
தற்போது அதிக லைக்ஸ் பெறுகின்ற மோகத்தில், ஆண்கள் - பெண்கள் இருபாலருமே, ஆப்ஸ்கள் மூலம் தங்களுடைய வித-விதமான படங்கள் மற்றும் சொந்த விஷயங்களைப் பகிர்வது; வரும் லைக்ஸ்களைக் கண்டு பெருமைப்படுவது; ஆபத்தை வரவழைத்துக் கொள்வது -- விபரீதம் 1.
ஆப்ஸ் மோகத்தை பயன்படுத்தி, அழகான பெண்களின் படங்களைப் போட்டு, போலிக் கணக்குகள் ஆரம்பித்து, அதைப் பார்த்து ஜொள்ளு விடுபவர்களிடமிருந்து பணம் பறிப்பது - விபரீதம் 2.
மார்ஃபிங் வழியே இரண்டு பேர்களை அலங்கோலமாக இணைத்து மன உளைச்சலை ஏற்படுத்துவது, அதன் மூலம் அதிக லைக்ஸ் பெறுவது - விபரீதம் 3.
டேட்டிங் தளங்கள், ஃபோர்ன்சைட் போன்ற ஆப்ஸ்களில், வெளிநாட்டுப் பெண்களின் படங்களை உபயோகப் படுத்தி, லைக்ஸ் பெற்று ஜொள்ளுவிடும் பார்ட்டிகளுக்கு வலை விரித்து ஏமாற்றி பணம் பறிப்பது - விபரீதம் 4.
பயணிகள் கவனிக்கவும் படத்தில் வருவதுபோல, யார்? எவர்? என்று தெரியாமலேயே படம் பிடித்து இஷ்டத்துக்கு கற்பனை செய்து, அதிகமான லைக்ஸ் பெற, தாறுமாறாக அவர்களைப் பற்றி எழுதி முகநூலில் போடுவது - விபரீதம் 5.
லைக்ஸ் மோகத்தினால், விடலைப் பருவத்தினர் மட்டுமல்லாது, வயதானவர்களும் தடுமாறுகின்றனர்.
அன்றைய காலகட்டத்தில், இடுப்பு இடைவெளி கடுகளவு வெளியே தெரிந்தாலே, பெயர் கெட்டுவிடுமென எண்ணப்பட்டு, மூடிக் கொள்வார்கள். இப்போதோ லட்சக்கணக்கான மக்கள் முன்பு வெளிப்படையாக தன்னை சுயவிளம்பரம் செய்து கொள்ளுமிடமாக, அநேக சமூக வலைத்தளங்கள் செயல்படுகின்றன. பிரபலமாக வேண்டுமென்கிற நினைப்பில், எதை எதையெல்லாமோ ஆப்ஸ்களில் போட்டு, அதிக லைக்ஸ் பெறும் மோக மனப்பான்மை அநேக பேர்களிடம் வளர்ந்துள்ளது.
தன்னுடைய பதிவுகளுக்கு அதிக லைக்ஸ் போடும் நபர்களிடம், யார்? எவரெனத் தெரியாமல் Chat செய்ய ஆரம்பித்து, நட்பு வட்டத்தில் இணைத்துக்கொள்வது, சொந்த விபரங்களைப் பகிர்ந்துகொள்வது போன்றவைகள் விபரீதத்தில் தள்ளிவிடக் கூடியதாகும்.
காதலில் தோல்வி ஏற்பட்டால், உடனே அதை தனது புகைப்படத்துடன் "I am feeling lonely" என ஆப்ஸ்ஸில் பதிவு செய்யப் போக, சிலர் பக்க பலமாக இருப்பதுபோல லைக்ஸ் போட்டு, Chatting செய்து, சுலபமாக வலையில் வீழ்த்தி விடுகின்றனர்.
இது மட்டுமல்ல, இல்லற வாழ்க்கை மற்றும் குடும்பத்திற்குள் சிறு-சிறு பிரச்னைகள் ஏற்படுகையில், ஆறுதல் தேட, சமூக வலைத்தளம் காரணியாக இருந்து விபரீதத்தில் கொண்டுபோய் விடுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் சமூக வலைத்தளங்களின் மூலம், அனைத்து விஷயங்களையும் கூச்சமின்றி பகிர்வது அதிகரித்துவிட்டது.
"எதற்கும் ஒரு அளவு தேவை" என்று கூறுவது போல, இத்தகைய விபரீதங்கள் ஏற்படுவதைத் தடுக்க, ஆப்ஸ்களின் வழியே பகிர்வதில், அளவும் தேவை; விழிப்புணர்வும் தேவை.
சொந்தக் கதை, சோகக் கதைகளை "லைக்ஸ்" மோகத்திற்காக ஆப்ஸ்களின் வழியாக மட்டுமல்லாது, முன்பின் தெரியாதவர்கள், சில மாதங்களே பழகியவர்கள், துருவித்துருவி கேட்பவர்கள் போன்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டியவைகளாகும்.
அளவோடு ஆப்ஸ்ஸை பயன்படுத்தி, லைக்ஸ் மோகத்தை தவிர்ப்பது -- விபரீதத்தை தடுத்து, உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மையளிக்கும். சரிதானே!