சிறுகதை: பெற்றால்தான் பிள்ளையா?

mother's love Tamil short story
mother's love tamil short storyCredit: AI Image
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

ன்று வெள்ளிக்கிழமை ஆனதால், கோவிலில் வழக்கத்தை விடக் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. புவனேஸ்வரி அம்மனின் அபிஷேக ஆராதனைகளை முடித்து துர்கை சன்னதிக்கு வந்தான் முத்துக்குமரன். அங்கே பெண்கள் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போடுவதற்காகத் தயார் செய்து கொண்டிருந்தனர்.

"குமார் சாமி! அபிஷேகத்துக்குப் பால், தயிர் எல்லாம் எடுத்து வைச்சுட்டேன்ங்க," என்றார் வழக்கமாகப் பூஜைக்கு வரும் சுந்தராம்பாள்.

"ரொம்ப நன்றிம்மா! இதோ அபிஷேகத்தை ஆரம்பிச்சுடுறேன்," என்றான் குமரன் பணிவாக. அப்போது துர்கை சன்னதிக்கு நேர் எதிரே இருந்த தூணின் அருகில் நின்றிருந்த புதியவர்களைப் பார்த்தான் குமரன். அவர்கள் தாயும் மகனும் போலிருந்தனர்.

குமரன் அபிஷேகம் செய்து, அலங்காரம் முடித்துத் தீபாராதனை செய்யும்போது, தூணில் சாய்ந்து அந்தப் பெண்மணி மட்டும் அங்கே அமர்ந்திருந்ததைப் பார்த்தான். சற்று வயதானவர்தான். 'சரி, பையன் பிரகாரத்தைச் சுற்றி வருகிறான் போலும்; இந்தப் பெண்மணிக்கு நடக்க முடியாததால் இங்கேயே அமர்ந்திருக்கிறார்' என நினைத்த குமரன், அனைவருக்கும் குங்குமப் பிரசாதம் கொடுத்துவிட்டு அவர் அருகில் வந்து அவரிடமும் தீபாராதனை தட்டை நீட்டினான்.

அந்தப் பெண்மணி நடுங்கும் கரங்களால் தீபத்தை ஒத்திக்கொண்டார். "உங்க பையன் பிரகாரத்தைச் சுற்றி வராரா?" என்று கேட்டான் குமரன்.

"இல்லப்பா... அவனுக்கு இங்க பக்கத்துல ஏதோ வேலை வந்துடுத்து. அதை முடிச்சுட்டு வந்து என்னை வீட்டுக்குக் கூட்டிண்டு போறேன்னு சொன்னான். அதான் இங்கேயே உட்கார்ந்து இருக்கேன்," என்றார் அந்தப் பெண்மணி.

"ஓ, சரிம்மா," என்ற குமரன் அங்கிருந்து நவகிரக சன்னதிக்குச் சென்றான். அதன் பின் சன்னதி மாற்றிச் சன்னதி தீபாராதனைகளும் அர்ச்சனைகளும் செய்ய வேண்டி இருந்தாலும், குமரனுக்கு 'அந்தப் பெண்மணி யாராய் இருக்கும்?' என்ற கேள்வி அவனுள் ஓடிக்கொண்டுதான் இருந்தது.

அந்தப் புவனேஸ்வரி கோவில் டவுனின் ஒரு கோடியில் இருந்த சற்றுப் பிரசித்தி பெற்ற கோவில். அதனால் 'குமார் சாமி குருக்கள்' என அந்த ஏரியா முழுவதும் பிரபலமாக இருந்தான் முத்துக்குமரன். அவனுடைய சிவந்த நிறமும் கட்டுக் குடுமியும் மட்டுமல்லாது, அவன் பூஜை செய்யும் அழகு, வேத மந்திரங்களை உச்சரிக்கும் முறை, கோவிலுக்கு வருபவர்களிடம் அன்பும் கருணையும் மரியாதையுடனும் பேசும் விதம் அனைவரையும் கவர்ந்தது.

வயதில் சற்று இளையவனாக இருந்தாலும், கோவிலின் அனைத்து வேலைகளையும் ஒரு ஈடுபாட்டுடன் செய்யும் குமரனிடம் எல்லோரும் மிகுந்த மரியாதையுடன் பழகினர்.

உச்சிகால பூஜை முடிந்து கட்டளைகாரர்களுக்குப் பிரசாதம் வழங்கிய பின் வீட்டுக்குக் கிளம்பினான் குமரன். அவனையுமறியாமல் துர்கை சன்னதிக்குக் கால்கள் சென்றன. அந்தப் பெண்மணி அப்போதும் தூணில் சாய்ந்தபடியே கண்களை மூடி அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் பசியின் வேதனை தெரிந்தது. ஒல்லியான உடல்வாகு, சிவந்த நிறம், தலை அதிகம் நரைக்கவில்லை; ஒரு அறுபத்தைந்து வயது இருக்கலாம். அவரைப் பார்த்துத் தனக்குள் ஒரு மதிப்பீடு செய்தபடி அவர் அருகில் வந்த குமரன், "அம்மா, உங்க பையன் இன்னும் வரலையா?" என்று கேட்டான்.

