முதல் 3 மாதங்கள் 'கண் போல' கருவை காக்க... இதை மட்டும் செஞ்சா போதும்!

மாதவிடாய் தள்ளிப் போய் வாந்தி குமட்டல் வந்தாலே பெண்கள் ஆஹா கரு உண்டாகி விட்டது எனப் பிறக்கப்போகும் குழந்தை மீதான கனவுகளை சுமப்பார்கள்.
pregnant woman
pregnant woman
Published on

தாய்மை என்பது பெண்களுக்கு இறைவன் கொடுத்த வரம். ஒரு பெண் திருமணமானதும் எதிர்பார்ப்பது எப்போது தாயாக ஒரு குழந்தையைக் கொஞ்சப் போகிறோம் என்பதுதான்.

மாதவிடாய் தள்ளிப் போய் வாந்தி குமட்டல் வந்தாலே ஆஹா கரு உண்டாகி விட்டது எனப் பிறக்கப்போகும் குழந்தை மீதான கனவுகளை சுமப்பார்கள். ஆனால் பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அல்லவா?

அந்தக் காலம் போல் அல்ல இப்போது. அன்று பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்லாத நிலையில் தாய்மையை கொண்டாடி தீர்த்தார்கள். ஆனால் இன்று அப்படி அல்ல கருவை வயிற்றில் சுமந்தாலும் பணிக்குச் சென்று பொருளாதாரத்தை ஈட்ட வேண்டிய பொறுப்பிலே இன்று பல பெண்கள் உள்ளனர்.

அதேபோல் அன்று இருந்த உழைப்பும் நல்ல உணவு முறையும் வாழ்க்கை முறையும் இன்று இல்லாத காரணத்தினால் ஒரு குழந்தை பிறப்பு என்பது பெரும் சவாலாகவே உள்ளது அதிலும் குழந்தை உருவான அந்த மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான காலகட்டம் என்பதால் ஆரோக்கியமான குழந்தை பெற உதவும் சில விபரங்களை இங்கு காண்போம்.

இதையும் படியுங்கள்:
கர்ப்ப கால தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!
pregnant woman

இந்த மூன்று மாதங்களின் முற்பகுதியில் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதால் சோர்வு அதிகரிக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மார்பகங்கள் மென்மையாகவோ, வீக்கமாகவோ இருப்பது போல் உணரலாம். வளர்ந்து வரும் கருப்பை சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம், இதனால் சிறுநீர் கழித்தல் அதிகரிக்கும். மேலும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும்.

இந்த மாற்றங்களை மனதார ஏற்றுக்கொண்டு கருவிலேயே குழந்தையை பராமரிக்கும் பணியை துவங்கி விட வேண்டும். குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களும் கருவை கண் போல கவனமாக காக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் கரு தாயின் கருப்பை சுவரை பிளசென்டா (placenta) மூலம் கவ்விக் கொண்டு தன் வளர்ச்சியைத் துவங்குகிறது.

எனவே அந்நேரத்தில் கர்ப்பிணி அதிக அலைச்சல் தரும் நெடுந்தூர பயணம், கடினமான வேலைகள் போன்றவற்றை முதல் மூன்று மாதங்களில் தவிர்ப்பது மிக அவசியம். முதல் மூன்று மாதங்களில் சாப்பிடும் உணவுகள் தாய்க்கு இயல்பாக வரும் மசக்கையை குறைப்பதோடு கருவையும் காப்பதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் தேவை.

சிலருக்கு மண், சாம்பல் சாப்பிட கூட ஆசை உண்டாகும். இதை சாப்பிடுவதால் வயிற்று கோளாறு, ரத்தசோகை உண்டாகும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற உடலுக்கு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தற்போது வரும் திருநீறு போன்றவற்றில் கூட கலப்படம் இருப்பது அறிவோம்.

ஆனால் புளியங்காய் மற்றும் புளிப்பான பொருள் போன்றவற்றை விரும்புவோர் உடலுக்கு பாதிக்காத அளவில் மிதமாக எடுக்கலாம். மசக்கை வாந்தி அதிகமாகும் போது தாகமும் அதிகமாக இருக்கும் என்பதால் தாகம் தணிக்க கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் குளிர்பானங்களைத் தவிர்த்து எலுமிச்சை, நன்னாரி வேர் போன்ற மூலிகை பானங்கள் அருந்துவது சிறப்பு. குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை வெளியேற்றிவிடும் அபாயம் இருப்பதால் நிச்சயமாக இந்த நேரத்தில் அருந்துவது கூடாது.

மாதுளை ஜூஸ் அருந்தலாம். இதனால் மசக்கை குறைவதுடன் அதிலுள்ள இரும்பு சத்து உடலில் சேர்ந்து ரத்த சோகையை தடுக்கும். ஆல்பகோடா பழத்தை வாய் குமட்டல் அதிகமாகும்போது சுவைக்கலாம். தேன் கலந்த நெல்லிக்காய் சாறு, நெல்லிக்காய், நெல்லி வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவையும் மசக்கைக்கு நல்ல உணவுகள்.

பொதுவாக இந்த மாதங்களில் எளிதில் செரிக்க கூடிய பால் கஞ்சி, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, எலுமிச்சை ஊறுகாய் போன்றவை கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் மசக்கையை குறைக்க உதவியாகவும் இருக்கும். சீஸ் போன்ற கொழுப்பு உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
கர்ப்பிணி பெண்களே, உஷாரா இருங்க!
pregnant woman

முதல் மூன்று மாதங்களில் உகந்த எடையை பராமரிப்பது அவசியம். அத்துடன் மருத்துவ ஆலோசனை பெற்று , கால்சியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் டி, மெக்னீசியம், புரோபயாடிக்குகள், மீன் எண்ணெய் போன்ற தேவையான சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது, ஏனெனில் அவை தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தேவையான ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

முக்கியமாக கணவர் மற்றும் குடும்பத்தின் ஆதரவுடன் மாறும் மனநிலையை மகிழ்வுடன் சமநிலைப்படுத்துவது ஆரோக்கியமான குழந்தை பெற உதவும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com