சிறுகதை: ஒரு சோறு!

Tamil short story - Oru soru
Boy and Vivekananda photo
Published on

வாத்தியார் புண்ணியத்தில்தான் பார்வதி குடும்பம் அதிகக் கஷ்டமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது!ஐந்தாறு வீடுகளில் அவள் வேலை செய்தாலும் வாத்தியார் வீடு மட்டும் எப்பொழுதுமே ஸ்பெஷல்தான்! மூத்தவள் ரமாவை அவர்தான் ஹாஸ்டலில் சேர்த்து விட உதவினார்!பக்கத்து ஊர் அரசுப்பள்ளியில் ரவியைச் சேர்த்து விட்டதும் அவர்தான்!

'ம்! இந்த மனுஷனுக்கு மட்டும் இந்தக் குடிப்பழக்கம் இல்லேன்னா... நாமும் இன்னும் கொஞ்சம் நல்லா வாழலாம்! என்ன செய்றது? எல்லாம் சாமி விட்ட வழி!' என்று அங்கலாய்த்தபடி அவள் இருந்தபோது, வழக்கம் போலவே அவள் கணவன் சிவா, குடி போதையில் தடுமாறியபடி உள்ளே நுழைந்தான்!

அந்த செக்யூரிட்டி நிறுவனம் நல்ல சம்பளந்தான் கொடுக்கிறது சிவாவுக்கு! பார்வதியும் மற்றவர்களும் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவன் திருந்தியபாடில்லை! நல்ல மூடில் இருக்கும்போது, திருந்துவதாக வாக்களிப்பான்! ஆனால் கம்பெனியிலிருந்து திரும்புகையில் ஃபுல் போதையில்தான் வருவான்! அவனைத் திருத்துவது கடினம் என்று உணர்ந்துதான், பார்வதி ஐந்தாறு வீடுகளில் பாத்திரம் கழுவ, துணி துவைக்க என்று போக ஆரம்பித்தாள்! இரண்டு குழந்தைகளைக் கரையேற்ற வேண்டுமேயென்ற கவலை அவளுக்கு!

ரமா கொஞ்சம் நன்றாகவே படிப்பாள்! குடும்பப் பொறுப்பும் உணர்ந்தவள்! இளையவன் ரவி விளையாட்டுப்பிள்ளை! படிப்பில் அதிகக் கவனமும் கிடையாது! ஆறாவது வகுப்புக்குப் பக்கத்து ஊர்ப் பள்ளிக்கு ஒரு வாரமாகத்தான் போகிறான்! ஆனாலும் இந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே அவனிடம் ஏற்பட்டுள்ள சிறு மாற்றங்களை அவளும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள்!

பள்ளியிலிருந்து வந்தவன், "அம்மா! நான் சிறுவனா?இளைஞனா?" என்று கேட்கவும், அவளுக்கு ஆச்சரியமாகவும், அதே சமயம் ஆனந்தமாகவும் இருந்தது!ஏனெனில், இதுவரை ரவி இது போன்ற கேள்விகளையெல்லாம் அவளிடம் கேட்டதே இல்லை!

"நீ இப்போதைக்கு சிறுவன்! இன்னுங் கொஞ்ச நாள்ல இளைஞன்!" எதுக்குடா ரவி இப்படிக் கேட்கறே?" என்று பாசமும், அன்பும் பொங்க அவள் கேட்டுக் கொண்டே, அவனை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள்!

"இன்னுங் கொஞ்ச நாள்ன்னா எப்போம்மா?

"இப்பத்தானே ஆறாம் க்லாஸ்ல சேர்ந்திருக்கே! பத்தாம் க்லாஸ் வரைக்கும் நீ சிறுவன்! அப்புறமா நீ இளைஞன்!"

"அவ்வளவு நாள் ஆகுமாம்மா நான் இளைஞனாக?!" என்று அவன் ஆதங்கத்துடன் கேட்க, பார்வதியோ, "ஆமா ரவி! நீ வளர்ந்துதானே இளைஞனாக முடியும்! சரி! எதுக்கு நீ இப்படிக் கேட்கறே? ஸ்கூல்ல யாராவது ஏதாவது சொன்னாங்களா?"

"அம்மா! நீ விவேகானந்தர் பத்திக் கேள்விப்பட்டிருக்கியா?அவர் பெரிய மகானாம்! அவர் சொன்னதையெல்லாம் கேள்விப்பட்டா ரொம்ப ஆச்சரியமா இருக்கும்மா!ஆமாம்மா!

39 வயசுல ஒருத்தர் எப்படிம்மா இருப்பார்?"

