மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் பிரம்மாக்கள் ஆசிரியர்களே!

September 5 Teacher's day
ஆசிரியர்
Published on
mangayar malar strip

இந்தியாவில், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி 'ஆசிரியர் தினம்' கொண்டாடப்படுகிறது.

அவர் ஒரு புகழ்பெற்ற அறிஞர், பாரத ரத்னா விருது பெற்றவர். மேலும் இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி மற்றும் இரண்டாவது ஜனாதிபதி ஆவார். செப்டம்பர் 5, 1888 அன்று டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தார். அவர் ஒரு கல்வியாளராகவும், சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு பெரிய பின்னணி இருக்கிறது. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சில நண்பர்களும், மாணவர்களும் அவரை அணுகி, அவரது பிறந்தநாளைக் கொண்டாட அனுமதிக்குமாறு கேட்டபோது, அவர், 'என்னுடைய பிறந்தநாளைத் தனியாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக, செப்டம்பர் 5 ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனக்குப் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்’ என்று கூறினார். அன்றிலிருந்து அதாவது 1967 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 முதல், இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது.

ஏன், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுமாறு வற்புறுத்தினார் என்று யோசித்து பார்த்தால் உண்மை நமக்கு தெள்ள தெளிவாக புரியும்.

ஆசிரியர் என்றால் என்ன? ஆசிரியர்களின் முக்கியத்துவம் என்ன? எல்லாவற்றையும் பற்றி பார்க்கலாமா?

மாணவர்களின் பல்வேறு பருவ நிலைகளில், அதாவது குழந்தைப் பருவக் கல்வி முதல் உயர்கல்வி வரை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களைக் காணலாம். ஆசிரியர்கள் இல்லாத இடமுமில்லை, துறையுமில்லை, கல்வித் துறை மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறை, கலைத் துறை என பல்வேறு துறைகளிலும் ஆசிரியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள் குறிப்பிட்ட பாடங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவோ அல்லது பல்வேறு பாடங்களை கற்பிப்பவர்களாகவோ இருக்கலாம். வகுப்பறைக் கல்வியில் ஆசிரியர்கள் பெரும்பாலும் மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் மற்றும் மேம்பாட்டின் வழிகாட்டிகளாகவும் பணியாற்றுகிறார்கள்.

ஆசிரியர் என்றால் ஆசு + இரியர். 'ஆசு' என்றால் மாசு, குற்றம் என பொருள்படும். 'இரியர்' என்றால் நீக்குபவர், அதாவது ஆசிரியர் என்றால் மாணவர்களிடமிருக்கும் மாசையும் குற்றத்தையும் அகற்றி கல்வியை போதிப்பவர் என்று பொருள். ஒரு ஆசிரியர் என்றால் மாணவர்களுக்கு அறிவையும் கல்வியையும் எளிய வார்த்தைகளில் வழங்கி அவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்பவர் என்று கூட சொல்லலாம்.

ஆசிரியர்களின் முக்கியமான பங்கு என்னவென்றால், மாணவர்களை நல்வழி படுத்தி வடிவமைப்பதாகும். ஒரு மாணவனின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு என்னென்ன என்பதை பார்க்கலாமா?

மாணவர்களை ஊக்குவித்தல்

மாணவர்களை சரியான பாதையில் வழி நடத்துவது ஆசிரியர்களின் மிக முக்கியமான பங்காக கருதப்படுகிறது. ஆசிரியர்களால் மட்டுமே மாணவர்களை கல்வியைத் தவிர வேறு சில செயல்பாடுகளில் பங்கேற்பதற்கான ஊக்கத்தை அளிக்க முடியும். அவர்களால் மட்டுமே ஒரு மாணவனின் சிறந்த திறன்களை அறிந்து கொண்டு அதற்கான வழியை வகுக்க முடியும். இதன் மூலமாக மாணவர்கள் தங்கள் சிறந்த திறன்களை வெளிப்படுத்த முடியும்.

முன்மாதிரியாக இருத்தல்

ஒரு ஆசிரியர் தான் ஒரு மாணவரின் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரியாகச் செயல்படுகிறார் என்று நாம் அடித்து சொல்லலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உகந்த மற்றும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறார்கள். ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான தொடர்பு விலைமதிப்பற்றது, அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

மாணவர்களை எப்போது ஊக்குவிக்க வேண்டும், எப்படி அவர்களை சிறந்தவர்களாக மாற்ற‌ வேண்டும் என்பதை ஒரு ஆசிரியர் தான் அறிவார். ஆசிரியர் என்பதற்கான அர்த்தம் மாணவர்கள் மீது தேவையான அக்கறையை காட்டி, அவர்களை நேர்மறையாக சிந்திக்க வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அமைக்கும் வகையில் ஒரு முன்மாதிரியாக இருப்பவர்.

ஒரு மாணவரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருபவர்

மாணவர்களுக்கு ஒரு ஆதரவு அமைப்பாக இருப்பது, ஆசிரியர் பணியின் ஒரு முக்கிய பகுதியாகும். மாணவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் திறன் ஒரு ஆசிரியருக்கு தான் உண்டு. அவர்கள் மாணவர்களை தங்கள் வரம்புகளை விரிவுபடுத்தவும், அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் தூண்டுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த 5 பானங்கள் போதும்... கிட்னி பிரச்னைகள் இனி இல்லை!
September 5 Teacher's day

கற்றலை வேடிக்கையான முறையில் கற்பித்தல்

ஆசிரியர்கள் கற்றலை மிகவும் வேடிக்கையாகவும், மாணவர்களுக்குப் புரியும் வகையில் எளிதாக மாற்றவும் உதவுகிறார்கள். புதிய மற்றும் வித்தியாசமான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமாக இதை செயல்படுத்துகிறார்கள். இந்த முறையானது மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், கருத்துக்களை விரைவாகக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.

ஆசிரியர் யார் என்பது ஒரு மிகப் பெரிய பரந்த கருத்தாகும். ஒரு ஆசிரியர் எந்தெந்த முறையில் எப்படி தன் பங்கை அளிக்கிறார்கள் என்பதை நாம் எல்லோருமே அறிவோம். இருப்பினும், ஒரு ஆசிரியரின் கடமைகள் முறையான கற்பித்தலுக்கு அப்பால் நீட்டிக்கப்படலாம்.

ஆசிரியர்கள் மாணவர்களை அவர்களின் வகுப்பறை சூழலில் இருந்து சில வெளிப்புற நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கான கல்விப் பயணங்களில் இணைந்து கொண்டு அவர்களுடைய படிப்பை மேற்பார்வையிடலாம்.

இதையும் படியுங்கள்:
சிராவண தீபம் ஏற்றி ஓணம் பண்டிகை கொண்டாடும் ஒப்பிலியப்பன் ஆலயம்!
September 5 Teacher's day

பள்ளிகளுக்கான செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதிலும் அவர்கள் உதவுவதைக் காணலாம். ஆசிரியர்கள் எதிர்கால தலைமுறையினருடன் முடிந்த வரை மிகச் சிறப்பான முறையில் கையாளுகிறார்கள். மாணவர்களிடம் அதிக திறன்கள் இருந்தால், ஆசிரியர்களின் உழைப்பிற்கான விளைவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com