

அந்த ஓட்டு வீட்டு வாசலில் விசாலத்தின் கார் அன்னம் போல் மிதந்து வந்துநின்றது. ஒண்டுக் குடித்தனங்கள் நிறைந்த மூன்று கட்டு வீட்டில் கடைகோடிப் போர்ஷனில், குத்து விளக்கை ஏற்றிய நெருப்புக் குச்சி விரல் நுனியைப் பதம்பார்க்கும் வரை, ரங்கநாயகி திகைத்து நின்றாள்.
விசாலாட்சியக்கா ஏன் இன்றைக்குப் பார்த்து வந்து நிற்கிறாள்? உடைந்த நாற்காலியில் மாலை சார்த்தி வைக்கப்பட்ட பிரபுவின் படம்… எதிரே தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, ஒரே ஒரு துண்டு கதம்பம் வைக்கப்பட்டிருக்கும் பித்தளைத் தட்டு. அறையின் வாசலில் வெற்று நெற்றியுடன் அஞ்சலி… நல்லகாலம் பழைய சம்பிராதயத்தைக் காப்பாற்றுகிறோம் என்று மழித்த தலையும் நார்மடிக் கோலமுமாக அவளை நிறுத்தி வைக்கவில்லை.
இன்று பிரபுவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி…
இரண்டு முற்றங்களைத் தாண்டி, பாசி வழுக்காமல், பந்தால் அடிபடாமல் (வீட்டுக்குள் கிரிக்கெட்), மழலைப் பட்டாளங்களின் மீது மோதி விடாமல் வேகமாக கடைசி போர்ஷனுக்குள் வந்து நிற்கிறாள் விசாலம். முழுக்க முழுக்க பூவாலும் புன்சிரிப்பாலும் செய்து வைத்த முகம். ஜரிகைப் புடவை, வைரத்தோடு, கல் அட்டியல், கனத்த வளையல்கள்… தாழம்பூக் கதம்பம் என கர்ப்பக் கிரகத்தை விட்டு காற்றாட உலா வந்த அம்பாள் மாதிரி ஒரு கம்பீரமாட்சி!
“வா அக்கா… திடுதிப்புனு வந்து நிக்கறியா, அதான் திகைச்சாப்பிலே ஆய்டுத்து. இன்னிக்கு பிரபுவுக்கு திதி… பிள்ளைக்கு பிண்டம் கொடுக்கறதுக்காக – குளத்தங்கரைக்குப் போயிருக்கார் பெத்தவர்! நீ என்ன வேலையா வெள்ளெ கிளம்பீருக்கியோ… நான் திதி… பிண்டம்னு அபசகுனமா பேசிண்டிருக்கேன். இன்னிக்கு பாத்து வந்திருக்கியே… பிரபுக்கு திதின்னு தெரியாதில்லையா…?”
“தெரிஞ்சுதாண்டி வந்திருக்கேன்… இந்த நாளை எப்படி மறப்பேன் சொல்லு… அவன் எனக்கும் தானடி பிள்ளை?”
“நியாயந்தான் அக்கா! என் வயத்துல பொறந்தான்னு தான் பேரு வளர்ந்ததெல்லாம் உன் பணத்துல தான்.. பாசமழையில தான்! எப்ப வந்தாலும் வெறுங்கையோட வரவே மாட்டியே மகராஜி… உம் பிள்ளைக்கு டிரஸ் வாங்கறச்சே எல்லாம் இவனுக்கும் அதே கலர்… அதே வெலையில் டிரஸ் வாங்கிண்டு வருவே… அப்புறம் தனியாபொட்டி நிறைய ரகுவோட டிராயர்… ஷர்ட்… ஸ்வெட்டர்… பனியன்… விளையாட்டுச் சாமான்... ஸ்கூல்புக்ஸ்… டிபன் பாக்ஸ்... பைலட் பேனா… அம்மாடி… ஒண்ணா ரெண்டா! ஒன் பிள்ளைக்கு சின்னதா போன டிரஸ் எல்லாத்தையும் அள்ளிண்டு வந்துன்னாகொட்டுவே…”
“என்னடி பெரிஸ்ஸா வாங்கிக் கொடுத்துட்டேன், நீ இப்படி பாராட்டுப் பத்திரம் வாசிக்கறதுக்கு..? ரகு இவனுக்கு ரெண்டு வயசு பெரியவன்… அவனுக்கு சின்னதா போன டிராயர்.. டீ ஷர்ட் எல்லாத்தையும் யாருக்கோ தூக்கிக் கொடுக்கறதை.. அவன் தம்பிக்கு கொண்ட கொடுத்தேன். ரகு படிச்சு மேல் கிளாசுக்கு போகப் போக அந்த புக்ஸ் நோட்ஸ் அவன் தம்பிக்கு ஆச்சு… ரகு கார் வாங்கினதுக்கு அப்புறம் பைக்கை விக்கவேண்டாம்னு பிரபுவுக்கு கொடுத்தேன். அதுவே அவனுக்கு எமனா ஆகும்னு தெரிஞ்சிருந்தா கொடுத்தே இருக்க மாட்டேடிண்டி.. நான் மகாபாவி…”
விசாலம் கண் கலங்க, ரங்கநாயகி ஆறுதலாக அவள் கைகளைப் பற்றிக் கொள்ள அஞ்சலியிடமிருந்து விம்மல் வெடித்துக் கிளம்புகிறது.