அருகில் காலடி ஓசை கேட்டு கண்விழித்த அந்தப் பெண்மணி, "இன்னும் வரலையேப்பா," என்று பரிதாபமாகக் கூறினார்.

"காலையில ஏதாவது சாப்பிட்டேளா?" என்று கேட்ட குமரன், "இப்ப பிரசாதம் இருக்கு, வாங்கிக்கோங்க," என்று கூறி ஒரு பாக்கு மட்டையில் சாம்பார் சாதம் இரண்டு கரண்டியும், சர்க்கரை பொங்கல் ஒரு கரண்டியும் வைத்துக் கொடுத்தான்.

அதைக்கையில் வாங்கிக்கொண்ட அந்தப் பெண்மணி, "கோவிலைப் பூட்டப் போறேளா? நான் வெளியே போய் உட்கார்ந்துக்கிறேன். என் பையன் எப்ப வருவான்னு தெரியலையே," என்றார் சற்று வெட்கத்துடன்.

"கோவிலை ராத்திரிதான் நடை சாத்திப் பூட்டுவோம். இப்ப சன்னதிகள் மட்டும்தான் பூட்டுவது வழக்கம்," என்ற குமரன், "ஆமா, உங்க பேர் என்னம்மா?" என்றான்.

"என் பேரு கோமதி. என் பையன் பேரு ராஜகோபால், நான் 'ராஜா'ன்னு கூப்பிடுவேன். எங்க வீடு ராம் நகர்ல இருக்கு," என்று ஒரு நீண்ட பதிலைக் கொடுத்தார் கோமதி.

"ராம் நகர்ல இருந்து இவ்வளவு தூரம் தள்ளி இருக்கிற கோவிலுக்கு வந்திருக்கேளே, என்ன காரணம்?" என்று கேட்டான் குமரன்.

"நான் எப்பவோ சொன்னேன் புவனேஸ்வரி அம்மனைப் பார்க்கணும்னு. என் பையனுக்கு இப்பதான் நேரம் ஒழிஞ்சது போல இருக்கு, கூட்டிண்டு வந்துட்டான்." வெகு நேரமாக மகன் திரும்பி வராதது கண்டு, கவலையும் சலிப்பும் தோய்ந்த வார்த்தைகளாக வெளிவந்தன அந்த அம்மாவிடம். குமரனுக்குப் புரிந்தது கோமதி அம்மாவின் மனநிலை.

"சரிம்மா, நீங்க இங்கேயே சாப்பிட்டுட்டு இருங்கோ. வெளியில பூக்கடைக்காரங்க எல்லாம் இருக்காங்க, பயப்பட வேண்டாம். உங்க பையன் வந்ததும் நீங்க போயிட்டு வாங்கோ. இப்ப நான் போயிட்டுச் சாயங்காலம் அஞ்சு மணிக்குத்தான் வருவேன். வரேன்," என்று கூறி கோமதியிடம் விடைபெற்றான் குமரன்.

கோவிலுக்குப் பக்கத்துத் தெருவில் இருந்த தன் வீட்டுக்கு வந்த குமரன், தன் மனைவி கௌரியிடம் கோமதி அம்மாவைப் பற்றிக் கவலையுடன் கூறினான். "அவா பையனுக்கு வேலை முடிய நேரமாயிடுத்தோ என்னவோ? நீங்க ஏன் இதுக்கு இப்படி வேதனைப்படறேள்? நீங்க சாயங்காலம் கோவிலுக்குப் போறச்சே அவா ஆத்துக்குப் போய் இருப்பா பாருங்கோ," என்றாள் கௌரி.

"போயிட்டா சந்தோஷம்," என்றான் குமரன். மாலை கோவிலுக்கு வந்த குமரனின் கண்கள் கோமதியைத் தேடின. அவள் அங்கு இல்லாதது கண்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆனால், சிறிது நேரம் கூட அது நிலைக்கவில்லை. கோமதி அம்மா சிவன் சன்னதியில் இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தார். 'அடக்கடவுளே! இந்த அம்மாவோட பையன் இன்னும் வரலையா?' என நினைத்தவன், அனைத்து சன்னதிகளையும் திறந்தான். அதன்பின் சாயங்கால பூஜைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் குமரன்.

