

பெண்களை அழகானவர்கள், மென்மையானவர்கள், தியாகிகள், அன்பே வடிவானவர்கள் என்றுதான் இந்தச் சமூகம் பொதுவாக மதிப்பீடு செய்து வைத்திருக்கிறது. அதே சமயத்தில், ஒரு பெண்ணின் புத்தி கூர்மையையும் அறிவுத்திறனையும் தீர்மானிக்க, அவள் படித்து வாங்கிய பட்டங்கள், வகிக்கும் கார்ப்பரேட் பதவிகள் மற்றும் ஈட்டும் மாதச் சம்பளம் ஆகியவற்றையே இந்தச் சமூகம் அளவுகோல்களாக வகுத்துள்ளது.
ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்கள் தங்களின் அசாத்தியமான அறிவுத்திறனை எவ்வித ஆரவாரமும் இன்றி, சமையலறையில் அமைதியாக நிகழ்த்திக் காட்டி வருகிறார்கள். சமையலறை என்பது வெறும் பசியாறும் கூடம் மட்டுமல்ல; அது மேலாண்மை, அறிவியல், பொருளாதாரம், கணிதம், நுட்பமான கவனிப்புத் திறன் எனப் பெண்களின் பன்முகத் திறமைகளும் வெளிப்படும் ஒரு உன்னதமான இடமாகும். அத்தனை துறைகளின் பேரறிவையும் தன் அஞ்சறைப் பெட்டிக்குள்(tamil-women-kitchen-intelligence) அடக்கி வைத்திருக்கும் ஒரு சாதனைப் பல்கலைக்கழகமே நம் வீட்டுச் சமையலறை!
நமது முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பாட்டிமார்களில் பெரும்பாலோர் பள்ளிப் பக்கமே ஒதுங்கியது கிடையாது. ஆனால், அவர்கள் சமையலறையில் அமர்ந்துகொண்டு காட்டிய வித்தைகள், இன்றையப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களையே வியக்க வைப்பவை.
கைக்குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் எந்தக் கடையில் என்ன மாத்திரை வாங்க வேண்டும் என்று அவர்கள் யோசித்ததில்லை; சமையலறை அஞ்சறைப் பெட்டியிலிருக்கும் மிளகு, சீரகம், சுக்கு, திப்பிலியை மருந்தாக மாற்றிவிடுவார்கள். எந்த உணவோடு எதைச் சேர்க்க வேண்டும், எதைச் சேர்க்கக் கூடாது என்ற அவர்களின் பாரம்பரிய உணவு அறிவியல், எந்தப் புத்தகத்திலும் எழுதப்படாத பேரறிவு. முறையான கல்வி கற்காவிட்டாலும், 'உணவே மருந்து' என்ற தத்துவத்தை உலகிற்குப் போதித்த ஆகச்சிறந்த பேராசிரியர்கள் நம் பாட்டிமார்கள்தான்.
இன்றைய நவீனப் பெண்களோ அடுக்களையையும், அலுவலகத்தையும் சேர்த்தே ஆளுகிறார்கள். அலுவலகக் கோப்புகளைத் திறமையாகக் கையாண்டு, கணினித் திரையில் 'புராஜெக்ட்'களை வெற்றிகரமாக முடிக்கும் அதே கைகள், சமையல் கட்டில் சுவையான உணவையும் சமைத்துப் போடுகின்றன. அலுவலக அழுத்தத்தையும் (Tension), சமையலறைப் பொறுப்புகளையும் சமமாகப் பாவித்து, இரண்டிலும் தங்களின் திறமையை நிரூபிக்கும் இன்றைய பெண்களின் புத்திசாலித்தனம் அசாத்தியமானது.
ஒரு குறிப்பிட்ட உணவைத் தயாரிப்பதற்கு இத்தனை பேருக்கு இவ்வளவு மாவு தேவை, இத்தனை சிட்டிகை உப்பு, காரம், மசாலா சேர்க்க வேண்டும் என்பதை எவ்விதக் குறிப்பேடும் இன்றி, தங்களின் விரல் நுனி அளவிலேயே பெண்கள் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள். அடுப்பின் சுடரைக் கூட்டுவது, குக்கரின் விசில்களைக் கணக்கிடுவது போன்ற அன்றாடச் செயல்கள் யாவும் வெப்பம் மற்றும் அழுத்தத்தின் துல்லியமான இயற்பியல் விதிகளாகும்.
ஒரு அடுப்பில் சாதமும், மறு அடுப்பில் பருப்பும் வெந்து கொண்டிருக்கும் போதே, மறுபுறம் காய்கறிகளை நறுக்கிக் கொண்டு, அதே நேரத்தில் குழந்தையையும் கவனித்துக் கொள்வார்கள். எவ்விதப் பதற்றமும் இன்றி அனைத்தையும் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் செய்து முடிப்பார்கள். ஒரே நேரத்தில் பலவித உணவுகளைச் சமைத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்கள் விரும்பும் நேரத்தில் சூடாகப் பரிமாறுவது என்பது, ஒரு பெரும் நிறுவனத்தை வழிநடத்தும் மேலாண்மைத் திறனுக்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்ல.
சமையலறை என்பது வெறும் வயிற்றை நிரப்பும் இடமாக மட்டும் இருப்பதில்லை; அது குடும்பத்தின் உணர்வுகளைப் பக்குவப்படுத்தும் இடமாகவும் திகழ்கிறது. குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் விருப்பங்கள் என்ன, யாருடைய மனநிலை இன்று எப்படி இருக்கிறது, யாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களின் முகத்தைப் பார்த்தே பெண்கள் கண்டறிந்து விடுகிறார்கள். குடும்ப பட்ஜெட்டுக்குள் அடங்கும் சத்தான உணவை வழங்குவதில் அவர்களின் சிக்கனமும் பேரறிவும் பளிச்சிடுகிறது.
நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவின் பின்னாலும் பெண்களின் உழைப்பும் தியாகமும் கலந்திருக்கிறது. அவர்களின் ஆளுமையும், பொறுமையும், நுண்ணறிவும் எந்தப் பள்ளியும் கற்றுத் தந்துவிட முடியாது; அது அர்ப்பணிப்பாலும், பேரன்பாலும் மட்டுமே சாத்தியம். சாதாரண வீட்டை சொர்க்கமாக மாற்றும் தாய், மனைவி, சகோதரி மற்றும் மகள்களுக்கு மனமார்ந்த நன்றியைச் சமர்ப்பிப்போம்!