
- அகிலா சிவராமன்
ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் கூடிய மழை ஜோராக பெய்தது. காற்று மிக வேகமாக வீசியது. புயல் ஓய்ந்து முடிந்தது. மெதுவாக சூரியன் தன் தலையைக் காண்பிக்க ஆரம்பித்தது. மேகமும் வெளிவரத் தொடங்கியது. சாலைகளில் ஜனங்களும் செல்லத் தொடங்கினார்கள். ஓய்ந்து முடிந்த புயலுக்குப்பிறகு மீண்டும் எல்லாம் செயல்பட ஆரம்பித்தது. அமைதியான சூழல்.
கலா தன் வீட்டு ஜன்னலில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய வாழ்க்கைப் பக்கத்தைப் புரட்ட ஆரம்பித்தாள். ஆம்! அவள் வாழ்க்கையிலும் இரண்டு, மூன்று தடவை புயல் வந்து புரட்டி போட்டு இப்போதுதான் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருக்கிறாள்.
கலாவும் ராஜேஷும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள், இருவரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். இருவரும் மதியவேளையில்கூட ஒன்றாக உட்கார்ந்துதான் சாப்பிடுவார்கள். ராஜேஷின் வீடு கலா வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருக்கிறது.
இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து சுற்றாத நாளில்லை, சுற்றாத இடமில்லை. கலா, ராஜேஷ் வீட்டிற்கும், ராஜேஷ் கலா வீட்டிற்கம் அடிக்கடி சென்று வருவார்கள். அவர்களுடைய பெற்றோர்களும் இருவரையும் பாசமாக வைத்திருந்தார்கள். ஆனால் இவை எல்லாம் முழுவதுமாக நீடிக்கவில்லை. கலா எட்டாம் வகுப்பில் இருக்கும்போது பூப்பெய்து விட்டாள். அதற்கு பிறகு ராஜேஷின் பெற்றோர்கள் அவனை கலாவிடம் பேசவோ, பார்க்கவோ கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்கள். அவர்களுக்குப் பயம் எங்கேயாவது இந்த நட்பு காதலாக மாறிவிடுமோ என்று. ஆனால், இருவரும் காதலித்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
ராஜேஷின் குடும்பம் மிகவும் பணக்காரக் குடும்பம். இரண்டு மூன்று வீடுகள், சொந்த வயல்வெளி, மூன்று கடைகள் என ஏராளமான சொத்துகள் இருந்தன. ராஜேஷ் அவர்களுக்கு ஒரே மகன். முழு சொத்துக்கும் அவன்தான் அதிபதி.
கலாவின் குடும்பமோ நடுத்தர வர்க்கம். கலாவின் தந்தை ஒரு தனியார் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். கலாவுக்கு ஒரு மூத்த சகோதரி இருக்கிறாள். கலாவுடன் ஒட்டிப்பிறந்த ஒரு சகோதரனும் இருக்கிறான். இவர்களுடைய இந்தச் சூழ்நிலையை மனதில் வைத்துகொண்டு ராஜேஷின் பெற்றோர்கள் அவனை இனிமேல் அவளுடன் எந்தச் சம்பந்ததும் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனாலும் ராஜேஷ் மறைமுகமாக சில சமயங்களில் கலாவைப் பார்த்து பேசுவான். இப்படியே சமயம் சென்றது. கலா தன்னுடைய பன்னிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.
பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு அவளால் ராஜேஷைப் பார்க்க இயலவில்லை. அவன் வீட்டிற்குச் சென்றாலும் அவளிடம் அவர்கள் முகம் கொடுத்துப் பேசவில்லை. சிறிது நாட்களுக்குப் பிறகு அவளுடைய இன்னொரு தோழனின் மூலமாக தெரியவந்தது ராஜேஷ் மேற்படிப்பு படிக்க வெளிநாடு சென்றுவிட்டான் என்று.
இங்கு கலாவின் தந்தை ஓய்வு பெற்றுவிட்டார். அவர் தன்னிடம் இருக்கும் ஒரு நிலத்தை விற்று பெரிய மகளுக்குத் திருமணத்தை நடத்திவைத்தார். பிறகு வீட்டை அடமானம் வைத்து மகனை பட்டபடிப்பு படிக்க அனுப்பி வைத்தார்.
அவரும் வீட்டில் உட்காரமல் ஏதோ வேலை செய்துவந்தார். அவரின் சம்பளம் மற்றும் கலாவின் சம்பளத்தை வைத்து குடும்பத்தை எப்படியோ ஒட்டினார்கள். இடையில் அவ்வப்போது கடன் வாங்கி, மகன் செலவுக்காக அனுப்பினார்.
