
வழக்கம்போல் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் கீதா கண்ணாடி முன்பு நின்ற போதுதான் நினைவுக்கு வந்தது. அன்று உடன் பணிபுரியும் மூத்தப் பேராசிரியரின் மகளுக்கு வளைகாப்பு. டென்ஷன் தலைக்கேறியது. புடவையை மாற்ற வேண்டும். பரவால்ல இதுவே போதும் சிம்பிளா போவோம் என்று தன்னைத் தானே சமாதானம் செய்தவளாய் கிளம்பினாள். பல நாட்களாக அவள் எந்த விசேஷத்திலும் பெரிதாகக் கலந்து கொள்வதில்லை. அன்று கண்டிப்பாக செல்ல வேண்டும் என எண்ணியிருந்தாள்.
கல்லூரியை அடைந்தவளுக்கு சற்று வியப்பாகவும் கோபமாகவும் இருந்தது. அவளோடு பணிபுரியும் மூவர் அன்று விடுமுறையென வருகைப் பதிவேடு கூறியது. ஏன் லீவ் என்கிட்ட சொல்லவே இல்லையே என மனம் குழம்பத் துவங்கியது. அன்று முழுவதும் வகுப்புகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை…
மணி 2 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் ஏற்கனவே பர்மிஷன் சொல்லியிருந்தாள். ஆட்டோவும் வந்து விடும். அவங்க எல்லாரும் வராங்களானு தெரியலையே சரி கால் பண்ணி கேக்கலாம்னு நினைத்து நம்பரை டயல் செய்யத் தேடினாள். குரூப்பில் அவர்கள் சேர்ந்து வளைகாப்பில் எடுத்த போட்டோக்களைப் பகிர்ந்திருந்தனர். அதைப் பார்த்ததும் ஏனோ அவளுக்கு சற்று அழுகையாக வந்தது. அடக்கிக் கொண்டு நிற்கும்போது ஆட்டோ வந்து விட்டது.
"அண்ணா நேரா வீட்டுக்குப் போங்க..."
"ஏன் மேடம்? ஏதோ ஃபங்ஷன் இருக்குனு சொன்னீங்க? போகலையா..?"
"இல்லண்ணா போல… கொஞ்சம் தலைவலி"
"சரி மேடம்" என்றபடி ஆட்டோக்காரர் அமைதியானார்.
வீடு வந்தது கூட தெரியாமல் உட்கார்ந்திருந்தவளை "மேடம்" என்ற குரல் கலைத்தது.
"ஆ… அண்ணா வீடு வந்துருச்சா… சரின்னா… வரேன்" என்றவாறு இறங்கினாள்.
வீட்டிற்குள் நுழைந்தது முதல் மனம் கனமாக இருந்தது, ஏதோ ஒன்று அழுத்தியது.
ஏன் என்கிட்ட சொல்லாம போனாங்க. நான அவங்க கூடவேதான இருந்தேன். யாருமே என்னத் தேடல, கஷ்டமாக இருந்தது. இனி யார்டயும் மூஞ்சி குடுத்துப் பேசக் கூடாது என்றெல்லாம் முடிவு செய்தாள். முடிந்த மட்டும் தலையணை நனையுமட்டும் அழுது தீர்த்தாள். ஆனால் எதற்காக அழுதாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.
அரைமணி நேரம் கடந்த பின் படுக்கையை விட்டு எழுந்தாள்… இப்போது அவளது மூளை வேலை செய்தது. அவள் வரப்போவதை யாரிடமும் சொல்லவில்லை. அவர்கள் இவள் வருவாளென்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நிதர்சனம் புரிந்தது. இங்கு யாருக்கும் யாருடைய இடமும் நிரந்தரமாகத் தேவைப்படுவதில்லை. நாமே நமக்கானதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வேண்டாதவற்றைக் கடந்து செல்ல கற்றுக் கொள்ள வேண்டும். உள்ளிருந்து ஏதோ பேசியது.
ஒரு கேள்வி அவளைக் குடைந்தது. ஏன் அழுதாள்? எப்போது மனம் லேசானது? எதை உள்ளம் வெளியேற்றியது?
தெளிவானவளாய் கைபேசியை உயிர்ப்பித்தாள், வந்திருந்த புகைப்படங்களுக்கு ஹார்ட் ஸ்மைலிகளை அனுப்பி விட்டாள், மனம் லேசானது போல இருந்தது!