நாம் அனைவரும் ஒரே குடையின் கீழேதானே வாழ்கிறோம். அனைவருக்கும் ஒரே சூரியன். ஒரே காற்று. ஒரே பிரபஞ்சம் தானே?! அவரவர் சந்திக்கும் சூழ்நிலைகள் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம். அதனால் மனம் சற்று மாறுபட்டும் இருக்கலாம். ஆனால்…
சமீபத்தில் வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இரு நிகழ்வுகள்.
முதலில் ஒரு கிராமத்து வாழ்க்கை. ஒரு வயதான தம்பதி. மூன்று பெண் மூன்று ஆண் என குழந்தைச் செல்வங்களுக்கு குறை இல்லை. அனைவருக்கும் நிறைவாக திருமணம் செய்துள்ளனர் பெற்றோர். தங்கள் வயதான பெற்றோருக்கு “சுழற்சி முறையில்” உணவு தருவதை பெரும் கடமையாகக் கருதி செயல்பட்டு வந்திருக்கின்றனர் அந்த வாரிசுகள்! (90 வயதான அப்பெரியவருக்கும் நோய்வாய்ப்பட்ட அந்த அம்மாவுக்கும் வெறும் சோறு மட்டும் போதும் என நினைத்து செயல்பட்ட அந்த மனிதர்கள் நமது சம கால மனிதர்கள்தானே!?)
மூன்று வருடங்களுக்கும் மேலாய் படுத்த படுக்கையாகிவிட்ட தனது மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்துள்ளார் அந்தப் பெரியவர். மூன்று மாதங்களுக்கு முன் தனது கண் பார்வையையும் பறி கொடுத்துள்ளார். இருந்தாலும் தனது மனைவியை தன்னால் இயன்றவரை கவனித்து வந்துள்ளார். படுத்த படுக்கையான மனைவிக்கு படுக்கைப் புண் வந்துவிட்டது. பிள்ளைகள் அந்த காயத்தின் வலியை உணரக்கூடிய நிலையில் இல்லை. அவர்களுக்கு நேரமும் இருந்திருக்காது. (அவர்களுக்குத்தான் வேலை பளு அதிகமாயிற்றே. அத்தனை பேரையும் வளர்க்கவும் அவர்களை பராமரிக்கவும் தனது வாழ்நாள் எல்லாம் உழைத்த பெரியவரின் சுமையை விடவா இவர்கள் சுமந்து விட்டார்கள்?! சரி சரி நாமும் 'சுழற்சி முறையில்' நமது மனதையும் ஏதாவது ஒன்று சொல்லி சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.)
சரி விஷயத்துக்கு வந்து விடுவோம். படுக்கை புண் வலியில் ஒரு புறம் மனைவி கதறிக் கொண்டிருக்க மனதளவில் துடித்துக் கொண்டே இருந்த பெரியவர் ஒரு நாள்...
மங்கல இசை முழங்க எந்த கழுத்தில் மங்கல நாணைக் கட்டினாரோ அதே கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார். படிக்கும் பொழுதே இதயம் தொண்டையை அடைத்து மீண்டும் தன் இடம் செல்கிறது அல்லவா?
இந்த பதிவுகள் செய்திகளாகவும் காணொளிகளாகவும் வலைத்தளங்களில் காண நேர்ந்தது. சுற்றிலும் அமர்ந்து அழும் ஒரு கூட்டம். அதில் அவர் மகன்கள் இருக்கலாம். மகள்களும் இருக்கலாம். ஏன் இப்படி கதறி கதறி அழுகிறார்கள்? அவர்கள்தான் சுழற்சி முறையில் சோறு போட்டு பெற்றவர்களை நன்று கவனித்தவர்களாயிற்றே? பிறகு ஏன் புரண்டு புரண்டு அழுகிறார்கள்? சற்றே புரியவில்லை. புரிந்தவர்கள் தெரிந்தவர்கள் எமக்கு கொஞ்சம் விளங்க வையுங்களேன்… அந்தப் பெரியவர் வாசற்படியிலும் அல்லாமல் வெளியிலும் அல்லாமல் நடுவில் கால்கள் நீட்டி அமர்ந்திருக்கிறார். கண்கள் எதையோ வெறித்து நோக்குகின்றன. சலனமற்ற முகம். அந்த முகம்தான் நம் சமுதாயத்திற்கான சவுக்கடி. அந்த கண்கள் ஒன்று போதும் நமக்கான எச்சரிக்கை....
