
திருநாகேஸ்வரத்திற்கு தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அருள்மிகு உப்பிலியப்பன் திருக்கோயில். ஒரு சமயம் பூமா தேவி, ‘திருமகளை மட்டும் தங்கள் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்’ என்று மகாவிஷ்ணுவிடம் கேட்டாள்.
அதற்கு மகாவிஷ்ணு, ‘நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்தப் பேற்றைப் பெறுவாய்’ என்று கூறி அருளினார் பகவான். இந்த சமயத்தில் என்றும் பதினாறு வயதுடைய மார்கண்டேய மகரிஷி மகாலட்சுமி தாயாரே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். மகாலட்சுமியின் அம்சமான பூமா தேவி குழந்தை வடிவில் ஒரு துளசி செடிக்குக் கீழே கிடப்பதைக் கண்டார். தனது ஞானதிருஷ்டியால் அந்தக் குழந்தை சாட்சாத் மகாலட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, அதற்கு ‘துளசி’ என பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.
துளசிக்கு திருமண வயது வந்தபோது திருமால் ஒரு முதியவர் வேடத்தில் சென்று மகரிஷியிடம் பெண் கேட்டார். அதற்கு மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், ‘சிறிய பெண்ணான எனது மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக் கூட சமைக்கத் தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது’ என்று ஒதுங்கிக் கொண்டார்.
திருமாலோ, விடுவதாக இல்லை. ‘உப்பில்லாத சமையலாக இருந்தாலும் கூட நான் சாப்பிட்டுக் கொள்கிறேன்’ என்று வற்புறுத்தினார். தனது தவ வலிமையால் வந்திருப்பது அந்தத் திருமால்தான் என்பதை உணர்ந்த மார்கண்டேயர், தனது மகளை அவருக்கே மணம் முடித்துக் கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக் கொண்டதால், அவருக்கு ‘உப்பிலியப்பன்’ என்றும், ஒப்பில்லாத பெருமை உடையவர் என்பதால் ‘ஒப்பிலியப்பன்’ என்றும் திருநாமம் பெற்று அந்தத் திருத்தலத்தில் துளசியுடன் எழுந்தருளினார் பகவான். துளசி தேவி அவரது மார்பில் துளசி மாலையாக மாறி நிரந்தரமாகத் தங்கினாள். இதனால்தான் எல்லா பெருமாள் கோயில்களிலும் பெருமாளுக்கு துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.
பெருமாள், மார்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இந்தத் தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில் திருமால் சன்னிதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு அகண்ட தீபமும் வால் தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்த தீபத்தில் மகாலட்சுமி எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் பார்த்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாகும். ஆவணி திருவோணத்தன்று காலையில் பெருமாள் கருட வாகனத்தில் உதய கருட சேவையில் அருள்புரிகிறார். அதன் பின், ‘தட்சிண கங்கை’ எனும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுகிறார். அதன் பின்பு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
இங்கு சுவாமிக்குக் காட்டிய தீபத்தின் முன்னால் அருள்வாக்கு சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆவணி திருவோணத்தில் சிராவண தீபம் ஏற்றி உப்பிலியப்பனை வழிபடுகிறார்கள். ஒருபோதும் தனது மகளை விட்டுப் பிரியக் கூடாது என்று மார்கண்டேய மகரிஷி திருமலை கேட்டுக் கொண்டதால், பெருமாள் பிராட்டியை பிரியாமல் இருப்பார். அவருடன் இணைந்து பவனி வருவது இன்றும் நடைபெறுகிறது.
வருடத்தில் ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே மனைவியை பிரிவார் ஸ்ரீ ஒப்பிலியப்பன். நவராத்திரி உத்ஸவத்தில் அம்பு போடும் வைபவத்தின்போது மட்டும் சுமார் ஒரு மணி நேரம் பெருமாள் தனியே செல்கிறார். அப்போது பூமா தேவி தாயார் யாருக்கும் தரிசனம் தராததால் மூலஸ்தானத்தில் தாயார் சிலையை திரையிட்டு மறைப்பார்கள். ஆவணி திருவோணம் திருநாளில் நாமும் திருமாலை வழிபட்டு திருவருள் பெற்று மகிழ்வோம்.