சிறுகதை: தொலைந்த இலக்கு!

two teachers speaking
two teachers speakingImg credit: AI Image
Updated on
MM strip
MM strip

தடித்த மரக் கதவை நோக்கி, விமலா தயக்கத்துடன் நடந்தாள். அவள் கையில் இருந்த கடிதம், அவளது பதட்டமான மனதைப் போலவே லேசாக அதிர்ந்தது. பதினைந்து வருடங்கள்! இங்குதான் தனது கனவு விதைகளைத் தூவினாள்; லட்சியங்களின் வேர்களைப் பாய்ச்சி வளர்த்தாள். இப்போது, அதே மண்ணை விட்டு விலக முடியாமல் விலகிச் செல்கிறாள்.

“விமலா, ஏன் கிளம்பி நிற்கிறாய்? உன் முகத்தைப் பார்த்தால், நீ ஏதோ உலக மகா யுத்தத்தை முடித்து வருவது போலத் தெரிகிறதே!” பின்னால் கேட்ட அந்தக் குரல் அவளுடைய தோழியும், சக ஊழியருமான லட்சுமியுடையது.

விமலா திரும்பிப் பார்க்காமல் சொன்னாள்: “லட்சுமி, இங்கிருந்து விலகிச் செல்கிறேன்.” லட்சுமி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

“என்ன சொல்கிறாய்? உன் ராஜினாமா கடிதத்தை இப்போதே கிழித்து விடுகிறேன், சொல்லு!”

விமலா உதட்டில் ஒரு வலியுடன் கூடிய புன்னகையைக் கலந்தாள். லட்சுமி. “இந்த இடம்  நம்மை மெதுவாக காய்ந்து போன மரங்களைப் போல உதிர்த்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து போனால்தான் எனக்கு நிம்மதி.” விமலா ஒரு சாவியை லட்சுமியிடம் நீட்டினாள். “இது இனி உன்னுடையது. என் டேபிளில் இருக்கும் எல்லாக் கோப்புகளையும் கொஞ்சம் பார்த்துக்கொள்.” லட்சுமி கோப்பைப் பார்த்தபோது, அவள் கண்கள் விரிந்தன.

“அடடே! இந்தக் கோப்பைப் பார்த்தால், நாம் இஸ்ரோவில் வேலை செய்வது போலத் தெரிகிறதே! இவ்வளவு தரவுகளையும் நீ எதற்காகச் சேமித்திருக்கிறாய்?”

விமலா சிரித்தாள். அது சிரிப்பல்ல; சலிப்பும் கசப்பும் கலந்த ஒரு ஒலியாக இருந்தது. “நாம் மனிதர்களை, அதாவது சமூகத்தின் தூண்களை உருவாக்கப் பிறந்தோம். ஆனால், இங்கே நாங்கள் ஒரு காகிதக் கூண்டுக்குள் மாட்டிக்கொண்டோம். புகைப்படம் எடு, ஆதாரம் அனுப்பு, அறிக்கைகளை அப்லோடு செய்; இதுவே நம் தினசரி மந்திரமாகிவிட்டது.”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மன நிறைவு!
two teachers speaking

அவள் குரலில் கோபம் எழுந்தது, “திரைகளுக்குப் பின்னால் இருக்கும் என் இருப்புதான் நிர்வாகத்திற்கு முக்கியம். பயனாளிகளுக்கு நான் என்ன கற்றுக்கொடுக்கிறேன் என்பது இரண்டாம் முக்கியத்துவம் ஆகிவிட்டது. என்னுடைய பணித்திறன் காகிதச் சங்கிலிகளுக்குள் கட்டுண்டு கிடக்கிறது!”. விமலா சில நொடிகள் அமைதியானாள். அந்த அமைதி, பல ஆண்டு உழைப்பின் சோர்வைக் காட்டியது.

