சிறுகதை: தறுதலை!

Tamil Short Story Tharuthalai
Boy reading book
Published on

“எத்தன தடவ மா மன்னிச்சி விட முடியும். போன மாசம் கிளாஸ்ல ரெண்டு பேர பிடிச்சி தள்ளிவிட்டான். ஒரு பையனுக்கு தலைல அடிப்பட்டுச்சி. அந்த பையனோட அப்பாவ சமாளிக்கவே முடியல. ஒரு வாரம் கழிச்சி கிளாஸ்ல இன்னொரு பையனோட சண்ட போட்டு அவன அடிச்சான். இப்ப கிளாஸ்ல வைக்கிற சாக்பீஸ் எல்லாம் திருடுறானு டீச்சர்ஸ் எல்லாம் உங்க பையன் மேல கம்ளைண்ட் பண்ணுறாங்க. இவனும் திருந்துற மாதிரி இல்ல. நீங்களே சொல்லுங்க என்ன பண்ணலாம் உங்க பையன?” என்றார் ஹெட் மாஸ்டர் ஆதிலட்சுமி.

“டீச்சரம்மா இந்த ஒரு தடவ மட்டும் மன்னிச்சி விடுங்க...”

“இதையே சொல்லிட்டு இருக்காதீங்கமா. ஆறாவது தான் படிக்கிறான். இப்பவே இப்படி இருக்கான். நீங்க வேற ஸ்கூல் பாருங்க. அதுதான் சரி.”

ஹெட் மாஸ்டர் சொன்னதை கேட்ட கடலமுத்துவின் அம்மா அங்கே கையைக்கட்டி நின்றுக் கொண்டிருந்தவனை ‘தறுதல தறுதல’ என்று திட்டிக் கொண்டே தலை கால் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தாள். இதை எதிர்பார்க்காத ஹெட் மாஸ்டர் அவரை தடுக்க எழும்பினார்.

“அம்மா அடிக்காதீங்க. அடிக்காதீங்க. நீங்களே உங்க பையன தறுதலனு சொல்லுறீங்க. அப்படி சொல்லாதீங்க. டேய் கடலமுத்து உங்க அம்மா பாவம்டா. ஏன் இப்படி பண்ணிட்டு இருக்க. போன தடவை பாவம்னு உங்க அம்மாக்காக தான் உன்னைய மன்னிச்சி விட்டேன். இந்த தடவையும் அவங்களுக்காக தான் விடுறேன். ஒழுங்கா வால்தனம் பண்ணாம இரு. அம்மா அப்பா படுற கஷ்டத்த நினைச்சி படிப்புல மட்டும் கவனத்த செலுத்து.”

நாமக்கல் மாவட்டம் தூசூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசாங்க பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் கடலமுத்து குறும்புத்தனத்தில் எப்பொழுதும் பள்ளியிலே முதல் மதிப்பெண் எடுப்பவன். ஒவ்வொரு மாதமும் ஹெட் மாஸ்டர் அறையில் அதற்கு பாராட்டு விழாவும், பரிசாக அவனுக்கு மன்னிப்பும் கிடைக்கும். அப்பா ஹோட்டல் கடையில் சர்வராகவும், அம்மா வீட்டு வேலை செய்தும் குடும்பத்தை ஓட்டுகிறார்கள். தாங்கள் தான் படிக்கவில்லை, மகனாவது படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசையும் கனவும் பெற்றோர்களான அவர்களுக்கு இருந்ததால் அவனுக்கு அறிவுரை சொல்லவும் அடித்து திருத்தவும் பலமுறை அவர்கள் எடுத்த முயற்சி வீணாகவே போயின.

இரு கால்களையும் சரியாக தரையில் பதித்து நடந்து கொண்டிருந்த கடலமுத்து ஓரிரு மாதங்களுக்கு பிறகு தனது வலது கால், ஒரே பக்கமாக சாய்ந்து நடக்க ஆரம்பித்தான். தொடக்கத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பெற்றோர் ‘நடந்தா கால் வலிக்குதுது’ என்று அவன் சொல்வதைக் கேட்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் அவனை அழைத்து சென்று பரிசோதித்தார்கள்.

“உங்க பையனுக்கு கால்ல ஆபரேஷன் பண்ணணும். அப்படி பண்ணாலும் சில சமயம் கால் சரியாகும். பழையபடி நேர நடப்பான். அப்படியில்லனா வாழ்நாள் முழுதும் வீல் சார்ல வைச்சி தள்ளிட்டு போற மாதிரி தான் இருக்கும். இரண்டுக்கும் வாய்ப்பு இருக்கு. ஆபரேஷன் பண்ணுறதுக்கு எப்படியும் 80 ஆயிரம் செலவாகும்.” என்றார் டாக்டர்.

துறையூரில் எண்ணெய் ஊற்றி நீவி விடும் பெரியவர் ஒருவரையும் போய் பார்த்தார்கள். செலவு தான் அதிகமானதே தவிர கடலமுத்துவுக்கு கால் சரியாகவில்லை.

