
"பிருந்தாவுக்கு ஃபோன் பண்ணீங்களா?"
"அடிச்சிக்கிட்டே இருக்கு. எடுக்க மாட்டேங்கிறா!"
"திரும்ப முயற்சி பண்ணுங்க. இன்னிக்கு சாயங்காலம் அவ வீட்டுக்குப் போகணுமே பொங்கலுக்கு சீர் கொடுக்க. இன்னும் ஒரு வாரம்தானே இருக்கு பொங்கலுக்கு?" என்றாள் சுமதி. இவர்கள் அண்ணா நகரில் இருக்கிறார்கள். பிருந்தா வீடு அடையாறில் இருந்தது.
"பிருந்தா! எப்படி இருக்கே?" பிருந்தா ஃபோன் எடுத்துட்டா போலிருக்கு. பலராமன் பேசிக் கொண்டிருந்தான்.
அவ்வப்போது ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் இப்போதெல்லாம் சென்னையில் எப்போது மழை பெய்யும் என்றே தெரிவதில்லை. அன்றும் லேசாக மழை பெய்து கொண்டிருந்ததனால் சுமதி வராந்தா கொடியில் துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்தாள்.
பலராமன் கோபமாக வராந்தாவுக்கு வந்தான்.
"போலாமா இன்னிக்கு?" என்றாள் சுமதி.
"உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். உங்கண்ணன் பொங்கலுக்கு சீர் கொண்டு வந்து கொடுத்தா சந்தோஷமா வாங்கிக்க... என்னைப் போய் என் தங்கைக்கு கொடுன்னு கட்டாயப்படுத்தாதேன்னு!" பலராமன் கோபமாக இருப்பது புரிந்து சுமதி பேசாமலிருந்தாள்.
"அவ பொண்ணு கனடாவிலிருந்து வந்திருக்காளாம். அதனால அவ பிஸியா இருக்காளாம். இன்னிக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டா."
"அட! மாளவிகா வந்திருக்காளா? அவளைப் பார்த்தே பல வருஷங்களாச்சே! இப்ப போனா அவளையும் பார்க்கலாமே?" என்றாள் சுமதி உற்சாகமாக.
"மரமண்டை! அவதான் என் பொண்ணு இருக்கறபோது வராதேன்னு சொல்றாளே? அது புரியாம மாளவிகாவைப் போய் பார்க்கணுமாம்! போய் ஏதாவது உருப்படியா வேலை இருந்தா பாரு!" என்று கோபத்தில் உறுமினான் பலராமன்.
இன்று நேற்றல்ல. சுமதி கல்யாணமாகி வந்த நாளிலிருந்தே அவள்தான் பலராமனை வற்புறுத்தி பொங்கலுக்கு சீர் கொடுக்க அழைத்துப்போவாள்.
"நீ குடுக்கற 200 ரூபாய்க்கும் வெத்திலை பாக்கு பழத்துக்கும்தான் அவ காத்துக்கிட்டிருக்கான்னு நெனச்சிக்கிட்டிருக்கியா?" என்பான் நக்கலாக.
"இந்த சீர் கொடுக்கப் போவதெல்லாம் பணம் காசுக்காக இல்லீங்க. அண்ணன் தங்கையெல்லாம் ஒருவரையொருவர் வருஷத்துக்கு ஒரு தடவையாவது பார்க்கணும், பேசணும்னு தாங்க இந்த பண்டிகையெல்லாமே! இப்படி போக வர இருந்தாதானே உறவு விட்டுப் போகாம இருக்கும்?" என்பாள் சுமதி.
"வேணும்னா நீயே போ!" என்பான் கோபமாக. அவனுக்கு வீட்டை விட்டுக் கிளம்பி வெளியே எங்கும் போகப் பிடிக்காது. தங்கை வீட்டுக்கென்றே இல்லை. உறவினர் வீட்டு விசேஷங்களுக்கெல்லாம் அவனை கடப்பாரையை வச்சு நெம்பிதான் கௌப்பி கூட்டிக்கொண்டு போக வேண்டும். அங்கேயும் விசேஷம் முடிந்ததும் உடனே சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பி விட வேண்டும்.