"முப்பத்தொன்பதா? ம்! உன்னோட அப்பா மாதிரி இருப்பார்! ஏன்னா... இப்ப அவருக்கு 39 வயசுதான் நடக்குது! என்ன... இவரு குடிச்சிக் குடிச்சி... ஒடம்பைக் கெடுத்து வெச்சிருக்காரு! ஏம்பா 39 வயசு பத்திக் கேட்கறே!"

"இல்லம்மா! அவ்வளவு பெரிய மகான் 39 வயசுலேயே செத்திட்டாராம்! அவரு சாகறப்ப எப்படி இருந்திருப்பாருன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்!"

அப்பொழுது, மொடாக்குடியனான சிவா படுக்கையிலேயே வாந்தி எடுக்க, பார்வதி அவசரமாகச் சென்றாள், அதனைச் சுத்தப்படுத்த!                 

ரவிக்கு தமிழாசிரியர் மூர்த்தியை, மிகக் குறுகிய காலத்திலேயே பிடித்துப் போயிற்று! அவர் விவேகானந்தரைப் பற்றிச் சொல்வதை ரொம்பவும் விரும்பிக் கேட்பான்! 

முதல் நாள் வகுப்பிலேயே, அவர் சொன்ன 'என்னிடம் 100 இளைஞர்களைக் கொடுங்கள்! நான் நாட்டையே மாற்றிக் காண்பிக்கிறேன்!' என்பதை ரவியின் மனது எப்பொழுதும் அசை போட்டுக்கொண்டே இருந்தது! அவனுள்ளே விவேகானந்தர் விசுவரூபம் எடுப்பதை அவனால் நன்கு உணர முடிந்தது! விவேகானந்தரின் புத்தகங்களை லைப்ரரியில் தேடிப் படித்தான்! அவரின் பொன் மொழிகளை மனப்பாடம் செய்தான்!

"உண்மைக்காக எதையும் துறக்கலாம்! ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது!"

"பல வண்ண மலரையோ, பறக்கும் பட்டாம் பூச்சியையோ அதன் அழகுக்காக நேசிக்கலாம்! ஆனால், மனிதர்களை உருவத்தை வைத்து எடை போடக்கூடாது!"

"ஆயிரம் முறை தோற்றுவிட்டாயா? பரவாயில்லை! மேலும் ஒரு முறை முயன்று பாரேன்!"

இப்படிப் பலவற்றை மனப்பாடம் செய்து, தனியாக இருக்கையில் அது பற்றிச் சிந்திக்கலானான்!

இன்றும் தமிழாசிரியர் மூர்த்தி வகுப்பெடுத்தார்!

'அமெரிக்காவின் சிகாகோ நகரில், உலகமே வியக்க 'சகோதரர்களே! சகோதரிகளே!' என்று விளித்து, நம் இந்து மதத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்திய அந்த 1893 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்கது! பல ஆண்டுகளைக் கடந்து வந்து விட்டோம்! அந்த ஆத்ம புருஷர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்! அவரின் போதனைகள் என்றும்  அழியாதவை! மார்கண்டேய குணம் வாய்ந்தவை! அதனைப் பின்பற்றி நீங்களும் உயர வேண்டும்!'

இதையும் படியுங்கள்:
குட்டிக் கதை - யூனிபார்மில் சிவப்புக் கறைகள்!
Tamil short story - Oru soru

ரவியின் மனத்திலோ, 'செய்! புத்திசாலித்தனமாக ஒன்றைச் செய்!' என்ற ஆழ்மனத்தின் குரலே எதிரொலித்துக் கொண்டிருந்தது! 'என்ன செய்யலாம்?' ஏதேதோ எண்ணங்கள் மனதில் தோன்றின! 'ஆசிரியரின் குரல் அப்பொழுதும் ஒலித்தது! முதலில் வீடு! அப்புறம் நாடு!'

‘வீடா?... வீட்டில்!’ அவனுக்குத் திடீரென பொறி தட்டிற்று! ம்! சரி! என்று மனதிற்குள்ளேயே திட்டம் உருவாயிற்று!அதைச் செயல்படுத்துவது என்று உறுதியும் பூண்டான்!

         வீட்டுக்கு வந்தான்! வழக்கம் போல சிவா-அவனுடைய அப்பா, மது மயக்கத்தில் புரண்டு படுக்க, ரவி சொன்னான்! "அப்பா! நான் சொல்வது உங்களுக்குக் கேட்கிறதா?" அரை மயக்கத்தில் சிவா சொன்னான் நா குழற!" கேட்கிறது மகனே சொல்!"

"அப்பா! நீங்க குடியை நெறுத்துற வரைக்கும் நான் சாப்பிடப் போறதில்ல! எப்ப நீங்களா குடிக்கறதை நெறுத்துறீங்களோ அப்பதான் சாப்பிடுவேன்! இது அந்த விவேகானந்தர் மீது சத்தியம்! சொல்லிவிட்டு சிவாவின் கால்மாட்டில் அமர்ந்தான் ரவி!