உறவுக்காரர்கள் சிலர் குலதெய்வம் கோயில் சாமியாரிடம் குறிபார்க்க சொன்னார்கள். அதன்படி கடலமுத்துவை அவனது பெற்றோர்கள் சாமியாரிடம் அழைத்து சென்றார்கள். கண்களை மூடி அமர்ந்திருந்த சாமியாரிடம் கடலமுத்துவின் அப்பா வெற்றிலை கொடுத்ததும் அவர் தன் கையில் வைத்திருந்த உடுக்கையை அடித்து பிறகு கண்களை திறந்து பேச ஆரம்பித்தார்.

“வருசா வருசம் நீ நம்ம கோயிலுக்கு உன் சாதி சனத்தோட வந்து கெடா வெட்டி சாமிக்கு படையல் போடுவ. அந்த மாதிரி நீ போன வருசம் கெடா வெட்டும் போது வெட்டி வெச்ச ஆட்டு தலைய நாய் தூக்கிட்டு போனிச்சி. அந்த தலைய மறுபடியும் கழுவி நீ சமைச்சு சாமிக்கு படையல் போட்ட. எச்சில் பட்டத நீ சமைச்சு படைச்சது தான் சாமியோட அந்த கோபத்துக்கு காரணம். அதோட விளைவு தான் உன் மகனுக்கு இப்படி ஆகியிருக்கு.”

இதையும் படியுங்கள்:
ஆதித்தமிழன் சமைத்த சமுதாயம் எங்கே? சிந்திக்க வைக்கும் இரு நிகழ்வுகள்..!
Tamil Short Story Tharuthalai

பரிகாரம் செய்தால் கால் குணமாகும் என்று சொன்ன சாமியார் அதற்கு தேவையான சாமான்கள் லிஸ்டை அவர்களிடம் கொடுத்தார். கடலமுத்துவின் அப்பா தனக்கு தெரிந்த டீக்கடை வைத்துள்ள நண்பர் ஒருவரிடம் பரிகாரம் செய்ய தேவையான செலவு பணத்தை கடன் கேட்க சென்றார்.

“மாப்ள என் புள்ளைக்கு பிறக்கும் போது உதடு மேலால தூக்கி இருந்திச்சி. நாங்க அத அப்ப பெருசா கண்டுக்கல. 2 வருசத்துக்கு அப்புறம் உதடு ரொம்ப மேல போயிருச்சி. அப்ப தான் சென்னைல இருக்க குழந்தைகள் ஆஸ்பிட்டல பத்தி கேள்விப்பட்டு போனோம். அங்கேயே அட்மிட் ஆகி ஆப்ரேஷன் பண்ணி இப்ப புள்ள நல்ல இருக்கா மாப்ள. நீயும் உன் பையன சென்னைல இருக்க அந்த ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போ.” என்றார் அவரது நண்பர்.

"ஆஸ்பிட்டல் எல்லாம் போய் பார்த்தாச்சிபா. செலவும் அதிகமாயிருச்சி. இப்ப பரிகாரம் பண்ணி பாக்கலாம். சரியாகும்”

“நீ சொல்றதலாம் சரி. ஆனா அங்க செலவு இல்ல. எல்லாம் இலவசம். நீ அங்க போய் ஒருமுற பையன் கால காட்டி பாரு. குழந்தைகளுக்கான ஆஸ்பிட்டல்டா மாப்ள அது. நீ போ அப்புறமும் சரியாகலனா பரிகாரம் பண்ணு. என் புள்ளய பாரு உனக்கு அப்ப புரியும் அந்த ஆஸ்பிட்டல பத்தி.”

நண்பரின் பேச்சை கேட்டு கடலமுத்துவை சென்னை அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் 2 வாரத்திற்கு பிறகு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றும் அவனை அட்மிட் செய்ய வேண்டும் என்றார்கள்.

ஆபரேஷன் செய்வதற்கு முன் கடலமுத்துவிற்கு மருத்துவமனையில் சில சிகிச்சைகள் அளித்தார்கள். அவன் காலில் கட்டுப்போட்டு படுக்கையிலே இருந்தான். அந்த சமயம் அம்மாவிடம் இங்கே இருக்க முடியாது. போர் அடிக்குது என்று சொல்லி கத்துவான். அம்மா கணக்கெடுக்காமல் இருப்பாள். அப்பொழுதும் அவன் குறும்புதனம் குறையவில்லை. மருந்துகளை கீழே தூக்கி போடுவதும் தண்ணீரை தரையில் ஊத்தி வீடுவது என அவன் சேட்டைகள் மருத்துவமனையிலும் நீண்ட கொண்டே போனது.