“விதி! எமன் லாரி ரூபத்தில் எதிர வந்ததுக்கு நீ என்னக்கா பண்ணுவே… எவ்வளவோ நல்லது செஞ்ச மனசு… அவன் இருந்திருந்தா ஆயுசுக்கும் நல்லதே செஞ்சிண்டிருக்கற மனசு… உன் மேல ஒரு குத்தமும் இல்லேக்கா… பாவம் பண்ணினவ நாந்தான்! என் பிள்ளைக்கு ஏதோ ரெண்டு வேளை சாதம் போடற அளவுக்குத் தான் அவர் வருமானம்… பிரபு ஆசைப்பட்டபடி டிரஸ்போட்டு அழகு பாக்கவோ.. கிரிக்கட் பேட், செஸ் போர்டுன்னு வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்தவோ, சைக்கிள், ஸ்கூட்டர்னு வசதிகளைத் தேடித் தரவோ எங்களுக்கு சக்தி இல்லே… நீ தான் பாத்துப்பாத்து அவனுக்காகக் கொண்டு வந்து சந்தோஷப்படுத்தினே.. அவனா ஆசைப்பட்டுத் தேடிண்டது – அஞ்சலி ஒருத்தியைத்தான்! அனுபவிக்க கொடுப்பினை இல்லாம பண்ணீட்டானே பாழும் பகவான்! இவளை இந்தக் கோலத்துல நிறுத்தீட்டு எம்பிள்ளை பரலோகம் போய்ச் சேர்ந்துட்டான். காதலிச்சு ஒத்தக்கால்ல நின்னு கல்யாணம் பண்ணின்டுட்டாளே பொண்ணு’ங்கற ஆத்திரம்… ஆத்தாமை… ஏதோ ஒரு காரணம்… அஞ்சலியோட அப்பா, அம்மா நடையேத்தறதில்லே… வேற என்ன காரணம்?
தினந்தினம் நான் ரத்தக் கண்ணீர் வடிக்கணுமே அது தான்! ஏதோ எம் பிள்ளை ஆபீசுக்குப் போயிருக்கான், ஆபீஸ் வேலையா வெளியூர் போயிருக்கான்.. ‘ஆறு மாசம் பாம்பேல ட்ரெய்னிங் போயிருக்கான்’னு நெனச்சுண்டு நான் மனசைத் தேத்திக்கலாம்னு பாத்தா..அது பொறுக்குமா? ‘உம்பிள்ளை உயிரோடவே இல்லேடி… ஒரு நாளும் திரும்பி வரப்போறதில்லை’ன்னு சதா எனக்கு சொல்லிக் காட்டறதுக்காகவே பகவான் இவளை இந்தாத்தில விட்டு வச்சிருக்கான் – பட்ட மரமா…”
ரங்கநாயகி குமுறி அழுத போது அஞ்சலி தான் அவளை தோளில் சாத்தி ஆறுதல் படுத்தினாள். அக்கா என்ற உரிமையில் ரங்கநாயகியை அதட்டினாள் – விசாலம்.
“ரங்கா… அழுகையை நிறுத்து… நீ இனிமே அவளைப் பாக்கவும் வாண்டாம் பதறவும் வாண்டாம்… அஞ்சலியோட எதிர்காலம் என் பொறுப்பு…”
அஞ்சலிக்கு திகைப்பு… ரங்கநாயகிக்கு பதை பதைப்பு…
“ என்னக்கா சொல்றே!”
“ரகு யு.எஸ்.ப்ராஜெக்ட் முடியற வரைக்கும் கல்யாணப்பேச்சையே எடுக்காதேன்னுட்டான்… இப்போ ப்ராஜெக்டையும் முடிச்சு ப்ரமோஷன், நல்ல பொசிஷன்… கார், சொந்த ஃப்ளாட்னு செட்டிலா இருக்கான் அடுத்தாப்பில கல்யாணந்தானே…
இப்போ வேறே எங்கியோ போய் பொண்ணெத் தேட வேண்டிய அவசியம் இல்லே…! ரங்கா…, இத்தனை வருஷமா உம் பிள்ளைக்கு கொடுத்துண்டே இருந்தேன்னு சொன்னியே… இப்ப மொத்தமா இந்தப் பொக்கிஷத்தை எம் பிள்ளைக்காக எடுத்துண்டு போய்டப் போறேன். ஒண்ணு கவனிச்சியா ரங்கா…? அஞ்சலி என் மாட்டுப்பொண்ணா வரணுங்கறதுக்காகவே நல்ல காலம்.. ரகுவை மூத்தவனாகவும், பிரபுவை தம்பியாகவும் படைச்சிருக்கான் பகவான்.”
கைப்பையைத் திறந்து மல்லிகைப் பூவை எடுத்து அஞ்சலியின் கூந்தலில் சூட்டி வாஞ்சையுடன் அவளை அணைத்துக் கொண்டாள் விசாலம். அஞ்சலியின் நெற்றியில் மங்கலக் குங்குமம் இட்டு விட்டாள்!
“இப்பக் கூட நீ வெறுங்கையோட வரலே அக்கா.. ‘இது தான் என் தீர்மானம்.. இதை யாரும் மீறக் கூடாது’ன்னு சொல்றாப்பிலே அஞ்சலிக்கு மல்லிகைப் பூவும் மறுவாழ்வும் கொண்டு வந்துட்டே… விசாலம்னா விசாலந்தான்! பேரு, மனசு ரெண்டுமே” என்று தழதழத்து கண்ணீர் மல்க கையெடுத்து வணங்குகிறாள்.
ரங்கநாயகி வீட்டு மருமகளாக அஞ்சலி இழந்த குங்குமம், விசாலம் வீட்டு மருமகளை வரவேற்க குங்குமச்சிமிழில் குடியேறி வந்திருக்கிறது!