
ராணி... பெயரில்தான் ராணி. ஆனால், வாழ்கையில் பூஜ்யம். அவர் அம்மாவுடன் சென்னை புறநகர் பகுதியில் ஒரு குடிசையில் வாழ்ந்துவந்தார். அம்மாவிற்கு வயதாகிவிட்டதால், ராணிக்கு கல்யாணம் செய்ய முடிவு எடுத்தார். போரூரில் குமார் என்ற ஒரு ஆட்டோ ஓட்டுனருடன் கல்யாணம் நிச்சயம் ஆனது. வரதட்சனை ருபாய் 5,௦௦௦.
கல்யாணம் முடிந்து ஒரு வாரம்வரை எந்தப் பிரச்னையும் இல்லை. குமார் ஒரு குடிகாரன் என்று பின்னால்தான் தெரிந்தது அவன் அம்மா ஒரு மன நோயாளி. ஹிஸ்டரிக். அவர் ராணியை வெறுத்தார். ராணியை வீட்டு வேலை எல்லாம் செய்யச் சொன்னார். ராணிக்கு மனதில் கவலை வந்தது. இட்லி செய்ய மாவு அரைக்கச் சொன்னார். கிரைண்டர் இல்லை. ஆட்டுக்கல்லில் அரைக்கச் சொன்னார். ராணி எனக்கு கையில் வலி உள்ளது. அதனால் மாவை அரைக்க முடியாது என்றார். அவ்வளவுதான் குமாரின் அம்மா கோபத்தின் உச்சத்திற்குச் சென்றார்.
சரி... உன்னால் அரைக்க முடியாவிட்டால் உன் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் இருந்து கிரைண்டர் வங்கி வா என கட்டளை போட்டார். மாலை குமார் வந்ததும் ராணி இந்தப் பிரச்னையைச் சொன்னார். குமார் ராணிக்கு அதரவாகப் பேசவில்லை. உன்னால் அரைக்க முடியவில்லை என்றால் நீ வீட்டுக்குப் போய் கிரைண்டர் வாங்கி வா என்று உறுதியாகச் சொன்னான். அவன் குடித்து இருந்தான்.
தினமும் இதுபோல எதாவது காரணத்திற்காக குமாரின் அம்மாவும் குமாரும் ராணியிடம் சண்டை போட்டார்கள். ராணி செய்வது அறியாமல் திகைத்தார். அதுமட்டும் அல்ல இப்போது ராணியை அடிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். ராணி யோசித்தார். இருவர் பண்ணும் கலாட்டா நாளுக்குநாள் அதிகரித்தது.
தான் அம்மாவிற்குக் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லை. எனவே, தானே முடிவு எடுத்தார். வேலைக்குச் செல்வது... தனி வீட்டில் வாழுவது என. மாநகராட்சி அலுவலரைச் சந்தித்து தனக்கு துப்புரவு தொழிலாளி வேலை கேட்டார். அவரும் வேலை கொடுத்தார்.
தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலை செய்ய வேண்டும். அவர் அம்மா உணவகத்தில் சாப்பிட்டார். தான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு சின்ன ரூம் வாடகைக்கு எடுத்தார். குமாரும் அவர் அம்மாவும் பதட்டம் அடைந்தார்கள். எங்கு தேடியும் ராணி கிடைக்கவில்லை.
இந்தச் சமயத்தில் தான் வேலை பண்ணும் இடத்தில் ஒரு வீட்டிற்குச் சென்று... மதியம் அல்லது மாலை வீட்டு வேலை இருந்தால் செய்வேன் என்றார். அது ஒரு வக்கீல் வீடு. அவர் பெயர் ஈஸ்வரன். அவர், உனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டார். உங்கள் விருப்பம் என்று ராணி சொன்னார். ஈஸ்வரன் ரூபாய் 1௦௦௦ தருவதாகச் சொன்னார். நாளை முதல் வாருங்கள் என்றார்.
வக்கீல் வீட்டில் வேலை செய்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. ஒரு நாள் வக்கீல் ராணியிடம் அவள் பிரச்னையைக் கேட்டு தெரிந்துகொண்டார். அவர் வக்கீலாக இருப்பதால் உடனே குமாரிடம் இருந்து விவாகரத்து வாங்கச் சொன்னார். அதுதான் நல்லது. உங்களுக்கு விவாகரத்து வாங்க நான் உதவி செய்ய முடியும். மேலும் நீங்கள் போலீசில் குமார் மற்றும் அவர் அம்மா செய்த கொடுமைகளைப் புகாராக எழுதித் தாருங்கள் என்றார். ராணி பயந்தார். ஈஸ்வரன் ஏன் விவாகரத்து வேண்டும்? ஏன் அவர்கள் மீது புகார் அளிக்க வேண்டும் என்று விளக்கிச் சொன்னார். ராணிக்கு புரிந்தது. சரி என சம்மதம் சொன்னார்.
குமாருக்கு நோட்டீஸ் அனுப்பட்டது. போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டது.