'ம்! பாரு எவ்வளவோ சொல்லியும் நாம் கேட்கவில்லை! இந்தப் பொடியனைச் சமாளிப்பதா முடியாத காரியம்? ம்! பார்த்துக்கலாம்! என்றெண்ணியபடி புரண்டு படுத்தான்!

வீட்டு வேலை முடிந்து வந்த பாருக்கு முதலில் புரியவில்லை! 'ஏன் ரவி இப்படி உட்கார்ந்திருக்கிறான்?' அப்புறம் காரணத்தை அவனே சொன்னபோது, 'புள்ளக்கி பொறுப்பு வந்து விட்டதே! என்ற மகிழ்வும், 'இந்த மனிதனா திருந்துவார்! புள்ள சாப்பிடாம இருந்து ஒடம்பைக்  கெடுத்துக்குவானே!' என்ற பயமும் சேர்ந்து அவளை அலைக் கழித்தன!

ஆனால், ரவியின் கண்களில் ஓர் உறுதி, ஜ்வாலை விடுவதை அவளால் உணர முடிந்தது! அன்றிரவு பாரு எவ்வளவு வற்புறுத்தியும் ரவி சாப்பிடவில்லை!

இதையும் படியுங்கள்:
சிறுகதை; டெலிபோன் மணியோசை!
Tamil short story - Oru soru

அடுத்த நாளும் அவ்வாறே!

ரவி தன் பிடிவாதத்திலிருந்து சற்றும் பின் வாங்கவில்லை!

மூன்றாம் நாள், தன் தம்பியின் நிகழ்வு கேட்டு ரமா ஹாஸ்டலில் இருந்து வந்து, அவள் பங்குக்கு 

அவனுடன் சேர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டாள்!

சிவாவுக்குத் தன் குழந்தைகளின் பிடிவாதம் ஆச்சரியமூட்ட, வேறு வழியின்றி அவர்களுக்கு அவன் பொய்ச்சத்தியம் செய்து, அவர்களைச் சாப்பிட வைத்தான்!

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு,அதுவரை குடிப்பக்கம் போகாதிருந்த அவன், கொஞ்சமாகக் குடித்து விட்டுவர, அதனை அறிந்து கொண்ட ரவி அன்றிரவு சாப்பிடவில்லை! ரவியிடமிருந்து தன்னால் இனித் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அவன், மருத்துவர்களை அணுகித் தன் குடிப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வழி தேடினான்!நாளடைவில் முழுதுமாகக் குடியை விட்டும் விட்டான்!

இச்செய்தி ரவியின் பள்ளிக்கு எட்ட, ரவியைக் குடும்பத்தாருடன் அழைத்து, பெற்றோர் சங்கக்ூட்டத்தில் பாராட்டினர்!

தலைமையாசிரியர் ரவியின் உறுதிப்பாட்டை மிகவும் புகழ்ந்தார்!

தமிழாசிரியர் மூர்த்தியோ, தான் ரவியை, ஓர் இளம் விவேகானந்தராகவே பார்ப்பதாகப் புகழாரம் சூட்டினார்! 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!' என்பார்கள்!பதம் பார்த்த சோறு நன்றாக வெந்து விட்டது!அப்படியென்றால் மற்றதும் அவ்வாறுதானே நான்...இல்லையில்லை...

விவேகானந்தர் வென்று விட்டார்!'

சிவாவோ, தன் மகன்தான் தன்னை மனிதனாக மாற்றியதை ஒப்புக்கொண்டு, விவேகானந்தருக்கும், தமிழாசிரியருக்கும் தன் நன்றிகளைத் தெரிவிக்க, இறுதியாக ரவி பேசினான்!

'என் தமிழாசிரியர் எனக்கு விவேகானந்தரை அறிமுகப்படுத்தினார்! அவர் சொல்லியபடி நான் வீட்டைத் திருத்தி விட்டேன்! இனி நாடுதான் என் இலக்கு! கோடிக் கணக்கான மாணவர்களின் உதவியுடன்... நான்... சாரி!.. நாங்கள் சாதிப்போம்! இதுதான் இந்த ஆண்டில் நாங்கள் எங்கள் மகானுக்குக் கூறும் உறுதிமொழி!

"ஆம்! ஆம்! ஆம்!" என்று நூற்றுக்கணக்கான இளம் குரல்கள் அவன் கருத்தை ஆமோதிக்க, சுவற்றில்  மாட்டப்பட்டிருந்த படத்திலிருந்து மகான் விவேகானந்தர் அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார்!

இதையும் படியுங்கள்:
சிறுகதை; மேய்ப்பன்!
Tamil short story - Oru soru

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com