

பெண் பார்க்கும் படலம்… !
லீலா ஒரு பட்டதாரி; இன்னும் திருமணம் ஆகவில்லை. இன்று மாலை 4 மணிக்கு அவரைப் பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளை, அவரது அம்மா மற்றும் அப்பா லீலாவின் வீட்டிற்கு வருகிறார்கள். மாப்பிள்ளையின் பெயர் நாகலிங்கம். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
மாலை 4 மணி.
அவர்கள் எல்லாரும் வந்துவிட்டார்கள். லீலா இன்னும் வெளியே வரவில்லை; பெரியவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். லீலாவின் அம்மா, "லீலா... பஜ்ஜி, போண்டா கொண்டு வா. அப்புறம் டீயும் எடுத்துட்டு வா!" என்று குரல் கொடுத்தார். எப்போதும் சுடிதாரில் இருக்கும் லீலா, இன்று சேலை கட்டி வந்திருந்தார்.
அவர் அனைவருக்கும் தின்பண்டங்களைப் பரிமாறினார். மாப்பிள்ளைக்குக் கொடுக்கும்போது அவருக்கு ஏதோ ஒரு அதிர்ச்சி; ஆனால் சட் என்று எதுவும் நினைவுக்கு வரவில்லை. பின்னர் சமையலறைக்குச் சென்று யோசித்தார்.
"அய்யோ! அம்மா!"
லீலாவிற்கு எல்லாம் நினைவுக்கு வந்தது. நேற்று ஒரு புதிய படம் பார்ப்பதற்காகத் தனது தோழி மீனாட்சியுடன் 'ஐநாக்ஸ்' திரையரங்கிற்குச் சென்றிருந்தார். அப்போது அவர்களுக்கு நேர் முன்னால் ஒரு ஜோடி அமர்ந்திருந்தது. அவர்கள் படம் பார்க்க வரவில்லை; 'காம சில்மிஷங்களில்' ஈடுபடுவதற்காகவே வந்திருந்தார்கள். அந்த ஆண் இந்த நாகலிங்கம் தான் என்பதை லீலா மனதிற்குள் உறுதிப்படுத்திக் கொண்டார்.
'இனியும் வாய் மூடி இருந்தால் அது தவறாகிவிடும்' என்று முடிவு செய்த லீலா, சமையலறையிலிருந்து மீண்டும் ஹாலுக்கு வந்தார். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.
"மிஸ்டர் நாகலிங்கம், நேற்று ஐநாக்ஸிற்குப் படம் பார்க்க வந்தீர்களா?"
"ஆமாம்...!"
"யார் அந்தப் பொண்ணு?"
"நண்பர்...!"
"யோவ்! நீ செஞ்ச எல்லா சில்மிஷத்தையும் நான் பார்த்தேன். முதலில் நீ வெளியே போ!"
இரண்டு வீட்டுப் பெற்றோர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. நாகலிங்கத்தின் அம்மா, "ஏன் இப்படி ஒருமையில் பேசுகிறாய்?" என்று கோபமாகக் கேட்டார்.
"நீங்கள் முதலில் உங்கள் பையன் தியேட்டரில் என்ன செய்தான் என்று கேளுங்கள். பெரிய உத்தம புத்திரன்!"
மாப்பிள்ளையின் அம்மா தனது மகனிடம், "என்ன இது?" என்று கேட்டார். நாகலிங்கம் தத்தளித்தார்; பதில் சொல்ல முடியாமல் மென்று முழுங்கினார். "அம்மா... அது வந்து... வந்து...!"
"அம்மா, தயவுசெய்து கிளம்புங்கள். இல்லை என்றால் போலீஸைக் கூப்பிட வேண்டி வரும்!" என்று லீலா எச்சரித்தார்.
"என்ன, மிரட்டுகிறாயா?"
"உங்கள் அருமை மகன் செய்த லீலைகளை நானே என் கண்ணால் பார்த்தேன். எந்த தைரியத்தில் இவன் பெண் பார்க்க வந்தான்?"
"அம்மா... கிளம்பலாம்!" - இது நாகலிங்கம்.
"ஏன்டா? அவ உன்னைப் பற்றி என்னென்னவோ சொல்றாளே?"
"இல்லை, அவளை நான் பார்த்துக்கிறேன். இப்போது நாம் கிளம்பி விடுவோம்."
"டேய்! நீ என்னைப் பார்த்துக்கிறாயா? உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. எனக்குப் பயம் இல்லை. போடா, பொம்பளைப் பொறுக்கி!"
"வாயை அடக்கிப் பேசு!" என்றார் நாகலிங்கத்தின் அம்மா.
"நீங்கள் முதலில் உங்கள் மகனுக்குப் புத்திமதி சொல்லுங்கள்!"
அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். லீலாவின் அம்மா, அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. லீலா நடந்ததை விளக்கினார்:
"தியேட்டரில் படம் முடியும் வரை அவர்கள் முத்தம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். நாகலிங்கம் சரியானவன் இல்லை. அதான் எனக்குக் கோபம்."
"லீலா, நேற்று நீ சினிமாவுக்குப் போனது ரொம்ப நல்லதாகப் போய்விட்டது. இல்லை என்றால் நாம் ஏமாந்து போயிருப்போம்!" என்றார் லீலாவின் அப்பா.
"ஆமாம் லீலா, நேற்று நீ படம் பார்க்கப் போனது நல்லதாப் போச்சு!" என்றார் அம்மாவும்.
எல்லாம் நல்லதாகவே முடிந்தது. லீலா கும்பிடும் முருகன் அவளைக் கைவிடவில்லை. ஆம், லீலா தீவிர முருக பக்தை!