
நான் வீட்டினுள் நுழைந்தது கூடக்கவனியாமல், என் மனைவி போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தாள்.
"நாள்பூரா வேலையே சரியாக இருக்கு. ரெஸ்டே இல்ல. இயந்திரத்தனமாக இருக்கு. இப்படியே போனா பிடிப்பே இல்லாமப் போயிடுமோன்னு பயமாயிருக்கு."
கேட்டதும் அப்படியே ஷாக்காயிட்டேன். "ஞானசேகரா, என்ன நடக்குது உன் குடும்பத்தில்... வரமாய் கிடைத்த மனைவி வாடும்படி, விட்டு விட்டாயே... உடனே இதற்கு ஒரு தீர்வை யோசி.." மனசாட்சி சுட்டி, திட்டியது.
சற்று நேரத்தில் முடிவெடுத்தேன். குழந்தைகளிடமும் கேட்டதற்கு, "ஓ.கே. டாடி. புதன்கிழமை முதல் அமுலுக்கு கொண்டு வரலாம்" என மகன் மகேஷ் கூற, நான் நினைத்த காரணத்தை சொல்ல, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அந்த புதன்கிழமை என் மனைவியின் வாழ்வில் மகிழ்ச்சியை விதைத்தப் பொன்னான நாள். அதிகாலை, அஞ்சு மணிக்கு எழுந்து, வாசலில் அழகான கலர் கோலம் போட்டு உள்ளே நுழைந்தவளிடம் பொக்கே கொடுக்க, அவள் முகத்தில் பரவச ஆனந்தம். வாங்கி பூஜாடியில் அழகாக செருகி, சமையலறையுள் நுழைந்தாள்.
கூடவே, நானும், பிள்ளைகளும் போனோம்.
காபி தயாரித்து, கப்புகளில் ஊற்றிவிட்டு, டிரே எடுக்கப் போனவளிடம் "வேண்டாம்மா, நாங்களே எடுத்துக்கிறோம். இனிமே தினசரி காபி டிரேயுடன் நீ எங்களைத்தேடி வரவேண்டாம்" என்றாள் மகள் மதுமிதா. மனைவியின் முகத்தில் சந்தோச மின்னல்கள்.
பின் நானும் என் பையனும் மார்க்கெட் போய் அந்த வாரத்திற்கு தேவையான காய்களை வாங்கி வந்தவுடன், அவள் வதனத்தில் ஆச்சர்யம். "கால் வலியாயிருக்கே மார்க்கெட் போனால், ரொம்ப தூரம் நடக்கணுமேன்னு நெனச்சேன். ஈஸியாக்கிட்ட.. தேங்ஸ்ப்பா" என்றாள். பிள்ளையின் முகத்தில் பெருமிதம்.
மகள் ஒருபடி மேலே போய், துவைத்த துணிகளை கொடிகளில் போட்டு கிளிப் மாட்டினாள். அவள் அம்மா முகமெல்லாம் பூரிப்பு. சாப்பிட்ட தட்டுக்களை சிங்கில் போட்டோம். பெண், பாட்டில்களில் தண்ணீர் பிடிச்சு வைத்தாள்.
"என்னாச்சு உங்களுக்கு?" நம்பாமல் பார்த்தவளிடம் சொன்னேன்... "இனிமே இப்படித்தான்..."
கிடைத்த ஓய்வில் மதியம் குட்டித் தூக்கம் போட்டாள் என் ஜானு. மாலை, பிரஷ்ஷாக எழுந்து, டீ போடும்போது, கப்புகளை எடுத்துக் கொடுத்தான் மகேஷ். நாங்க, கிச்சனுக்கே போய் டீ வாங்கி வந்து, ஹாலில், சோபாவில் அமர்ந்து, அருந்தப் போகும்நேரம் வந்தாள்.
"என்னங்க .. என்னை வச்சு நீங்க காமெடி பண்ணலியே?" கலவரத்துடன் கேட்க, "இனிமே இப்படித் தான்" கோரஸாக மூவரும் சொல்ல,
"என்ன நடக்குது இங்கே?" பதிலுக்கு அவள் கத்த, விளக்கினேன்.
"ஜானகி, போன வாரம் எதேச்சையாக நீ யாரிடமோ பேசியதைக் கேட்டேன். வேலைப்பளுவால், உடலும், மனசும் சோர்ந்து, உனக்குப் பிடித்தமான விஷயங்களை மிஸ் பண்ணுவது புரிந்தது. உன்னை சந்தோசமா வச்சுக்க என்ன செய்யலாம்னு யோசிச்சப்போதான் செம ஐடியா கெடைச்சது. பசங்ககிட்ட சொன்னேன்... 'ஜனவரி ஒன்னாம் தேதி புத்தாண்டு சபதம் எடுப்போமே.
இந்த 2025ல், உங்க அம்மாவை சந்தோசப்படுத்தும் சபதம் எடுப்போமா?'னு கேட்டேன். டபுள் ஓ.கே. சொல்ல, இந்த வருடம் மட்டுமல்ல... எல்லா வருஷமும் இன்னிக்கு உள்ள மாதிரி உனக்கு அனுசரனையா இருக்கும் சபதம் எடுத்துள்ளோம். சொல்லிக்கிற மாதிரி கெத்தான சபதம் இல்லைன்னாலும், எங்களாலும் முடியும். இனி உன் மனவானில் என்னிக்குமே மகிழ்ச்சியின் வானவில்தான்...." என முடிக்க...
ஜானகியின் மனசெல்லாம் மத்தாப்பு...