நம் உடலின் ஆரோக்கியத்திற்காக செயல் புரியும் முக்கிய உள்ளுறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். இது இரத்தத்திலிருந்து அசுத்தங்களையும், அதிகப்படியான நீரையும் பிரித்தெடுத்து உடலிலிருந்து சிறுநீராக வெளியேற்றவும், உடலுக்குத் தேவையான உப்பு மற்றும் கனிமச் சத்துக்களை உடலுக்குள் சமநிலைப்படுத்தி வைக்கவும் உதவுகிறது. சிறுநீரகங்களை ஆரோக்கியமாகவும் நீரேற்றத்துடனும் வைத்துப் பாதுகாப்பது அவசியம். நாம் போதுமான அளவு நீர் அருந்துவதுடன் இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் 5 வகையான பானங்களையும் அவ்வப்போது அளவோடு அருந்தி வருவதும் கிட்னி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
1. லெமன் வாட்டர்:
இது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் பானம் மட்டும் அல்ல. இதிலுள்ள சிட்ரிக் ஆசிட், கால்சியம் மற்ற மினரல்களுடன் ஒன்றிணைந்து சிறுநீரில் கற்கள் உற்பத்தி பண்ணும் செயலில் ஈடுபடுவதை தடுக்க உதவுகிறது. ஃபிரஷ் லெமன் அல்லது லைம் ஸ்லைஸ்களை நீங்கள் குடிக்கும் நீரில் போட்டு வைத்து அந்த நீரை குடிப்பது நல்ல பலன் தரும்.
2. மூலிகை மற்றும் க்ரீன் டீ: கெமோமைல், பெப்பர்மின்ட், இஞ்சி மற்றும் செம்பருத்தி போன்ற மூலிகைப் பொருட்கள் உபயோகித்து டீ போட்டு குடிப்பது நல்ல நீரேற்றம் தரும். மேலும் அவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சிறிய அளவில் டையூரெட்டிக் குணம் கொண்டு, சிறுநீரில் உள்ள கழிவுகள் வெளியேறவும் உதவி புரிகின்றன. க்ரீன் டீயில் உள்ள EGCG போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிறுநீரில் கற்கள் உற்பத்தியாவதைத் தடுக்கவும், சிறு நீரகங்களின் மொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவி புரிகின்றன.
3. ஆல்மண்ட், ஓட்ஸ் மற்றும் தேங்காயிலிருந்து பெறப்படும் தாவர வகைப் பால்: விலங்குகளிடமிருந்து பெறப்படும் பால் பொருட்களை தவிர்க்க விரும்புபவர்கள், இனிப்பு மற்றும் சுவையூட்டி சேர்க்கப்படாத ஆல்மண்ட், ஓட்ஸ் மற்றும் தேங்காயிலிருந்து பெறப்படும் தாவர வகைப் பால் அருந்தலாம். இதனால் அவர்களுக்கு நீரேற்றம் மற்றும் பல ஊட்டச் சத்துக்கள் கிடைக்கவும் வழி வகுக்கும்.
4. ஸ்மூத்தி வகைகள்: குறைந்த அளவு சர்க்கரை மற்றும் பொட்டாசியம் அடங்கிய ப்ளூ பெரி, பைன் ஆப்பிள், ஆப்பிள், ஸ்ட்ரா பெரி, கேரட் போன்றவற்றைப் பயன்படுத்தி, இனிப்பு மற்றும் சுவையூட்டிகள் சேர்க்காமல் ஸ்மூத்தி செய்து குடிப்பது நீரேற்றத்துடன் பல ஊட்டச் சத்துக்கள் கிடைக்கவும் உதவி புரியும். வாழைப்பழம் மற்றும் அதிகளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட யோகர்டு பயன்படுத்தி ஸ்மூத்தி செய்வது தவிர்க்கப்பட வேண்டியது.
5. இளநீர்:
இளநீர் இயற்கை முறையில் நீரேற்றமும் எலக்ட்ரோலைட்களும் தரக் கூடியது. கிட்னி பிரச்சினை ஏதும் இல்லாதவர்கள் இளநீரை சர்க்கரை சேர்க்காமல், அளவோடு அருந்துவதில் தவறேதுமில்லை. குறைந்த அளவு பொட்டாசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்பே இளநீர் குடிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
மேலே கூறப்பட்ட பானங்களை எப்பொழுதும் அளவோடு எடுத்துக்கொண்டு கிட்னியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)