இப்போது முதல் புயல் அடிக்க ஆரம்பித்தது. கலாவின் அக்காவினுடைய கணவர் கார் விபத்தில் திடீரென காலமாகிவிட்டார். திருமணமாகி ஒரு வருடம்கூட ஆகவில்லை. விதி. என்ன செய்வது? கலாவின் தந்தை, அக்காவையும் தன்னோடு கூட்டிக்கொண்டு வந்துவிட்டார். அவளும் வேலைக்குப்போக அரம்பித்தாள். இப்படியே நான்கு வருடங்கள் போய்விட்டன. மகனுக்கு படிப்பு முடிந்து, அவனுக்குத் துபாயில் வேலையும் கிடைத்தது. அதற்கும் கலாவின் தந்தை மறுபடியும் கடன் வாங்கி, அவன் செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்தார். அவன் துபாய் சென்று தன் வீட்டிற்கு ஒரு தடவைகூட தொலைபேசியின் மூலமோ அல்லது கடிதத்தின் மூலமாகவோ தொடர்பு கொள்ளவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடம் தன்னுடைய சம்பளத்தைக்கூட அனுப்பவில்லை.
இப்போது மறுபடியும் புயல். அவனுக்குச் செலவு செய்ய வீட்டை அடமானம் வைத்தார். நிறைய கடனை வாங்கினார். எல்லாவற்றையும் அடைக்கப் பாடுபட்டார்கள். இந்த மனவருத்தத்தினால் கலாவின் தந்தை திடீரென மாரடைப்பால் காலமானார். எப்படியோ இவர்கள் மகனின் விலாசத்தைக் கண்டுபிடித்து செய்தி அனுப்பினார்கள். ஆனால், அவன் வரவே இல்லை. கலாவும் அவள் அக்காவும் சேர்ந்து உழைத்து, ஒருவழியாக மூன்று வருடத்திற்குப் பிறகு கடனை எல்லாம் அடைத்தார்கள். வீட்டையும் மீட்டார்கள். இதுவரை எந்தத் தொடர்பும் இல்லாத கலாவின் சகோதரன் எப்படியோ விஷயத்தைத் தெரிந்துகொண்டு திடீரென ஒருநாள் வீட்டிற்கு வந்தான் மனைவியுடன்.
அவனைப் பார்த்த பிறகு அவன் தாய் கதறினாள். "ஏண்டா எங்களையெல்லாம் மறந்துவிட்டாயா? உன் அப்பா காலமான செய்தி தெரிந்தும்கூட நீ ஏன் வரவில்லை?" என்று கூச்சலிட்டாள். அவன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. நேராக உள்ளே சென்று அலமாரியைத் திறந்து, வீட்டுப் பத்திரத்தை எடுத்தான். பிறகு அவன் அம்மா, அக்கா மற்றும் கலா மூவரையும் அதில் கையெழுத்து போடச் சொன்னான். நேராக சென்று தன் பேரில் மாற்றிக்கொண்டு வந்தான். பிறகு இவர்கள் மூவரையும் "இது என்னுடைய வீடு. உங்களுக்கு இங்கு இருக்க அதிகாரம் இல்லை" என துரத்திவிட்டான். அவனுடைய மனைவியும் அவனுக்கு உடன்பாடாக அவர்களுடைய சாமான்களை எல்லாம் வெளியே எடுத்துவைத்தாள்.
கலாவின் தந்தையின் நண்பர் ஒருவர் இவர்களுக்கு உதவி செய்து ஒரு வீட்டில் வாடகைக்கு வைத்து, தேவையான பண உதவியும் செய்தார். இவர்கள் மூவருக்கும் இப்போது அடித்த புயலை மறக்க ஆறு மாதமாகிவிட்டது.
இப்போது அடுத்த புயல் உருவாக ஆரம்பித்தது. ஆம், ராஜேஷ் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறான் என்றும் அவனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது என்றும் செய்தி வந்தது. அதைக் கேட்ட கலாவுக்கு நெஞ்சடைத்தது. கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ராஜேஷ் தன் மனைவியோடு வந்தான். தன் மனைவியை அறிமுகம் செய்துவைத்தான். அவள் வெளிநாட்டைச் சேர்ந்தவள். அவளுக்குத் தமிழ் தெரியாது. கலா தனக்குத் தெரிந்த ஓரிரு ஆங்கில வார்த்தையில் பேசினாள். பிறகு அவர்கள் போய்விட்டார்கள்.
