
சதாசிவம் இங்குமங்குமாக நடந்து கொண்டே இருந்தார். விடிந்தால் தீபாவளி இன்னும் பெண்ணும் மாப்பிள்ளையும் வரவில்லை என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார். அவருடைய பெண்ணுக்கு இது தலை தீபாவளி. அவருக்கு ஒரே மகள் தான். சதாசிவத்திற்கு சம்பளம் ஒன்றும் அதிகமாக கிடையாது. ஏதோ ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சென்ற வருடம் ரிட்டையரும் ஆகிவிட்டார். எப்படியோ லோன் போட்டு ஒரு வீட்டை கட்டி விட்டார். மகளுக்கும் நல்லபடியாக திருமணத்தை நடத்தி வைத்தார். ஆனால் தலை தீபாவளிக்கு அவரால் மாப்பிள்ளைக்கு செயினும் மோதிரமும் வாங்க முடியாமல் போய்விட்டது. மாப்பிள்ளை வந்த உடனேயே இதை சொல்லி விட வேண்டும் என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
கிச்சனிலிருந்து அவருடைய மனைவி மரகதம் கத்திக் கொண்டிருந்தாள். "ஏங்க, குட்டி போட்ட பூனை மாதிரி ஏன் அலையறீங்க இங்கேயும் அங்கேயுமா? மாப்பிள்ளை வந்தா பேசிக்கலாம் அவர் கேட்பாரு நீங்க எதுக்கு டென்ஷனாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.
மரகதம் சதாசிவத்தை கேட்டாலும் உள்ளுக்குள் அவளுக்கும் சங்கடமாக தான் இருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வீராப்பாய் பேசிக் கொண்டிருந்தாள்.
மாப்பிள்ளை ரகுவிற்கு அம்மா அப்பா கிடையாது. அவனுடைய மாமா தான் அவனை எடுத்து வளர்த்தார். அவருக்கு மூன்று வயது இருக்கும் போதே அவர் தாய் இறந்து விட்டாள். அப்பாவும் 15 வயது ஆகும் போது இறந்து விட்டார். மாமாவிற்கு குழந்தைகள் இல்லை. ஆகவே இவரை தான் தன் சொந்த மகனாக வளர்த்து வந்தார். மாமாவும் ரகு கூடவே தான் இருக்கிறார். ரகுவின் மாமி அடிக்கடி கிராமத்திற்கு சென்று விடுவாள். இப்ப கூட அவள் கிராமத்தில் தான் இருக்கிறாள். தலை தீபாவளிக்கு பொண்ணு மாப்பிள்ளை மற்றும் மாமாவும் வருவார்கள். சதாசிவத்திற்கு ரகுவின் மாமா எதிரே எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
இரவு மணி எட்டாகிவிட்டது. மரகதம் பஜ்ஜி, வெங்காய சாம்பார் என்று எல்லாம் செய்து விட்டாள். பெண் மாப்பிள்ளையின் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதோ, மூவரும் வந்துவிட்டார்கள். ரகுவின் மாமா மிகவும் நல்லவர். அவரைப் போன்ற நல்லவரை இந்த உலகத்தில் காண்பது மிகவும் அரிது. வந்தவுடனேயே அவர் கிச்சனுக்குள் சென்று மரகதத்திற்கு ஒத்தாசை செய்தார்.
"அம்மா தங்கச்சி, நீ எதுக்கு ஒரு மாதிரி டென்ஷனா சோகமாவே இருக்க" என்று மரகதத்தை பார்த்து அவர் கேட்டார். "அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா" என்று பூசி மழுப்பினாள்.
"இதை பாரு தங்கச்சி, எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு, உன் மூஞ்சி சொல்லுது நீ ஏதோ பிரச்சனையில் இருக்க என்று" சொன்னார் மாமா.
இவர்கள் இருவரின் பேச்சு வார்த்தைக்கு இடையில் மாப்பிள்ளை சமையலறைக்குள் வந்துவிட்டார். "அத்தை எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு போடுங்க" என்றார்.
மரகதமும் பேச்சை நிறுத்திவிட்டு எல்லோருக்கும் உணவை பரிமாறினாள். இப்படியே எல்லோரும் சிரித்து பேசிக் கொண்டே மணி பத்து ஆகிவிட்டது. பிறகு எல்லோரும் தூங்க சென்று விட்டார்கள் காலையில் சீக்கிரம் எழுந்தாக வேண்டும் என்று.
எல்லோரும் தூங்கிய பிறகு மரகதமும் சதாசிவமும் செயினையும் மோதிரத்தையும் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மாமா மட்டும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார் இவர்கள் பேசியது அவர் காதில் விழுந்தது "ஓஹோ... இதுதான் சங்கதியா?" என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டார்.
