

வாசலில் இருந்த அந்த மதுரை மல்லிகை கொடியில் பூத்த மலர்களின் வாசம் நிறைந்த அந்தச் சிறிய வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தாள் சுடர்விழி.
அவளுக்கு உலகம் என்பது இருட்டும், நிசப்தமும் தான். அவளால் பார்க்க முடியாது, கேட்கவும் முடியாது. ஆனால், அவளது ஒட்டுமொத்த உலகமும் அவளது இடது உள்ளங்கையில் அடங்கியிருந்தது.
என்ன நான் சொல்வது ஆச்சர்யமாக இருக்கா? என்றால் அது தான் உண்மை.
வெளியே போயிருந்த தாய் மரகதம் அவள் அருகே அமர்ந்தாள், சுடர்விழியின் உள்ளங்கையைத் தன் விரல்களால் மென்மையாகத் தடவி கொண்டிருந்தார். அது வெறும் தடவல் அல்ல; அது ஒரு மௌன மொழி என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.
மரகதம் தன் விரல் நுனியால் சுடர்விழியின் உள்ளங்கையில் மெல்ல ஒரு வடிவத்தை வரைந்தார். சுடர்விழியின் முகம் சட்டென மலர்ந்தது.
"அ... ம்... மா..." என்று திக்கித் திக்கி அவள் உச்சரித்தபோது, மரகதத்தின் கண்களில் நீர் ததும்பியது.
அவளது நினைவுகள் பின்னோக்கி சென்றன.