குடும்பநலக் கோர்ட்டில் வழக்கு வந்தது. ராணி பயம் இல்லாமல் உண்மை அனைத்தும் சொன்னார். இறுதியில் நீதிபதி, ராணிக்கு விவாகரத்து வழங்கினார். குமார், அவர் அம்மாவையும் கடுமையாகக் கண்டித்தார். மேலும், மாதாமாதம் ரூபாய் 3,௦௦௦ ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவு அளித்தார். குமாருக்கு பயங்கரமாகக் கோபம் வந்தது. ராணி வீட்டிற்கு வந்தால் கொலையே செய்துவிடுவார். ஆனால், கோர்ட் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் குமாருக்கு வேறு வழி இல்லை. மாசமாசம் 3,000 ரூபாய் வேறு.
ராணி, ஈஸ்வரனுக்கு மிகவும் நன்றி தெரிவித்தார். அவர் இல்லாவிட்டால் இப்படி இருக்கமுடியாது என்று ராணி புரிந்துகொண்டார். வக்கீல், ராணியை மறுமணம் செய்யச் சொன்னார். அதற்கு ராணி சம்மதம் தெரிவிக்கவில்லை. ராணி தன் அம்மாவை அழைத்துவந்து தனது வீட்டில் வைத்துக்கொண்டார். அவருக்கு ராணியை நினைத்து மிகுந்த வருத்தம். மீண்டும் ஒரு கல்யாணம் செய்து கொள் என்று ராணியின் அம்மா சொன்னார். ஆனால் ராணி சம்மதிக்கவில்லை.
தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை கடுமையாக உழைத்தார். நாம் படிக்காமல் போய்விட்டோமே என்று மனம் சொன்னது. ஆனால், இப்போது கணவன் மற்றும் மாமியார் கொடுமை இல்லை. இதுவே பெரிய விஷயம்.
வக்கீல் ஈஸ்வரன் ராணிக்கு மறுமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். நீதி மன்றத்தில் அலுவலகத்தில் உதவி பண்ணும் கடை நிலை ஊழியராக இருந்தார் ராஜா. ஆம் ராணிக்கு ராஜா என்று தீர்மானித்து ஒரு நாள் ராஜாவையும் ராணியையும் தன் வீட்டிற்கு மாலை 3 மணிக்கு வரச் சொன்னார்.
இருவரும் வந்தார்கள். ஈஸ்வரன் தத்தளித்துப் போனார். எப்படி விஷயத்தைத் துவங்குவது என்று யோசித்தார். பின் முதலில் ராஜாவிடம் ராணி கதையை விளக்கிச் சொன்னார். பின் ராணியிடம் ராஜாவை பற்றி விளக்கமாகச் சொன்னார். மது பழக்கம் இல்லை. மிகவும் சாந்தம் ஆனவர். அம்மா மட்டுமே உள்ளார். அவரும் மிக நல்லவர். அவர் மருமகளை கொடுமை எல்லாம் செய்யமாட்டார் என்று உறுதிபடக் கூறினார். பிறகு 2 பேரிடமும் ஒருவரை ஒருவர் பிடித்து இருக்கிறதா என்று கேட்டார். இருவரும் மெல்ல பிடித்து இருக்கு என்று சொன்னார்கள். ஈஸ்வரனுக்கு சந்தோஷம்.
சரி... நீங்கள் திருமணம் முடிந்ததும் எங்கே தங்குவீர்கள் எனக் கேட்டார். அதற்கு ராணி எனக்கு இந்த இடமே பிடித்து உள்ளது. அவர் அதாவது ராஜாவும் அவரது அம்மாவும் தனது வீட்டிற்கு வரச்சொன்னார். ராஜா சம்மதம் தெரிவித்தார்.
எல்லோரும் சந்தோஷமாக இருக்க ஈஸ்வரன் திருமணம் எப்போ வைத்து கொள்ளலாம் என கேட்டார். உங்கள் இஷ்டம் என்று இருவரும் சொன்னார்கள். ஈஸ்வரனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அடுத்த மாதம் வைத்துக்கொள்ளலாம். முதலில் பதிவுத் திருமணம். பின் வடபழனி கோயிலில் தாலி கட்டும் நிகழ்ச்சி. பின் ஹோட்டல் விருந்து.
ராணி மற்றும் ராஜா வக்கீல் ஈஸ்வரனுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் திண்டாடினார்கள்.
அடுத்த மாதம். முதல் வாரம். பதிவுத் திருமண ஆபிசில் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் பதிவு செய்தார்கள். பின் ஒரு பெரிய வேனில் வடபழனி கோயில் வந்தார்கள். தாலி கட்டும் சடங்கும் முடிந்தது. கல்யாணம் முடிந்த உடனே... ராஜா- ராணி, ஈஸ்வரன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்கள்.
ராஜா, ராணி உண்மையிலே ராஜா-ராணியாக வாழ்ந்தார்கள்.
அதற்கு முக்கியக் காரணம்... வக்கீல்தான்.