ஆப்ரேஷன் செய்து முடிந்ததும் டாக்டர்கள், நரம்பு பிரச்சனையால் தான் அவன் ஒரு பக்கமாக நடந்தான் என்றும் இனி பயப்பட தேவையில்லை எனவும் அவன் பெற்றோரிடம் சொன்னார்கள். 15 நாள் ஆஸ்பிட்டலில் இருக்கவும் அதற்கு பிறகு கட்டாயம் ஆறு மாதம் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் எனவும் சொன்னார்கள்.
முன்பு இருந்த படுக்கைக்கு அருகில் ஜன்னல் இருந்ததால் கடலமுத்த வெளியே வேடிக்கை பார்த்து பொழுதை போக்கினான். ஆபரேஷனுக்கு பிறகு வேறு படுக்கைக்கு மாற்றியது அவனுக்கு கஷ்டமாக இருந்தது. அம்மாவிடம் தன்னை பழைய இடத்தில் போட சொல்லி புலம்பிக் கொண்டே இருந்தான். அவனது அம்மா நர்ஸிடம் சொல்லி பார்த்தாள்.

“பாக்குறீங்க தானே. அந்த பெட்ல வேற புள்ள இருக்கு அம்மா. உங்க பையனுக்கு போர் அடிச்ச இந்த வார்டு கடைசில லைப்ரரி இருக்கு. அங்கிருந்து புக் எடுத்து போய் கொடுங்க. வாசிக்க சொல்லுங்க” என்றார் அந்த நர்ஸ்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: துன்பங்கள் தனித்து வருவதில்லை!
Tamil Short Story Tharuthalai

கடலமுத்துவின் அம்மாவோ அங்கிருந்த லைப்ரரிக்கு போனாள். தனக்கு படிக்க தெரியாது என்பது அங்கு போன பிறகு தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அங்கிருந்த புத்தகங்களை பார்த்து வாயடைத்து போனவள், லைப்ரரியன் மேசையில் யாரோ ஒருவர் படித்து வைத்துவிட்டு போன புத்தகத்தை கையில் எடுத்தாள். கடலமுத்துவின் படுக்கை எண்ணை குறித்து கொண்டு புத்தகத்தை அவள் கையில் கொடுத்தார் லைப்ரரியன்.

‘பிரமிக்க வைக்கும் பீர்பால் கதைகள்’ என்ற தலைப்பில் டி. நமச்சிவாயம் எழுதிய அந்த புத்தகத்தை கடலமுத்துவிடம் அம்மா கொடுத்ததும் அதை வாங்கி அருகிலிருந்த ஸ்டுலில் வைத்தவன் சிறிது நேரத்திற்கு பிறகு அப்புத்தகத்தின் அட்டைப்படத்தில் இருந்த ராஜா, மந்திரிகள், தளபதிகள் ஆகியோர் அணிந்திருந்த வித்தியசமான உடைகளின் படங்களை பார்த்து புத்தகத்தை கையில் எடுத்தான். புத்தகத்தை திறந்து பக்கங்களை புரட்டியவன் பொழுதை போக்க ‘பாவம் கழுதை’ என்ற தலைப்பில் இருந்த கதையை எழுத்து கூட்டி வாசிக்க ஆரம்பித்தான்.

இரவு தூங்காமல் வாசித்து கொண்டே இருந்தான். வாசிக்க முடியாத வார்த்தைகளை அங்கிருந்த நர்ஸை கூப்பிட்டு கேட்டு தெரிந்து கொண்டான். அப்புத்தகத்திலிருந்த 25 சிறுகதைகளில் 16 கதைகளை வாசித்து முடித்தான். ஆஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி போகும் போது அவனுக்கு சொல்லி கொடுத்த நர்ஸ் ‘தெனாலிராமன் கதைகள்’ புத்தகத்தை அவனுக்கு பரிசாக கொடுத்தார். காலப்போக்கில் கடலமுத்து புத்தகங்களுக்கு அடிமை ஆனான். படித்து கொண்டே இருந்தான்.

அடுத்த மாத இதழுக்கு இக்கதையை எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளரிடம் அவரது செக்கியூரிட்டி, “சார் உங்கள பார்க்க ஒரு வயதான அம்மா வந்திருக்காங்க...” என்றார்.

ஒரு நபரின் உதவியுடன் உள்ளே வந்த வயதானவரை பார்த்ததும் ஆதிலட்சுமி டீச்சர் என்று கூறிக் கொண்டே எழுத்தாளர் கே.எம். காலில் விழுந்தார்.

“கடலமுத்து உன்னைய நினைச்ச பெருமையா இருக்கு. பெரிய எழுத்தாளரா ஆகிட்டா. உன்னுடைய ஆட்டோகிராப் வாங்க தான் வந்தேன்...” என்றார் ஹெட் மாஸ்டர் ஆதிலட்சுமி டீச்சர்.

தன்னுடைய வளர்ச்சியின் சந்தோஷத்தை தனது டீச்சர் கண்களில் கண்ட எழுத்தாளர் கே.எம். என்கிற கடலமுத்து, தனது இந்த வளர்ச்சிக்கு காரணமான தான் வாசித்த புத்தகங்களுக்கும் அதன் எழுத்தாளர்களுக்கும் மனமாற நன்றியை தனக்குள் தெரிவித்து கொண்டார். இந்த நிகழ்ச்சியையும் எழுதிக் கொண்டிருந்த மாத இதழ் கதையில் சேர்த்து கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com