“அது மட்டுமல்ல லட்சுமி, எனக்கு எனது மையப் பணிக்குக் கிடைக்கும் நேரம் குறைந்து, நிகழ்வுகள் நடத்துவதே முக்கிய வேலையாகிவிட்டது. உற்பத்தியின் தரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விழாக்கள் நடத்த வேண்டிய கட்டாயம்! மேலதிகாரியிலிருந்து கடைநிலை ஊழியர் வரை எல்லாரும் இப்போது ஒரு இவென்ட் மேனேஜர்தான்.”

லட்சுமி அவளுடைய கையைப் பிடித்தபடி கலக்கத்துடன் பார்த்தாள். “இதெல்லாம் எல்லா இடத்திலும் இருக்கும் அழுத்தம் தானே விமலா? இத்தனை வருடங்கள் நீ தாக்குப்பிடித்தாயே... இப்போதாவது உனது அந்தப் பழைய துணிச்சல் எங்கே போச்சு?”

விமலா அழுத்தம் மாறாமல் பேசினாள்: “இல்லை லட்சுமி! இங்கே மைய நோக்கமே தொலைந்துவிட்டது. சுயமரியாதை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிட்டது. நம்பிக்கை இல்ல. ஒவ்வொன்றுக்கும் ‘ஆதாரம்’ வேண்டும் என்று கேட்கிறார்கள். எங்களை நம்பாமல், “உன்னுடைய வேலையைச் செய்துவிட்டாய் என்பதை நிரூபி” என்று கேட்கிறார்கள்.”

“இப்போது பயனாளிகள் எங்களை வழிகாட்டிகளாகப் பார்ப்பதில்லை. வெறும் சேவை வழங்குநர்களாக மட்டுமே பார்க்கிறார்கள். எங்கள் பணியின் சாரமாக இருந்த அந்த ஊழியர்-பயனாளி பிணைப்பு இன்று எண்களிலும் காலக்கெடுவிலும் தொலைந்துபோனது.”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காட்டேரித் தாய் தன் குட்டிகளுக்குச் சொன்ன மனிதக் கதை!
two teachers speaking

விமலா தன் விலகல் கடிதத்தை இறுதியாக நீட்டினாள். “இந்த முடிவுக்கு ஒரு காரணம் இருக்கிறது. நாளை இந்த மையத்தின் பணி மீண்டும் மனிதர்களை மையமாகக் கொண்டிருக்குமானால், மரியாதை, சுதந்திரம், மற்றும் நம்பிக்கை கிடைக்குமானால்... அப்போது இந்தக் கதவு எனக்காகத் திறந்திருக்கும்.” அவள் கண்களை நிமிர்ந்து பார்த்தாள்.

அந்தக் குரலில் இருந்த வலி இப்போது ஓர் உறுதியாக மாறியிருந்தது. லட்சுமி குழப்பத்துடன் அந்தக் கடிதத்தை ஏந்தினாள். அதன் மேல் தெளிவாக அச்சடிக்கப்பட்டிருந்தது மைய வளாகம்: உயர்நிலைப் பள்ளி.

ஆம், அவர்கள் பேசியது ஏதோ கார்ப்பரேட் நிறுவனத்தைப் பற்றியோ, லாபம் ஈட்டும் வர்த்தகத்தைப் பற்றியோ அல்ல. அது, இன்றைய நவீனக் கல்வி அமைப்பிலுள்ள ஆசிரியர்களின் வலியைப் பற்றியது! விமலா கிளம்பிச் சென்றாள். அவளுடைய அந்த அறையின் கதவு நிரந்தரமாகச் சாத்தப்படுவதற்கு முன், லட்சுமி மனதில் ஓர் எண்ணம் மட்டுமே ஓடியது.

ஆசிரியர்கள் விலகிச் சென்றால், பள்ளி இருக்கலாம்; ஆனால், நம் சந்ததிக்குக் கல்வி இருக்காது.

logo
Kalki Online
kalkionline.com