இது வெளிச்சத்திற்கு வந்த நிகழ்வு. இன்னும் ஒளி படாத எத்தனையெத்தனையோ வயதானவர்கள் கிராமத்தில் நகரத்திலும் அல்லல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமீப காலங்களில் (சமகாலத்தில்) ஆதரவில்லாமல், உதவிக்கு ஆள் இல்லாமல் வயதானவர்கள் தற்கொலை செய்யும் மிகப் பெரிய சமூக அவலம் அதிகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாமும் அதை கடந்து கொண்டுதான் இருக்கிறோம். வயதான பெற்றோர்களை ‘சுழற்சி முறையில்’ கவனித்துக் கொள்ளும் பிள்ளைகளுக்கு பிரபஞ்சமும் சுழற்சி முறையில் பதில் சொல்லும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வோம்.
இன்னொரு பதிவு. சென்னை மெரினா கடற்கரை. பின்னிரவு நேரம். ஒரு மகிழுந்து. மகிழ்வுடன் நடுத்தர வயதுள்ள ஒரு ஆணும் பெண்ணும். சாலை போக்குவரத்துக் காவலர்கள் தங்கள் கடமைகளை செய்வதின் ஒரு பகுதியாக ‘அனாவசியமாய் இந்நேரத்தில் இங்கு நிற்க வேண்டாம்’ என அறிவுறுத்த அந்த இருவரும் பேசிய பேச்சுக்கள் மிகுந்த நகைச்சுவையை ஏற்படுத்தியது. எப்படியோ வலைத்தளங்களுக்கு பொரி கிடைத்தது. தாங்கள் எங்கு நிற்கிறோம், என்ன பேசுகிறோம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது கூடத் தெரியாமல் அமைச்சர் முதல் கான்ஸ்டபிள் வரை அனைவரையும் தங்கள் உரையாடலில் நடமாட விட… போதாததற்கு எதிரிலிருப்போர் சிலரை body shaming என்று சொல்வார்களே அப்படி விமர்சிக்க, அத்தனையும் அழகாய் வீடியோ எடுக்கப்படுகிறது. அடுத்த நாள் காவல்துறையின் சிறப்பு அழைப்பார்களாக இருந்திருப்பார்கள் என்பது வேறு விடயம்…
முற்றிலும் மாறுபட்ட இந்த இரு நிகழ்வுகளும் நாம் வாழும் இதே சமுதாயத்தில் சமகாலத்தில் ஒரே குடையின் கீழ்தானே நடக்கிறது?!
இது நம் ஆதித்தமிழன் சமைத்த சமுதாயம் அல்ல. அன்று வாழ்ந்த நம் தமிழன் தனது அற வாழ்வியலை - தன் மொழி சார்ந்த உணர்வுகளை - மண் சார்ந்த பதிவுகளை அந்தந்த காலகட்டத்தில் கிடைத்த ஏதாவது ஒன்றில் பதிவிட்டுத்தான் சென்றுருக்கிறான். மனித குலம், தனது தலைமுறை சிறந்து செழித்து வாழ வேண்டும் என்பதே அவனின் ஒரே குறிக்கோளாக இருந்தது. இன்று?
நமது தலைமுறைக்கு தமிழ் இலக்கண இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதும் அதனுள் ஆழ்ந்து அதன் சுவையும் அறத்தையும் அறிந்து கொள்ளும் வழிவகைகளைச் செய்வதும் நமது தலையாய கடமையாகிறது. ஆழ்ந்து செல்ல இயலவில்லை எனினும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை மட்டுமாவது ஒவ்வொரு மனிதனும் படிக்துணர வேண்டும். மனவளர்ச்சி பெற வேண்டும். அதுவரை நாம் அனைவருமே மன அளவில் வளர்ச்சி பெறாதவர்களே. என்னையும் சேர்த்துத்தான்…