
அறிவியல் முன்னேற்றம் பெருக பெருக பலவிதமான பாரம்பரிய பழக்கங்களும் பொருள்களும் நம்மிடமிருந்து மறைந்து வருகின்றன. வாழ்வின் அன்றாடத் தேவைகளுக்கு இயந்திரங்கள் வந்து விட்டன. அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்ற பழமையான பொருள்களை மியூசியத்தில் கூட காண முடியாத நிலைதான் இன்று. அப்படித் தொலைந்து போனவற்றுள் ஒன்றுதான் பாதாளக் கரண்டி எனப்படும் பாதாள சங்கிலி. தரையைத் தொடும் ஆழமான பகுதி பாதாளம் எனப்படுகிறது. இந்தக் கருவிக்கு சில பகுதிகளில் 'பாதாளக் கொலுசு' என்ற பெயரும் இருந்துள்ளது.
நீரின் அடியில் சிக்கும் பொருள்களை வெளியே எடுத்துத் தர உதவும் கருவிதான் இந்த பாதாள சங்கிலி. சுற்றிலும் கொக்கிகள் போன்ற அமைப்பைக் கொண்டு கனமான இரும்பினால் உருவாக்கப்பட்ட ஒரு கருவிதான் பாதாளக் கரண்டி. கிணறுகள் இருந்த சில வீடுகளில் இன்றும் இவைகள் பரண் மீது அடைக்கலமாகியிருக்கும்.(எங்கள் பாட்டி வீட்டிலும் இருக்கிறது)
25 வருடங்களுக்கு முன் அனைவருக்கும் நீர் ஆதாரமே கிணறு தான். போர்வெல் அதிகமாக வருவதற்கு முன் எல்லோர் கிணற்றிலும் பத்து அடி ஆழத்திலே தண்ணீர் கிடக்கும். கிணறு இல்லாத வீடுகளே இல்லை எனலாம். ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுவதற்கு முன்பு , வீட்டுக்கிணறு மற்றும் பொதுக் கிணறுகள் குடிநீர் மற்றும் அன்றாட நீர்த்தேவைக்கு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
பெரும்பாலும் பொதுக் கிணற்றில் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் தனி வாளி அதாவது இரும்பு பக்கெட் அல்லது வெண்கலக் குடம் பித்தளை வாளி போன்றவற்றில் கயிறுகளைக் கட்டி கிணற்றில் இறக்கி தண்ணீர் இரைப்பார்கள். நார்க்கயிறுகள் என்பதால் நீரில் நனைந்து கற்றுப் போவதால் சில நேரங்களில் கயிறு அறுந்து பக்கெட் கழன்று கிணற்றுக்குள் விழுந்து விடும்.
அப்போதெல்லாம் இந்தளவு பாத்திர பண்டங்கள் வசதி இல்லை என்பதால் கிணற்றில் விழுந்த பக்கெட்டை எப்படியேனும் எடுக்க முயல்வார்கள். அதிலும் ஒரு சிலர் மட்டுமே இந்த பாதாள சங்கிலியை வைத்திருப்பார்கள். அவர்களிடம் சென்று இரவலாக பெற்று, கிணற்றில் விழுந்த வாளியை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
ஆனால் பாதாள சங்கிலி வைத்திருப்பவர்கள் கேட்ட உடனே தூக்கிக் கொடுக்க மாட்டார்கள். எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை என்ற பதிலே வரும். பாதாள சங்கிலியை மட்டும் பொக்கிஷம் போல் பாதுகாப்பார்கள். அடுத்தவருக்கு அவ்வளவு சீக்கிரம் இரவல் தர மாட்டார்கள்.
எப்படியோ கெஞ்சி கெஞ்சி அதற்கு பதில் வேறொரு பொருளை ஈடாக தந்து விட்டு வாங்கி வந்து கிணற்றுக்குள் கயிறு கட்டி இறக்கி அடி ஆழத்தில் விட்டு அலசுவார்கள். சில சமயம் பக்கெட் தவிர எப்போதோ கிணற்றுக்குள் விழுந்து மறந்தே போன வெவ்வேறு பொருள்கள் கொக்கிகளில் மாட்டி வெளியே வரும்.
அன்று இதை பெரிய விஷயமாக பார்ப்பதற்கு சிறுவர்கள், பெண்கள் என பெரிய கூட்டமே கூடி விடும். பாதாளக் கரண்டியை உள்ளே விட்டு வெளியே வரும்போது என்ன பொருள் கிடைக்கிறது என்பதைப் பார்த்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில் அவ்வளவு ஆனந்தம் கொள்வர்.
காலப்போக்கில் கிணறுகளின் தேவை இல்லாமல் அவற்றை மூடியதில் இந்த பாதாள சங்கிலியும் புழக்கத்தில் இல்லாமல் போயிற்று. இது போன்ற சுவாரசியமான பழங்கால கருவிகள் தந்த தருணங்கள் இன்றளவும் பலரின் நினைவுகளில் மலரும் நினைவுகளாக புதைந்துள்ளன எனலாம்.