
“இன்னைக்கு ராத்திரி மட்டும் தங்கட்டும், நாளைக் காலைல நான் கண்முழிக்கும் போது, அவன் இந்த வீட்டுல இருக்க்கூடாது, ஒதவாக்கரை... ஒதவாக்கரை“ பி.பி. எகிற கத்திய கணவன் தயாளனைப் பார்த்து மிரண்டாள் கனகா.
“டேய், ஒங்க அப்பா ஒன் மேல கோபமா இருக்காரு, கண்ணுல படாதேடா” விழிகளில் கண்ணீர் துளியோடு தன் பையன் வேணுவை, விரட்டினாள்.
”ஈஸிசேரில் சாய்ந்தபடியே பேப்பரை படித்து கொண்டே, எல்லாம் நீ செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்கே, படிப்பும் சரியா ஏறல, ஒரு வேலை செய்யவும் துப்பில்லை, அவனை பெத்தது போன ஜென்மத்து பாவம்” முணகிக் கொண்டேயிருந்தார்.
பையன் மேலிருந்த கோபத்தில் காலை டிபன் சாப்பிடல. “ஏனுங்க, வெறும் வயிற்றோட இருக்காதீங்க, லோ-பி.பி-ல மயக்கம் வந்துட போகுது"-ன்னு அக்கறையாய் சொன்ன கனகாவிற்கு…”அப்படியே மயக்கம் வந்தா… ஒன் பையன் தாங்கியா பிடிக்கப்போறான், விழட்டுமேன்னு அவன்பாட்டுக்கு ஊர்சுத்த போயிடுவான்” அதுக்கும் புலம்பலாய் வார்த்தைகள் வாயிலிருந்து வந்து விழந்தன.
மதியமும் சரியாய் சாப்பிடாமல் ஒப்புக்கு சாப்பிட்டு விட்டு சற்று மதிய நேரம் தூக்கத்தில் ஆழ்ந்தார். இரவும் அப்படியே போயிற்று.
மறுநாள் காலை ”அம்மா...” குரல் கேட்டு எழுந்தார். கொல்லைப்புறத்தில் பால்கறப்பவர் நின்று கொண்டிருந்தார்.
”இன்னாப்பா, இன்னைக்கு சீக்கிரமாவே வந்துட்டே?”
”ஒரு முகூர்த்தத்துக்கு போகணும், ஆதனால பால் கறந்து குடுத்துட்டு போகலாம்-ன்னு சீக்கிரமாய் வந்துட்டேன்னு” தன் வேலையை ஆரம்பித்தான்.
பசுவை மெதுவாக தடவிக்கொடுத்துவிட்டு, பால் காம்பினை பிடித்து பாலினை கறக்கும்போதே…. கன்றுக்குட்டி தாய்ப்பசுவிடம் பால் குடிக்க கட்டியிருந்த கயிற்றை அறுத்துக் கொண்டுவர திமிறிக் கொண்டிருந்தது.
கன்றுக்குட்டியை குடிக்க விட்டால், பால் ஒரு ஆழாக்கு கூட தேறாது என்று பால் கறத்தலில் ஈடுபட்டான் கோவிந்தன்.
பால் கறந்து முடித்து, வேணுவின் அப்பாவிடம் பெரிய சொம்பில் ஊற்றும் போது… "இன்னாப்பா இன்னைக்கு பால் குறைச்சலா இருக்கே" அப்படின்னு கேட்டதற்கு,
“இது நல்ல பசுன்னு நீங்க நெனைச்சா அது தப்பு. அது மூஞ்சிய பாருங்க, இன்னா சந்தோஷம், நானும் எனக்கு தெரிஞ்ச வித்தையக் காட்டி பால் கறக்க முயற்சி செய்தாலும், அது தன் மடியை எக்கிப்பிடித்து, பாலைப் பதுக்கி வைச்சுகிடுது. நான் கன்றுக்குட்டியை அவுத்துவிடறேன், இன்னா நடக்குது பாருங்க” என்றார் பால் கறப்பவர்.
கன்றுக்குட்டி துள்ளிகுதித்து பசுவின் மடியில் வாய் வைக்க… பால்... கரகரவென பெருகியது அதைப் பார்த்து வேணுவின் அப்பா வியக்க… பால்காரர் ”அது ஒரு உயிருக்கு தாயில்லையா? அது அப்படித்தான் செய்யும், செய்யணும்” அதுதான் இயற்கை என தத்துவமாக உதிர்த்தார்.
பாலை எடுத்துக் கொண்டு உள்ளே போனால்... தெரு வாசலின் பக்கத்தில் உள்ள சன்னல் வழியாக வேணுவிற்கு நாலைந்து இட்லிகள் வைத்து, சாம்பாரும் ஊற்றி ”சீக்கிரமா சாப்பிடுடா, சாப்பிடுடா” கண்களில் நீர்த்துளிர்த்தவாறே மகனுடன் மண்றாடிக் கொண்டிருந்தாள் கனகா.
கண்டும்காணாமல் மறுபடியும் புழக்கடைப் பக்கமே போய்… ”நீதான் கள்ளப்பசுன்னு பார்த்தேன், கனகமும் அப்படித்தான் இருக்கிறாள்” என்று வாஞ்சையாய் பசுவை தடவிக் கொடுத்தார் தயாளன்.