மெதுவாக மாப்பிள்ளை படுத்திருந்த அறைக்குள் சென்றார். மாப்பிள்ளையை எழுப்பினார். விவரத்தை கூறினார். ரகு, "சரி மாமா நான் காலையில் பார்த்துக்கொள்கிறேன்... நீங்கள் போய் தூங்குங்கள்" என்று கூறினார்.
மாமாவை அனுப்பிவிட்டு மாப்பிள்ளை தனக்கு தெரிந்த நகைக் கடை நண்பன் ஒருவனுக்கு கால் செய்தார். அவரிடம் "நாளை காலையில் நான் சொன்னதெல்லாம் ஏழு மணிக்குள் வர வேண்டும், பணத்தை இப்போதே நான் உனக்கு அனுப்புகிறேன்" என்று கூறிவிட்டு பணத்தையும் அனுப்பி விட்டார்.
காலையில் 4:00 மணிக்கே எழுந்து ஒவ்வொருவராக குளிக்க சென்று விட்டார்கள். மரகதம் மாப்பிள்ளையையும் குளிக்க தயாராகுமாறு கூறினாள்.
"அத்தை மணி கரெக்டா 7 ஆகட்டும் நான் குளிக்கிறேன்" என்றார் மாப்பிள்ளை.
"இல்ல, தம்பி சூரிய உதயத்துக்குள் குளிக்கணும் அதுக்கு தான் சொன்னேன்" என்றாள் மரகதம்...
"பரவாயில்ல அத்தை, ப்ளீஸ் 7:00 மணி வரல வெயிட் பண்ணுங்க" என்றார் ரகு.
சரியாக ஏழு மணிக்கு ரகுவின் நண்பன் வாசலில் வந்து நின்றான்.
சதாசிவம் போய் கதவை திறந்தார்.
"ஐயா வணக்கம், ரகுவை பாக்கணும்" என்றார் அந்த நபர்.
சதாசிவம் உடனே போய், "மாப்பிள்ளையிடம் உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்" என்று கூறினார்.
மாப்பிள்ளையும் வெளியே வந்து அந்த நபரிடமிருந்து பார்சலை வாங்கிக் கொண்டு "ரொம்ப நன்றி... தேங்க்ஸ்" என்று சொல்லி அவரை அனுப்பி விட்டார்.
பிறகு ரகு, மாமியாரிடம் "அத்தை, இப்ப எண்ணெயை கொண்டு வாங்க" என்றார்.
மரகதத்திற்கு ஒன்றும் புரியவில்லை..
உள்ளே சென்று எண்ணெய் கொண்டு வந்தாள்.
கோலம் போட்டு பலகையில் மாப்பிள்ளையை உட்காரச் சொன்னாள்.
எண்ணெயை வைக்கப் போனாள் மரகதம்..
"வெயிட்... வெயிட்... my dear அத்தை வெய்ட்" என்றார் ரகு.
தன் மனைவியை கூப்பிட்டு அந்த பார்சலை பிரிக்கச் சொன்னார். அவளும் பிரித்தாள்.
அதில் இரண்டு செயினும் இரண்டு மோதிரங்களும் இருந்தன.
மாப்பிள்ளை பலகையில் உட்கார்ந்து படியே மாமனாரை அழைத்தார்.
"மாமா, தலை தீபாவளிக்கு, மாமனார் தான் மாப்பிள்ளைக்கு மோதிரம் செயின் எல்லாம் போட வேண்டும் என்று எழுதி இருக்கிறதா? ஏன், மாப்பிள்ளை மாமனாருக்கு போடக்கூடாதா" என்றார் மாப்பிள்ளை.
பிறகு மாமியாரையும் அழைத்தார். இருவரையும் நிற்கச் சொன்னார் தலையில் எண்ணெய் வைக்க சொன்னார் என்னை வைத்து முடித்ததும் மாப்பிள்ளை, மாமனாருக்கும் மாமியாருக்கும் மோதிரத்தையும் செயினையும் அணிவித்தார்.
சதாசிவத்திற்கும் மரகதத்திற்கும் ஆனந்தக் கண்ணீர் வந்தது கண்களிலிருந்து. பேச முடியாமல் வாயடைத்துப் போய் நின்றார்கள்.
சதாசிவம் மாப்பிள்ளையை அனைத்து கட்டிக்கொண்டார். குழந்தை போல் அழுதார். மாமா வந்து சமாதானப்படுத்தி இது அழுவதற்கான நேரம் இல்லை ஆனந்தம் அடைவதற்கான நேரம் என்று கூறினார்.
சதாசிவம் சார், "நான் என் மாப்பிள்ளையை எப்படி வளர்த்து இருக்கேன் பாத்தீங்களா... அவளுக்கு அப்படியே அவங்க அம்மாவோட சுபாவம் என் தங்கச்சியும் இப்படித்தான் இருப்பாள்..."
"டேய் ரகு, ஜமாய்ச்சிட்டடா, இது தான் டா உண்மையான தலை தீபாவளி" என்று அவர் கூற குடும்பமே சந்தோஷத்தில் மூழ்கியது.