மாலை வேளையில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. இரவு மணி எட்டாகப் போவதைப் பார்த்து, நாளின் நிறைவு பூஜைகளைச் செய்து முடித்துச் சன்னதிகளைப் பூட்ட ஆரம்பித்தான் குமரன். கோமதி சிவன் சன்னதி திண்ணையிலேயே அமர்ந்திருந்தார். அங்கு வந்த குமரனைப் பார்த்து, "என் பையன் வரவே இல்லப்பா, இப்ப நான் என்ன செய்யட்டும்?" என்று அவனையே கேட்டார் கோமதி.

"உங்க வீடு ராம் நகர்ல எங்கன்னு சொல்லுங்கோ, நானே கொண்டு விட்டுடறேன்," என்றான் குமரன்.

"அது ராம் நகர்ல கொஞ்சம் உள்ள தள்ளி இருக்கு. சந்து சந்தா போகணும். நான் அதிகமா வெளியே வந்தது இல்லப்பா, இருட்டுல எனக்கு வழி சொல்லத் தெரியாதே," என்று கூறி விழித்தார் கோமதி. குமரனுக்கு ஒன்று புரிந்தது; அந்த அம்மாவின் மகன் வேண்டுமென்றே தன் அம்மாவை இங்கே கூட்டிக்கொண்டு வந்து விட்டுப் போய்விட்டான் என எண்ணினான்.

ராஜகோபால் தன் அம்மா கோமதியைக் கோவிலில் விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். குற்ற உணர்ச்சியில் அவன் மனம் தவித்தது. வீட்டை காலி செய்து பொருட்கள் எல்லாம் கட்டி எடுத்து வைக்கப்பட்டிருந்தன. அவன் மனைவி பாமா, "ஏங்க, வேன் எப்ப வரும்? என் அம்மாவும் தம்பியும் நமக்கு உதவிக்கு இப்ப வரேன்னு சொன்னாங்க," என்றாள் மகிழ்வுடன்.

"பாமா, நாம இப்படிச் செய்யறது நமக்கே அடுக்குமா? நீயே சொல்லு," என்று கேட்டான் ராஜா.

"இங்க பாருங்க, இந்த விஷயத்தைப் பத்தி நாம நிறைய பேசியாச்சு. இனிமேல் பேசவோ யோசிக்கவோ என்னால முடியாது. நீங்கதான் 'என் அம்மா எங்க போனாலும் பொழைச்சுப்பா, அவளை அனாதைன்னு சொல்லி விடுதியில விட முடியாது'ன்னீங்க. இப்ப எதுக்கு இப்படிக் கேட்கிறீங்க? பேசிப் பேசி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு," என்று இரக்கமில்லாமல் கூறினாள். அன்று இரவு தன் மனைவி, குழந்தைகளுடன் ராஜகோபாலன் மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றான்.

முத்துக்குமரன் கோமதி அம்மாவை அன்று இரவு தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தான். மறுநாள் கோவிலில் உச்சிகால பூஜை முடிந்ததும் கோமதியை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கோவிலுக்குச் சென்றான் குமரன். கௌரிக்கு கோமதியைப் பார்த்ததுமே மிகவும் பிடித்துப்போனது. கௌரி கர்ப்பிணியாக இருந்ததால், கோமதி வந்த சில மணித்துளிகளிலேயே கௌரிக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தார்.

ராம் நகரில் கோமதி தட்டுத் தடுமாறி வழி சொல்ல, ஒரு வழியாகக் கோமதியின் மகன் வீட்டை அடைந்தனர் இருவரும். பூட்டியிருந்த அந்த வீட்டைப் பார்த்துக் கோமதி திகைத்துப் போனார். குமரன் அக்கம்பக்கத்தில் விசாரித்தான். "அவங்க நேத்தே வீடு காலி செய்துட்டாங்களே அம்மா! நீங்க போகலையா?" என்று அவர்களே விசாரிக்க, கோமதிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

குமரனுக்கு அதைப் பார்க்கவே பாவமாக இருந்தது. "அம்மா, நீங்க நம்ம ஆத்துக்கு வாங்கோ. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்," என்றான் குமரன்.

அப்படி இப்படி என்று கோமதி குமரன் வீட்டுக்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. கோவில் டிரஸ்டியிடம் அனுமதி வாங்கி, கோவிலில் பிரசாத ஸ்டால் போட்டது நன்றாகப் போனது. கௌரியிடம் "எனக்கு பட்சணம் எல்லாம் நன்னா பண்ண வரும். உனக்கு லட்டு பண்ணித் தரேன்," என்று கூறி கோமதி செய்ததுதான் கோவிலில் முறுக்கு, லட்டு, அதிரசம் என ஸ்டால் போட விதையானது. குமரனிடம் "இத்தனை அருமையான இந்த மனுஷியை இப்படித் தவிக்க விட்டுட்டுப் போக அவா பையனுக்கு எப்படி மனசு வந்தது?" என்று கௌரிதான் மாய்ந்து போனாள்.

