

வெளிநாட்டில் வசிக்கும் பெண்-மாப்பிள்ளை வீட்டிற்கு சங்கரன்கோவிலில் இருந்து வந்திருந்த கோமதியிடம், "அம்மா, உங்க பேத்தி இஷா கிட்டவோ, அவ முன்னாடியோ, நம்ப மொழில பேசாதீங்கன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். போதாக்குறைக்கு அடிக்கடி 'ராம் - ராம்' ஜபம் வேற! நாளைக்கு International School ல முதல் வகுப்பில் சேர்க்க அவளுக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு. அவ அங்க போய் இப்படி ஏதாவது சொன்னா என்ன ஆகும்? மானமே போய்டும். நன்கொடைகள் கொடுத்தால் கூட அங்க சீட் கிடைக்காது. அந்தஸ்தும் வர்க்கமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன" என்று அனிதா எரிச்சலுடன் கூறினாள்.
65 வயதுக்கு மேல், ஊரிலிருந்து வந்திருந்த கோமதி, தன் மகளின் கடிந்துரைகளைக் கேட்டதும் மௌனமாகிப் போனாள். அனிதா வெளிநாட்டுப் பையனை காதல் திருமணம் செய்து கொண்டு விட்டாள். மாப்பிள்ளை பெரிய பிஸினஸ்மேன்.
அவனுக்கு ஆங்கிலம், ஜெர்மன் மொழிகள் மட்டுமே தெரியும். முன்பெல்லாம் 'ராம்! ராம்!' என்று கூறும் அனிதாவே, இப்போது ஆங்கிலத்தில் 'உஷ்! உஷ்!' என பேசுகிறாள்! கோமதிக்கும் ஆங்கிலம், இந்தி எல்லாம் தெரியும். ஆனால் காட்டிக் கொள்வதில்லை.
ஊரிலிருந்து கொண்டு வந்த முறுக்கு, சீடை, லட்டு போன்றவைகளை பேத்திக்கு ஊட்டிவிட்டு, மனதார வாழ்த்த வேண்டும் என்று அவள் விரும்பினாள். ஆனால், அவளது தாய்மைப் பாசத்தை, தன் மகளின் அந்தஸ்து எனும் உணர்வே மேலோங்கி ஆட் கொண்டுவிட்டது.
அனிதாவும் அவள் கணவன் ரிச்சர்டும், கடந்த ஒரு மாத காலமாகத் தங்கள் ஐந்து வயது மகள் இஷாவை ஒரு கிளிப்பிள்ளையைப் போலப் பேசப் பழக்கி வந்தனர். "ஹலோ! குட் மார்னிங்! மை நேம் இஸ் இஷா!" என்றெல்லாம் அவளுக்கு ஆங்கிலத்தில் கற்றுக் கொடுத்து வந்தனர். இஷாக்கு கற்பூர புத்தி. நன்கு பேசுவாள்.
வீட்டின் சூழலே ஒரு ராணுவப் பயிற்சி முகாமைப் போல மாறியிருந்தது. இஷாவின் இண்டர்வியூ முடியும் வரை, அவளிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் என்று கோமதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஏனெனில், அம்மாவின் பேச்சு இஷாவின் வர்க்கத் தரத்தை பாதித்துவிடக்கூடாது என்பதில் அனிதா உறுதியாக இருந்தாள். இருந்தாலும், அனிதா வெளியில் போயிருக்கையில், கோமதி பாட்டியும், இஷா பேத்தியும் நிறைய கதை பேசுவதுண்டு.
மறுநாள் காலையில், ரிச்சர்டும், அனிதாவும், இஷாவுடன் பள்ளிக்குச் சென்றனர். நகரத்திலேயே மிகவும் மதிப்புமிக்க பள்ளியாகிய அங்கே வசதி படைத்த மாணவர்களின் பெற்றோர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். உஷ்! குஷ்! என ஆங்கில மய பேச்சுகள்.
ரிச்சர்டும் அனிதாவும் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டனர். சற்று நேரத்தில், நேர்காணலுக்கான அவர்களின் முறை வந்தது.
அப்பள்ளியின் முதல்வரான திருமதி ஃபெர்ணான்டஸ், தனது கண்டிப்பான சுபாவத்திற்குப் பெயர் பெற்றவர். அவர் இஷாவிடம் ஆங்கிலத்தில் பெயர்களையும், பல்வேறு நிறங்களின் பெயர்களையும் கேட்டார். இஷா, தான் மனப்பாடம் செய்து வைத்திருந்த பதில்களைச் சரியாகக் கூறினாள்.
அனிதா மற்றும் ரிச்சர்ட் முகங்களில் புன்னகை தவழ்ந்தது. அனைத்தும் அவர்கள் திட்டமிட்டபடியே நடந்துகொண்டிருந்தன.
அந்த நேரத்தில், திருமதி ஃபெர்ணான்டஸ், தன் கையில் இருந்த பேனாவை கீழே வைத்துவிட்டு, இஷாவின் கண்களை நேராக உற்று நோக்கி, "இஷா! வீட்டிற்கு வரும் பெரியவர்களை சந்திக்கும்போது, முதலில் என்ன செய்வாய்?" என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
அனிதாவின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. இந்த விஷயத்தை அவள் தன் மகளுக்கு கற்றுக்கொடுக்கவே இல்லை. 'வெறும் ஹாய்! ஹலோ!' சொல்ல மட்டுமே அவளுக்கு பழக்கியிருந்தாள்.