கலாவிற்கு இன்னும் துக்கம் தொண்டையை அடைத்தது. கதவைச் சாற்றிக்கொண்டு படுக்கை அறைக்குச் சென்று கவிழ்ந்து படுத்துக்கொண்டு குலுங்க குலுங்க அழுதாள். அவளுக்கு ராஜேஷுக்குத் திருமணமாகிவிட்டது என்ற வருத்தம்கூட இல்லை! அவன் வாயைத் திறந்து 'கலா நீ எப்படி இருக்கிறாய்?' என்று ஒரு வார்த்தைக்கூடக் கேட்கவில்லை. அதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அரைமணி நேரமாக அழுதுகொண்டிருந்தாள். வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கதவைத் திறந்தாள்.
வெளியில் ராஜேஷ் நின்றுகொண்டிருந்தான். "வரலாமா" என்று கேட்டான். கலா தலையை மட்டும் ஆட்டினாள். அவன் கலாவிடம் சிறிது பேச வேண்டும் என்றான். அதற்கும் கலா பதில் சொல்லவில்லை. பிறகு அவன் சொன்னான், 'நான் சத்தியமாக உனக்கு இதுவரை துரோகம் செய்யவில்லை' என்று.
கலா வாய் பேசாமலே ஜாடையில் அவனைப் பார்த்தாள். அவன் சொன்னான்... "பிறகு ஏன் கல்யாணம் செய்துகொண்டாய்? என்றுதானே கேட்கிறாய். ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக அது நடந்தது. என் மனைவி என்னோட மேனேஜரின் மகள். என் மேனேஜரும் அவருடைய மனைவியும் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார்கள். மேனேஜர் மனைவி உடனே இறந்துவிட்டாள். மேனேஜர் சீரியஸாக இருந்தார். ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை செய்தேன். ஆனாலும் பலனில்லாமல் இறந்துவிட்டார். இறக்கும் தருவாயில் தன் மகளைப் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு இறந்துவிட்டார். ஆகவே, நான் அவளைத் திருமணம் செய்துகொண்டேன். அவளுக்கு நம் விஷயம் முழுவதும் தெரியும். அவள் இப்போதுகூட நீ சம்மதித்தால் உன்னைத் திருமணம் செய்துகொள்ள கூறினாள். நீ ஒரு வார்த்தை சரி என்று சொல். இப்போதே உன்னைக் கட்டிக்கொள்கிறேன்."
இத்தனை நேரம் மெளனமாக இருந்த கலா வாயைத் திறந்தாள். "ராஜேஷ் எனக்கு இதுபோதும். நீ அவளைக் கண் கலங்காமல் பார்த்துக்கொள்." என்றாள். அவன் கலாவிடம் சொன்னான், "கலா நான் உனக்காக சென்னையில் ஒரு வீடு கட்டி இருக்கிறேன். நீ எனக்காக இனி அந்த வீட்டில்தான் இருக்க வேண்டும்" என்றான். ஒருவழியாக பேசி அவளையும் அவளது குடும்பத்தையும் சம்மதிக்க வைத்தான். மறுநாள் ராஜேஷ் மற்றும் அவன் மனைவியும் கலா குடும்பத்தோடு சென்னைக்குப் போய் சேர்ந்தார்கள்.
அற்புதமான வீடு. அந்த இல்லத்திற்கு ‘கலாவதி இல்லம்’ என்ற பெயர் வைத்து இருந்தான். தோட்டத்திலே விதவிதமான பூக்கள் பூத்துக் குலுங்கின. சுந்தரவனமாக இருந்தது. கலாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. புல்லரித்து போய்விட்டாள்.
ராஜேஷும் அவள் மனைவி மற்றும் குழந்தையுடன் வெளிநாடு சென்றுவிட்டார்கள். அங்கு சென்று தினமும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் ராஜேஷ். அவன் எவ்வளவோ வற்புறுத்தியும் வேறு ஒருவனை திருமணம் செய்துகொள்ள கலா சம்மதிக்கவில்லை. கலா சொன்னாள், "என்னைப் பொறுத்தவரை என் மனதளவில் நாம் இருவரும் தம்பதியர். இந்த நினைவோடு நான் என் வாழ்நாளை கழிப்பேன்." ராஜேஷ் அவளை வற்புறுத்தவில்லை. கலாவின் அக்காவிற்கு தன் தோழனின் மூலமாக மறுமணம் செய்துவைத்தான். அவள் சந்தோஷமாக புது வாழ்க்கையை வாழத் தொடங்கினாள்.
ராஜேஷைப் போன்று நல்லவர்களும் இருக்கிறார்கள். கலாவின் சகோதரனைப் போன்று மானங்கெட்ட சுயநலவாதிகளும் இருக்கிறார்கள். கலாவைப் போன்று நிறைய பெண்மணிகளும் இருக்கிறார்கள்!