"விடுமா, அவர் சூழ்நிலை என்னவோ! இப்ப கோமதி அம்மா நல்லா இருக்காங்களே, அது போதும்," என்றான் குமரன்.

அன்றும் வெள்ளிக்கிழமை. புவனேஸ்வரி அம்பிகைக்குப் பூஜை முடித்து துர்கை சன்னதிக்கு வரும் வழியில், கோமதி அம்மாவின் பிள்ளை தூண் மறைவில் இருந்து பிரசாத ஸ்டாலில் அமர்ந்திருந்த தன் அம்மாவைக் கண்கள் பனிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் வந்த குமரன், "சார், அம்மாகிட்ட போய் பேசுங்கோ. உங்க அம்மா ரொம்ப அன்பானவா," என்றான்.

"உண்மைதான் சார்," என்ற ராஜகோபாலன் குமரனின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டான். குமரனே அவனை கோமதியிடம் அழைத்துச் சென்றான். "அம்மா, உங்க புள்ள வந்திருக்கார் பாருங்கோ," என்று சொன்ன குமரனிடம், "வாப்பா, எப்ப பம்பாயிலிருந்து வந்த?" என்று எதுவுமே நடக்காதது மாதிரி கேட்டார் கோமதி.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மெண்ட்டோ மீட்டர்!
mother's love Tamil short story

"அம்மா, என்னை மன்னிச்சேன்னு சொல்லுமா!" என்று கதறிய ராஜகோபாலனிடம், "ராஜா, இது கோவில். நாம குமரன் ஆத்துல போய் பேசிக்கலாம்," என்று கூறியவள் குமரனிடம், "நான் ஆத்துக்கு இவரை கூட்டிண்டு போறேன். ஸ்டாலை யாரையாவது பார்த்துக்கச் சொல்லுப்பா," என்று கூறிச் சென்றார்.

வீட்டுக்குச் சென்றதும் கௌரியிடம், "அம்மா கௌரி, இவர் ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கார். நான் சாப்பிட ஏதாவது இவருக்குக் கொடுக்கட்டுமா?" என்று கேட்டார் கோமதி.

"என்னம்மா இது கேள்வி? நீங்க தாராளமாக் கொடுங்கோ," என்றாள் கௌரி.

கோமதியின் உபசரிப்பு அவர் மகனைக் கூனிக் குறுகச் செய்தது. "அம்மா, நான் உன்னை என்னோட பம்பாய்க்குக் கூட்டிண்டு போகத்தான் வந்து இருக்கேன். நீ வரமாட்டேன்னு சொல்லக்கூடாதுமா," என்று கெஞ்சினான் ராஜா.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: முடிவில் ஒரு திருப்பம்!
mother's love Tamil short story

பதில் ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்த கோமதி சற்று நேரம் கழித்து, "வீட்டுல வளர்க்கற செல்லப் பிராணிகளான நாய், பூனையைக் கூடச் சாகற வரைக்கும் வீட்டுல வச்சுக்கிற சிலருக்கு, கண்ணுக்குக் கண்ணா வளர்த்து அவங்களை ஆளாக்கின வயசான அப்பா அம்மாவை வீட்டுல வச்சுக்கப் பிரியப்படறதில்ல. ஆனா எல்லாரும் அப்படி இல்ல. வீட்டுல பெரியவா இருக்கிறது சாபம் இல்லப்பா. இதோ கௌரியும் குமரனும் 'பெரியவா எங்க ஆத்துல இருக்க நாங்க கொடுத்து வச்சிருக்கோம்'னு சொல்றா. என்னை அன்போடு பார்த்துக்கறா. நீ வேண்டாம்னு தூக்கி எறிஞ்சதை, இதோ இவா என்னை தாங்கிண்டுட்டா. நான் சௌக்கியமா இருக்கேன். இந்த பாத்திரத்தில் குழந்தைகளுக்குப் பட்சணம் போட்டு வச்சிருக்கேன், கொண்டு கொடு. என்னைப் பற்றி நீ இனி கவலைப்படத் தேவையில்லை," என்று கோமதி அம்மா கூறியது, 'நீ இப்ப கிளம்பலாம்' என்பது போல் இருந்தது ராஜாவுக்கு.

அம்மாவின் கோபம் நியாயமானதுதான். 'நான் தான் ஒரு பொக்கிஷத்தைத் (mother's love) தொலைச்சுட்டேன்' என்று புலம்பியவன், 'பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலை உடைத்துக்கொண்டு உதவிக்கு மாமியாரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தன் மனைவிக்கு என்ன பதில் சொல்வது?' என்று கவலையானான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com