இஷா மௌனமாக இருந்தாள். உடனே அனிதா, "குட் மார்னிங்" சொல்லுமாறு இஷாவிற்கு சைகை காட்டினாள்.
ஆனால், இஷாவோ அவ்வாறு செய்யாமல், தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து கீழே இறங்கி, மெதுவாக நடந்து முதல்வர் திருமதி ஃபெர்ணான்டஸ் பக்கம் சென்று, அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினாள்.
பின்னர், கைகூப்பியவாறு, வெகுளித்தனத்துடன், "வணக்கம்! ராம்-ராம்!" என்றாள்.
அறையில் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவியது. தன் மகளின் அட்மிஷன் நிராகரிக்கப்படுவது உறுதி என்று அனிதாவுக்குத் தோன்றிவிட்டது. ரிச்சர்ட் அனிதாவைப் பார்த்து முறைத்தான்.
தன் தாயின் மீது அவளுக்கு கோபம் எழத் தொடங்கியது. இவற்றையெல்லாம் அம்மா தான் மறைமுகமாக இஷாவுக்கு கற்றுக்கொடுத்திருக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால், எதிர்பாராத ஒன்று அங்கே நிகழ்ந்தது.
அதுவரை மிகவும் தீவிரமான முகபாவனையுடன் இருந்த திருமதி ஃபெர்ணான்டஸ், திடீரென சிரிக்கத் தொடங்கினார். அவர் இஷாவை அள்ளி எடுத்துத் தன் மடியில் அமர்த்திக்கொண்டார்.
"அனிதா மேடம்! இன்று காலை முதல், நான் ஐம்பது மாணவர்களை இண்டர்வியூ செய்திருக்கிறேன். அனைவருமே இயந்திரங்களைப் போல 'ஹாய்! ஹலோ! குட் மார்னிங்!' என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உங்கள் மகள் செய்த செயல், கலாச்சாரத்தின் ஒரு அங்கம். இவை புத்தகங்களில் கிடைப்பதில்லை. இந்தியா சென்றிருந்தபோது இவற்றை அறிந்து கொண்டவள் நான்."
அனிதா திகைத்துப்போனாள். திருமதி பெர்ணான்டஸ் தொடர்ந்து பேசினார். "இன்றைய படித்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை முழுமையாக ஆங்கிலேயர்களாக மாற்றும் எண்ணத்தில், தங்கள் சொந்த வேர்களை தாங்களே வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு குழந்தை பள்ளியில் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளும். ஆனால் பெரியோர்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவது, 'ராம்-ராம்' என்று கூறுவது, தன் தாய்மொழியில் பெருமை கொள்வது, இவையெல்லாம் வீட்டில்தான் கற்றுக்கொள்ளப்படுகின்றன. இவையனைத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது யார்?"
உடனே இஷா, "மை கிராண்ட்மா ஆல்வேஸ் டெல் Give respect," என்றாள்.
முதல்வர் அனிதாவை பார்த்தார்: "தயவுசெய்து என் வணக்கங்களையும் பாராட்டுக்களையும் உங்கள் தாயாரிடம் தெரிவித்து விடுங்கள். உங்கள் பெண் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம், அவளிடம் இருக்கும் இந்த தனித்துவமான அடையாளம்தான். மொழி என்பது தகவல் தொடர்பிற்கான ஒரு கருவி மட்டுமே. அது அவமானப்பட வேண்டிய ஒரு விஷயம் அல்ல."
வீட்டிற்குத் திரும்பும் வழியில், காரினுள் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவியது. அனிதா, தான் முன்பு பேசிய வார்த்தைகளை நினைத்துப் பார்த்தாள். மானமே போய்விடும். இது பண்பில்லை என்றெல்லாம் அம்மாவிடம், அவள் கூறியிருந்தாள். ஆனால் இன்று, அதே பண்புகள்தான், அந்த உயர்தரப் பள்ளியில் இஷாக்கு மரியாதையைப் பெற்றுத் தந்திருந்தன.
வீட்டிற்கு வந்ததும், அனிதா நேராகத் தன் தாயிடம் சென்றாள். கோமதி பால்கனியில் வைக்கப்பட்டிருந்த துளசிச் செடியின் அருகே அமர்ந்திருந்தார். ஒரு வார்த்தைகூடப் பேசாமல், அனிதாவும், ரிச்சர்டும் கோமதியின் பாதங்களில் தங்கள் தலையை வைத்து வணங்கினர். இஷா பாட்டியை அன்புடன் கட்டிக்கொண்டாள்.
ஒரு மரம் எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும், அதன் வேர்கள் அறுபட்டால் அது காய்ந்துபோய்விடும். வெளிநாட்டு உடைகளையும் ஆங்கிலத்தையும் கொண்டு யார் வேண்டுமானாலும் நவீனமானவனாக மாறலாம். ஆனால், தன் விழுமியங்களின் மூலமாக மட்டுமே, ஒருவன் உண்மையான மனிதனாக மாறுகிறான்.