என்றோ உறவுகளை சந்திக்கிறோம் அவங்களுடன் சிறிது நேரம் பேசவேண்டும் என்று சுமதிக்கு கொள்ளை ஆசை இருக்கும். ஆனால் பலராமனுக்கு பிடிக்காது என்பதால் உடனே கௌம்பி விட வேண்டும். உறவினர் வீட்டு விசேஷம் தான் என்பதில்லை, தியேட்டர்ல போய் ஒரு சினிமா பார்க்கலாம் என்றாலும் அவனுக்கு அங்கே வந்து உட்கார பொறுமை இருக்காது. ஒரு தடவை பாதி சினிமாவில் அவளை, 'கௌம்பி விடலாம்' என்று கூப்பிட்டான். அவள் வராததால் அவளை விட்டு விட்டு அவன் வீட்டுக்குக் கௌம்பி விட்டான். நல்ல வேளை. அவள் கையில் பர்ஸ் இருந்தது. அதில் இருந்த காசை வைத்து பஸ்ஸை பிடித்து அயனாவரத்திலிருந்த தியேட்டரிலிருந்து அண்ணாநகர் வீட்டுக்கு வந்து விட்டாள்.
பிருந்தாவும் அவனுக்கு சளைத்தவளில்லை. "நீ ஃபோன் பண்ணிட்டு வா! எனக்கு என்ன வேலை இருக்கும்னு சொல்ல முடியாது!" என்று கண்டிஷனாக பேசுவாள். சிலசமயம் "இன்னிக்கு வரலாமா?" என்று கேட்டால் "வேண்டாம். நாளைக்கு வா!" என்பாள். எல்லாம் சேர்ந்து பலராமனுக்கு கோபம் தலைக்கேறி விடும்.
சுமதி வீட்டில் சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் போக வர இருப்பார்கள். அதிலும் முக்கியமாக பொங்கலுக்கு முன்னால் அவள் அண்ணன் தன் தங்கைகள் இருவர் வீட்டுக்கும் கண்டிப்பாக நேரில் வந்து கரும்பிலிருந்து இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து முதற்கொண்டு வாங்கிக் கொண்டு வந்து சீர் கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்து விட்டு போவான். அதனால் சுமதிக்கு பலராமன் இப்படி தங்கை என்கிற பாசம் இல்லாமல் இருக்கிறானே என்று மனது அடித்துக் கொள்ளும்.
'இந்த வருடம் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியலையே!' என்று மனதில் எண்ணம் ஓட சுமதி மௌனமாக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பொங்கலும் வந்துவிட்டது. காலையிலிருந்து மூச்சு முட்டும் வேலைகள். வாசலில் கோலம் போட்டு முடித்து, நல்ல நேரம் பார்த்து பொங்கல் பானை ஏற்றினாள். மாடியில் போய் வழிபாடு செய்ய இடத்தை சுத்தம் செய்து சூரிய, சந்திரர்களை கோலத்தில் வரைந்து, சுற்றிலும் செம்மண் இட்டு அழகு படுத்தினாள்.
காலை பத்து மணி வாக்கில் சுமதி சமையலில் மும்முரமாக இருந்தபோது, பிருந்தாவிடமிருந்து ஃபோன். பலராமன் எடுப்பதாக இல்லை. சுமதி சட்டென்று எடுத்து, ஒன்றும் பேசாமல், ஸ்பீக்கரில் போட்டாள் பலராமன் கேட்கட்டும் என்று.
"பலராமா! நீ பொங்கலுக்கு வராம எனக்குப் பண்டிகை கொண்டாடவே பிடிக்கலைடா! நீ எப்போ வரப்போற?" பிருந்தா அழுது விடுவாள் போல இருந்தது. "பேசாம நா வேணா அண்ணாநகர் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிக்கட்டுமா?" என்றாள்.
பாய்ந்து வந்து ஃபோனை எடுத்த பலராமன், "வேண்டாம்! வேண்டாம்! பண்டிகையும் அதுவுமா உனக்கு எவ்வளவு வேலையிருக்கும்? நீ ஏன் சிரமப்படறே? நானே நாளைக்கு வரேன்." என்றான் இதமான குரலில்.
"நீ என்னிக்கு வர்றியோ அன்னிக்கு தாண்டா எனக்கு பொங்கல்!" என்று ஃபோனை வைத்தாள் பிருந்தா.
"எப்படி பேசறா பாரு! பாவம்! அவளுக்கும் வேற யாரு இருக்கா? அண்ணான்னு நா ஒருத்தன்தானே இருக்கேன்? நாம நாளைக்கு நிச்சயமா போயிடலாம்!" என்றான் பலராமன். ரெண்டு நாளைக்கு முன்னால் கோபமாக கர்ஜித்ததெல்லாம் அவனுக்கு சுத்தமாக நினைவேயில்லை.
'சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் போக வர இருந்தா தானே உறவுகள் சரியா இருக்கும்? அதற்கு தானே பெரியவர்கள் பொங்கல் சீர் என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள்? அதைத்தானே நான் இருவது வருஷமா சொல்லிக்கிட்டிருக்கேன்?' என்ற சுமதி மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டே தலையை ஆட்டினாள்.