கரிடம்.

“அது சரி, என்னை தண்டிக்க நீங்கள் யார்?“ பஞ்சதந்திரன் கணக்கரைக் கேட்டான். அவர்கள் நரகத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.

“மானிடர்கள் செய்யும் தர்ம அதர்மங்களுக்கேற்ற பலன்களை வழங்குவது எங்கள் வேலை. நீ செய்த தீமைகள் ஏராளம். ஆகையால் நீ திரும்ப பூவுலகம் செல்ல முடியாது." என்றார் கணக்கர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஊனம் பலஹீனமல்ல!
Kaliyugam

“நரகத்தில் என்ன இரு‌க்கு‌ம்?"

“நரகத்திலா? கொதிக்கும் எண்ணெய்யை உன் பேரில் ஊற்றி…”, என்று ஆரம்பித்த கணக்கரிடம், “ஐயோ!”, என்று பயந்தவனாக,

“அதிலிருந்து தப்ப வழியே இல்லையா? “

“அதை நீ பாபம் செய்யுமுன் யோசித்திருக்க வேண்டும். இப்போது பிரலாபித்துப் புண்ணியமில்லை", என்றார் கணக்கர்.

“இம்மாதிரி தண்டனை விஷயங்கள் எனக்கு தெரியாதே! தெ‌ரியாமல் செய்த பிழைகளை மன்னிக்க கூடாதா?"

“குற்றம் செய்தால் தண்டனை என்பது தெரியாதா? மேலும் தெரியாது என்பது ஒரு வாதமே அல்ல”.

“ஐயா, என்னை தயவு செய்து விட்டு விடுங்கள். நான் இப்படியே பூவுலகம் சென்று விடுகிறேன். யாருக்கு தெரியப் போகிறது? “ என்றான் தந்திரன்.

“ஏன், எனக்குத் தெரியும். நான் சித்ரகுப்தரிடம் சொல்லி விடுவேன். அவர் உடனே யமதர்ம ராஜனிடம் போய்,,,”

“ஐயோ! ஐயோ! யாரிடமும் சொல்லாமல் நீங்கள் என்னை தப்புவிக்க முடியாதா? “, என்று கேட்டான் தந்திரன்.

“இங்கு தினமும் ஏராளமானோர் வருவார்கள். அவரவர் பாப புண்ணியங்களுக்கேற்ப சொர்க்கமோ, நரகமோ, அல்லது பூமியில் மறு ஜென்மமோ அடைவார்கள். யாரும் தப்ப முடியாது “.

“நீங்கள் மனம் வைத்தால் என்னை தப்புவிக்கலாம் “.

“நான் ஏன் மனம் வைக்க வேண்டும்?”

“ஓஹோ! அதனால் உங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? “ என்றான் தந்திரன்.

“அபச்சாரம்! நான் அப்படி எதுவும் சொல்லவில்லை” என்றார் கணக்கர் திடுக்கிட்டு.

"இல்லை, இல்லை! நீங்கள் அப்படிச் சொல்லவில்லை. நான் உங்கள் பேரில் அபிமிருதமான அன்பு கொண்டு உங்களுக்கு எதாவது பதில் உதவி செய்யலாமல்லவா?” என்று கேட்டான் தந்திரமாக.

“அப்படி என்ன செய்துவிட முடியும் உன்னால்? “

“ஏன்? நீங்கள் கேளுங்களேன். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேளுங்கள். என்னால் முடிந்தால் கட்டாயம் செய்கிறேன் “.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கொரோனா டைம்ஸ்... கணவர் படுத்திய பாடு!
Kaliyugam

“தினந்தோறும் உன்னை போல் குற்றம் புரிந்தவர்களை நரகத்தில் தள்ளி விட்டு நான் வீடு திரும்புகிறேன். நடந்து நடந்து என் கால் வலித்ததுதான் மிச்சம். எனக்கு நீ என்ன செய்துவிட முடியும்? “ என்றார் கணக்கர்.

பஞ்சதந்திரனின் முகத்தில் அந்த மர்மம் நிறைந்த அரை புன்னகை மேலும் விரிந்து, அவனது வதனம் அளவில்லா வசீகரத்தை அடைந்தது.

“ஐயா! நான் உங்களுக்கு ஒரு தேர் அளிக்கிறேன் “ என்றான்.

“தேரா ?“, என்றார் கணக்கர் வியப்புடன்.

“ஆம் ஐயா! இரண்டு வெண் புரவிகள் பூட்டிய தங்கத் தேரை உமக்கு அன்பளிப்பாக தருகிறேன். என்னை நீங்கள் விடுவித்து பூவுலகம் அனுப்பி விட்டீர்களேயானால் உங்களுக்கு தங்கத்தேர் நிச்சயம்,” என்றான் தந்திரன்.

இப்படியாக, பஞ்சதந்திரன் லஞ்ச லாவண்யத்தை ஆரம்பித்து வைத்தான். அதோடு கலியுகம் பிறந்தது.

இதுவே நம் முடிவின் தொடக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com